பத்திரிக்கை வெளியீடு
பாதுகாப்பான பள்ளி மண்டலங்கள் - சென்னையில் நிலையான நீட்டிக்கத்தக்க இயக்கத்தை மேம்படுத்துதல் & பள்ளிகளுக்கான பாதுகாப்பான பாதைகளை உருவாக்குதல்
முதன்மை விருந்தினர்: போக்குவரத்து இணை ஆணையர் திரு.பண்டி கங்காதர், ஐ.பி.எஸ்.
உரையாளர்கள்: திரு.பாஸ்கரன், உதவி ஆணையர் திட்டமிடல் (போக்குவரத்து),
A.V.வேணுகோபால், திட்ட மேலாளர், ITDP
G.அனந்தகிருஷ்ணன், எழுத்தாளர் மற்றும் முன்னாள்
ஆசிரியர், தி இந்து
மருத்துவர். திவ்யலட்சுமி, உதவி பேராசிரியர்,
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி
உடனடி வெளியீட்டிற்காக 19 ஆகஸ்ட் 2025
சென்னை
வரலாற்று ரீதியாகவே, எளிதில் பாதிக்கக்கூடிய சாலை பயன்பாட்டாளர்களை தவிர்த்துவிட்டு, மோட்டார் வாகன போக்குவரத்துக்காக சாலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாலை பயன்பாட்டாளர்களில், குழந்தைகள், அவர்களது குறிப்பிட்ட அளவு உடல் மற்றும் அறிவாற்றல் திறன்களால் நமது சாலைகளில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய அதிக ஆபத்தில் உள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும், 45 குழந்தைகள் சாலை விபத்தினால் உயிரிழக்கின்றனர்.
பாதுகாப்பான பள்ளி மண்டலங்கள் - சென்னையில் நிலையான நீட்டிக்கத்தக்க இயக்கத்தை மேம்படுத்துதல் & பள்ளிகளுக்கான பாதுகாப்பான பாதைகளை உருவாக்குதல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் போக்குவரத்து இணை ஆணையர் திரு.பண்டி கங்காதர், ஐ.பி.எஸ்., அவர்கள் பாதிக்கக்கூடிய சாலை பயன்பாட்டாளர்களை பாதுகாப்பதற்கான அவசரத் தேவையை வலியுறுத்தி பேசினார். அவர் குறிப்பிட்டதாவது: “சென்னையில் இதுவரை 1,000 சாலை விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 35 சதவீதம், சுமார் 350 பேர், நடந்து செல்லும் பயணிகளே ஆவர்.” பள்ளி மாணவர்களை பொருத்தவரை நடந்து செல்வதே முதன்மை பயண முறையாக இருப்பதால், அவர்களின் பாதுகாப்பானது முன்னுரிமைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
குழந்தைகள் காற்று மாசுபாட்டினாலும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர், இது சாலைகளில் உள்ள மற்றுமொரு உயர் ஆபத்தாகும். நாட்டின் துகள் மாசுபாட்டில் மூன்றில் ஒரு பங்கு வாகன போக்குவரத்திலிருந்து வருகிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சென்னையில் ஒரு குழந்தை சராசரியாக பள்ளிக்கு செல்ல சில நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் செலவிடுகிறது. நீண்ட பயணமானது, இளம் நுரையீரல்கள் காற்று மாசுபாட்டுக்கு அதிகம் உட்படக்கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மருத்துவர்.திவ்யலட்சுமி அறிக்கை வெளியீட்டில் பேசுகையில், இந்த ஆபத்தின் அளவு குறித்து விளக்கினார்: “மாணவர்கள், பெரியவர்களை விட காற்று மாசினால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியவர்கள். ஏனெனில், அவர்களின் உடலானது இன்னும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது, மேலும் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியானது ஒப்பீட்டளவில் பலவீனமாக உள்ளது. இதனால் காற்று மாசின் தீய விளைவுகளுக்கு அவர்கள் எளிதில் ஆளாகிறார்கள்.” துரதிர்ஷ்டவசமாக, பொருளாதாரத்தில் நடுத்தர - மற்றும் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், ஏனெனில் அவர்கள் நடத்தல் மற்றும் சைக்கிள் ஓட்டி செல்வதை சார்ந்திருக்கின்றனர், இது பாதுகாப்பற்ற சாலைகளால் காயங்கள் மற்றும் காற்று மாசுபாட்டுக்கு அவர்களை உட்படுத்துகிறது.
இயல்பாகவே நடந்து செல்லுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை ஆபத்தானவையாகக் கருதப்படுவதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்ல மோட்டார் வாகன போக்குவரத்து முறைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இது நமது சாலைகளில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஒரு தீய வழக்கத்தை ஏற்படுத்துகிறது, இது விபத்துகள் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட ஆபத்துகளை கணிசமாக அதிகரிக்கிறது. திரு.பாஸ்கரன், உதவி ஆணையர் திட்டமிடல் (போக்குவரத்து), அவர்கள் பள்ளி பயணத்திற்காக பகிரப்பட்ட போக்குவரத்து முறைகளை ஊக்குவிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பள்ளி மண்டலங்களை விற்பனைக்கு அனுமதிக்காத பகுதிகளாக அறிவிக்க வேண்டியது அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். இதனால் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட்டு, நடைபாதைக்கான இடம் மேம்படுத்தப்பட்டு, குழந்தைகளுக்கான பாதுகாப்பான மற்றும் எளிதில் அணுகக்கூடிய பாதைகள் உறுதிசெய்யப்படலாம் என்றார்.
திரு. A.V. வேணுகோபால், திட்ட மேலாளர், போக்குவரத்து மற்றும் வளர்ச்சி கொள்கை நிறுவனம் (ITDP), அவர்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பாதுகாப்பான பள்ளி மண்டலங்களை உருவாக்குவதில் ITDP மேற்கொண்ட பணிகளைப் பற்றி பேசினார். தேவையான தீர்வுகள் பல நேரங்களில் தெளிவாகவே இருக்கும் எனவும் குறிப்பிட்டார். ஆனால் மிக முக்கியமானது என்னவென்றால், இந்த சவால்களை குழந்தைகளே நேரடியாக அனுபவிக்கிறார்கள் என்பதை உணர்வதே. பாதுகாப்பான பள்ளி சூழலைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் குழந்தைகளின் குரலும் கருத்துகளும் கண்டிப்பாகக் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“தி ஹிந்து” நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் திரு.G.ஆனந்தகிருஷ்ணன், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு உலகளவில் மிக தீவிரமான முன்னுரிமையாக கருதப்படுகிறது, இந்தியாவிலும் அதே முக்கியத்துவத்துடன் கருதப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தடையற்ற நடைபாதையைப் பயன்படுத்தும் உரிமை, அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 21-ன் கீழ் உள்ள உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமைக்குள் அடங்குகிறது என சுட்டிக்காட்டினார். முதல் கட்டமாக, தொடர்ந்து நடக்கக்கூடிய அடிப்படை உள்கட்டமைப்பான நடைபாதைகள் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், போக்குவரத்து விதிமீறல்களுக்கு பூஜ்ஜிய சகிப்பு அணுகுமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், பள்ளி மண்டலங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அறிக்கையிலேயே, பள்ளிகளின் சுற்றுப்புறங்களில் பாதுகாப்புத் தரங்களை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தி செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையில், CAG பள்ளிகளுக்கு உதவுவதற்காக ஒரு கருவித்தொகுப்பையும் (toolkit) வெளியிட்டுள்ளது. இதில் ஆபத்துக்களை அடையாளம் காணுதல், தீர்வுகளை திட்டமிடுதல், மற்றும் கல்வி, அமலாக்கம், பொறியியல் மற்றும் ஊக்குவித்தல் வழியாக பயனுள்ள நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல் போன்றவற்றுக்கான படிப்படையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. CAG ஆராய்ச்சியாளர் சௌமியா கண்ணன், இந்த ஆய்வில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் “ஏற்றுக்கொள்ளப்பட்டால் நன்றாக இருக்கும்” என்பதான செயல்கள் அல்ல, மாறாக பாதுகாப்பான பள்ளி மண்டலங்களுக்கு அத்தியாவசியமான கூறுகளாகும் என்று வலியுறுத்தினார்
மேலும் தகவல்களுக்கு, தொடர்பு கொள்ள nina.subramani@cag.org.in | +91 8754415824.
சிஏஜி பற்றி
சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (CAG) என்பது 39 வருடங்கள் பழமையான ஒரு இலாப நோக்கற்ற மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்பாகும். இது குடிமக்கள் உரிமைகள் மற்றும் நல்லாட்சிக்காக செயல்படுகிறது. அதன் முயற்சிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் கூட தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும், சென்னையின் நுகர்வோர் மற்றும் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இது முதன்மையாக செயல்படுகிறது.