பத்திரிகை செய்தி:
காலநிலை அறிவு கருத்தரங்கு 2024
தேதி: 17 டிசம்பர் 2024
முதன்மை விருந்தினர்கள்
திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்,
தமிழ்நாடு அரசு
முனைவர். P. செந்தில் குமார், இ.ஆ.ப,
அரசு முதன்மை செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, தமிழ்நாடு அரசு
உடனடி வெளியீட்டிற்காக: இந்தியாவில், காலநிலை மாற்றம் என்பது எதிர்கால அச்சுறுத்தல் அல்ல, மாறாகத் தற்போது ஒவ்வொரு நாளும் நாம் அதன் தாக்கத்தை எதிர் கொள்கிறோம். உதாரணமாக, இந்தியாவின் சுற்றுச்சூழல் 2024 என்ற அறிக்கையின் படி, 365 நாட்களில் 318 நாட்கள் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், வெப்ப அலைகளின் தாக்கம் தீவிரமடைந்துள்ளன, பல மாவட்டங்களில் வெப்பநிலை 40°C மேல் எட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வெப்ப அலைகளை மாநில பேரிடராகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது முன்னெச்சரிக்கை மற்றும் விரைவான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும். மேலும், தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகளால், திடீர் வெள்ளப்பெருக்குகள் நம் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் பாதிக்கப்படுகிறது. வரும் காலங்களின் இப்படியான நிகழ்வுகள் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற மீள்தன்மை நடவடிக்கைகளின் தேவையை உணர்த்துகிறது. இந்தச் சவால்கள் காலநிலை நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லத் திறன் பெற்ற பங்குதாரர்களின் அவசியத்தை உணர்த்துகிறது. அந்த வகையில் காலநிலை அறிவு, அவ்வாறான பங்குதாரர்களை உருவாக்குவதற்கு உதவுகிறது. பொதுமக்களை இவ்வாறாக ஆயத்தப்படுத்துவதன் மூலம், அவர்களின் செயல்பாடுகளைச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றலாம். முக்கியமாக, காலநிலை அறிவு, நிகழ்ந்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றங்களுக்கு மக்களைத் தயார்படுத்த உதவும்.
சிஏஜியால் நடத்தப்பட்ட இந்தக் காலநிலை அறிவு கருத்தரங்கு 2024, கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்கள் போன்றோரை ஒருங்கிணைத்து, காலநிலை மாற்றத்தின் சவால்களை நாம் எதிர்கொள்ளக் காலநிலை அறிவின் முக்கியத்துவம் பற்றி விவாதித்தனர்.
எஸ். சரோஜா, சிஏஜியின் நிர்வாக இயக்குநர், இந்த நிகழ்ச்சியை 'ஒரே கருத்துள்ள நபர்களின் சங்கமம்' என்று விவரித்தார்; நாம் அனைவரும் காலநிலை அறிவு என்பது பொருளாதாரம், கல்வி, வயது ஆகியவற்றை கடந்தது என்பதை உணர்கிறோம். காலநிலை நடவடிக்கை இனிமேல் விஞ்ஞானிகள் அல்லது கொள்கை வகுப்பாளர்களின் பொறுப்பாக மட்டும் இருக்க முடியாது. நம் வாழ்க்கை முறைகளின் அடித்தளமாக, அறிவும், செயலும் அர்த்தமுள்ள வழிகளில் இணைந்து செயல்பட வேண்டிய நேரமிது என விவரித்தார்.
திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் முதன்மை உரையை வழங்கினார். அப்போது அவர் ஐக்கிய நாடுகளின் பேரிடர் ஆபத்து மதிப்பீடு என்ற அறிக்கை இந்தியா இயற்கை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அதிலும் நம் நகரங்கள் கூடுதல் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடியவையாக இருக்கின்றன. இந்தக் கருத்தரங்கம், காலநிலை நடவடிக்கைகளைப் பொதுச் சமூகமும், அரசுடன் இணைந்து முன்னெடுத்து செல்ல வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
பிறகு அவர் 3 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிஏஜியின் பாடப்புத்தகம் ‘FOCUS’ என்பதை வெளியிட்டார். இந்தப் பாடப்புத்தகம் இடைநிலை மாணவர்களுக்கான (6 முதல் 8-ஆம் வகுப்பு) முந்தய பதிப்பைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்குக் காலநிலை மாற்றம், அதன் பாதிப்புகள் மற்றும் செயல்படுத்தக்கூடிய தீர்வுகளை அவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் உரையாடலை ஊக்குவிக்கும் பாடங்கள் மற்றும் சுவாரசியமான செயல்பாடுகள்மூலம், காலநிலை விழிப்புணர்வை ஊக்குவிக்கவும், அடுத்த தலைமுறையான இன்றைய மாணவர்களைச் சூழல் பொறுப்புள்ள பாதுகாவலர்களாக உருவாக்க முயற்சிக்கிறது.
முனைவர். P. செந்தில் குமார், இ.ஆ.ப, அரசு முதன்மை செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, அவர்கள் தொடக்க உரை நிகழ்த்தினார். அதில் அவர் தமிழ்நாடு அரசு காலநிலை மாற்றம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு உறுதியாக இருப்பதாகவும், பசுமை தமிழ்நாடு திட்டம்மூலம் 2030க்குள் மாநிலத்தின் பசுமைப் பரப்பை 24%லிருந்து 33% ஆக அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அவர், காலநிலை ஆபத்துகளிலிருந்து, குறிப்பாக வெள்ளப்பெருக்கிலிருந்து பாதுகாக்க நீர்நிலைகள் முக்கிய பங்கு வகிப்பதை குறிப்பிட்டு, அரசு 1000 கி.மீ நீளமுள்ள கடற்கரை பகுதிகளில் 100 நீர்நிலைகளை அடையாளம் கண்டு, அவற்றை மீட்டெடுக்கும் பணி தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைசார் வல்லுநர்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் காலநிலை அறிவின் பங்கு குறித்து பேசினார்கள். அவர்கள் கொள்கை வகுப்பில் ஒருங்கிணைப்பு தொடங்கி, காலநிலை அறிவிலிருந்து குடிமக்களை மேம்படுத்தி, மீள்தன்மை கொண்ட சமூகத்தை உருவாக்குவது வரை உள்ள அவசியத்தை விவரித்தார்கள்.
நவீன சவால்களை எதிர்கொள்ள, அனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் கொள்கை நடவடிக்கை மூலம் புதுமையான மற்றும் நிலையான தீர்வுகளை உருவாக்குவது அவசியமாகிறது. இந்தக் கருத்தரங்கம், காலநிலை மீள்தன்மையை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்கவும் மற்றும் அறிவார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு நாம் முன்னோக்கி நகர இன்றியமையாததாக இருக்கும்.
மேலும் தகவல்களுக்கு, தொடர்பு கொள்ள:
மாலா பாலாஜி – 9884316639, mala.balaji@cag.org.in
சிஏஜி பற்றி
சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (CAG) என்பது 39 வருடங்கள் பழமையான ஒரு இலாப நோக்கற்ற மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்பாகும். இது குடிமக்கள் உரிமைகள் மற்றும் நல்லாட்சிக்காக செயல்படுகிறது. அதன் முயற்சிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் கூட தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும், சென்னையின் நுகர்வோர் மற்றும் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இது முதன்மையாக செயல்படுகிறது.