Skip to main content

சேலத்தில் மாவட்ட சாலைப் பாதுகாப்பு மாநாடு செய்தி வெளியீடு

Author

உடனடி வெளியீட்டிற்கு

சேலம், ஜூலை 22, 2026

விரிவடைந்து வரும் சாலைக் கட்டமைப்புகள் மற்றும் அதிவேக வாகனங்களின் பயன்பாடு காரணமாக, இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2005-ஆம் ஆண்டு முதல் இப்போக்கு தொடர்ந்து காணப்படுகிறது; குறிப்பாக 2023-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2024-இல் சாலை விபத்து உயிரிழப்புகள் 2.5% அதிகரித்துள்ளன. 2024-ஆம் ஆண்டில், தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் பதிவான மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. மாநிலத்தில் 18,449 சாலை விபத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன; இதில் சேலத்தில் மட்டும் 2023-ஆம் ஆண்டில் 3,199 சாலை விபத்துகளும், 797 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. 2010-ஆம் ஆண்டின் தேசிய சாலைப் பாதுகாப்பு கொள்கைக்கு முன்பாகவே, 2007-லேயே தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு கொள்கையை அமல்படுத்தியிருந்தாலும், 2030-க்குள் சாலை விபத்து உயிரிழப்புகளை 50% குறைக்கும் தேசிய இலக்கை அடைய, புதுப்பிக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட மாநில சாலைப் பாதுகாப்புச் செயல் திட்டம் அவசியமாகிறது.

வலுவான மாநில சாலைப் பாதுகாப்புச் செயல் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தவும், சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் வாழ்வாதார இழப்புகள் குறித்த துயரமான சூழலைக் கையாளவும், 'சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப்' (CAG) அமைப்பு, 'கன்ஸ்யூமர் ரைட்ஸ் மூவ்மென்ட்' (Consumer Rights Movement) உதவியுடன் சேலம் 'விண்ட்சர் கேஸில் ஹோட்டல்' (Windsor Castle Hotel) விடுதியில் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு பயிலரங்கை நடத்தியது.

நுகர்வோர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த திரு. பூபதி வரவேற்புரையை வழங்கினார். சி.ஏ.ஜி-யின் கன்சல்டன்ட் திரு. ஜார்ஜ் செரியன், இந்தியாவின் சாலை பாதுகாப்பு சவாலின் அளவை வெளிப்படுத்தினார். உலக வாகனங்களின் 1% மட்டுமே இந்தியாவில் இருக்கின்றன என்றாலும், உலகளவில் சாலை விபத்து மரணங்களில் 11% அளவுக்கு இந்தியா பங்களிக்கின்றது என்று அவர் குறிப்பிட்டார். சி.ஏ.ஜி-யின் ஆராய்ச்சியாளர் திருமதி. திவ்யா, மாநிலத்தில் சாலை விபத்து மற்றும் மரணங்களை குறைக்க சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த முறையில் வேலை செய்யும் முழுமையான மாநில சாலை பாதுகாப்பு செயல்திட்டம் உருவாக்குவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். 

சேலம் பகுதியில் சாலை பாதுகாப்பை மேம்படுத்த செய்யப்படும் முயற்சிகளை போலீஸ் துணை ஆணையர் (போக்குவரத்து), திரு. ஜானகிராமன் விளக்கினார். தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும்அமலாக்க நடவடிக்கைகளால் தான் ஹெல்மெட் அணிதல் அதிகரித்துள்ளது. தவறான திசையில் இயக்குதல் குறித்த பிரச்சினையை சமாளிப்பது தொடர்பாக, போக்குவரத்து போலீசார் பரவலாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என அவர் கூறினார். அதிக சாலையோர விற்பனையாளர்கள் உள்ள பகுதிகளில் பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்த, பாதையில் வியாபாரிகளை அகற்றும் முயற்சிகளை அவர் வலியுறுத்தினார். சிறந்த கட்டுப்பாடு முக்கியம் என்று வலியுறுத்தி, சாலை பாதுகாப்பு விதிகளுக்கு உடன்படுதலை மேம்படுத்த, போக்குவரத்து அபராதங்களை சேகரிக்கும் முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். 

சேலம் மேற்கு பிராந்திய போக்குவரத்து அதிகாரி திருமதி. கோகிலா அவர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுதல் மேம்பட பொதுமக்களின் விழிப்புணர்வு மிக அவசியம் என்று வலியுறுத்தினார். குழந்தைகள் பெற்றோரின் தோளிலோ அல்லது இருசக்கர வாகனத்தின் முன்பகுதியிலோ அமர்ந்து பயணிக்காமல், அவர்களுக்கென அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தி மட்டுமே பயணிக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அவர் கவலை தெரிவித்தார். 

சேலம் மருத்துவச் சங்கத்தின் செயலாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத், சாலை விபத்தில் சிக்கியவர்களை எதிர்கொள்ளும் சூழலில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் மற்றும் விபத்துக்குப் பிந்தைய அவசரகால செயல்முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார். மேலும், விபத்து நடந்த இடத்தில் முதலில் சென்று உதவும் போக்குவரத்துப் போலீஸாருக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். சாலைப் பாதுகாப்புச் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்குத் தேவைப்படும் பரந்த அளவிலான கூட்டு முயற்சியை வெளிப்படுத்தும் வகையில், இந்நிகழ்ச்சியில் முக்கிய அரசுத் துறைகள், அமலாக்க முகமைகள், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள், போக்குவரத்து அதிகாரிகள், வணிக மற்றும் ஓட்டுநர் சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்தனர். 

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திரு. டான்ராஜ் மற்றும் சேலம் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திரு. நடராஜன் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். 

சாலை விபத்துகளைத் தடுப்பதற்குப் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளும், மாவட்ட அளவில் தொடர்ச்சியான முன்மொழியப்பட்டுள்ள மாநில சாலைப் பாதுகாப்புச் செயல் திட்டம், சான்றுகளின் அடிப்படையில் அமைந்த நடவடிக்கைகள், வலுவான நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் அளவிடக்கூடிய இலக்குகள் ஆகியவற்றுக்கான ஒரு செயல்திட்டப் பாதையை வழங்கும். இந்த விரிவான திட்டம், பாதுகாப்பான சாலைகளை உருவாக்குவதில் சேலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணவும், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் சாலைப் பாதுகாப்பு இலக்குகளை அடைவதில் பங்களிக்கவும் உதவும்.

சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (சிஏஜி), பற்றி:

சிஏஜி என்பது 40 ஆண்டு காலமாக இயங்கி வரும்  இலாப நோக்கற்ற மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்பாகும். இது, நுகர்வோர், குடிமை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பங்கேற்பு முடிவெடுத்தல் உள்ளிட்ட நல்ல நிர்வாக செயல்முறைகளை ஊக்குவிக்கிறது.

ஊடகத் தொடர்புகளுக்கு: Nina S, மூத்த ஆய்வாளர் (Senior Researcher) - சாலைப் பாதுகாப்பு மற்றும் நிலையான போக்குவரத்து (Road Safety & Sustainable Mobility), CAG | 8754415824 | nina.subramani@cag.org.in

 

Licence type
Resource Type