உடனடி வெளியீட்டிற்கு
மதுரை, ஆகஸ்ட் 27, 2026
இந்தியாவில் சாலை வலையமைப்பு விரிவடைந்து வருவதும், வாகனங்களின் வேகம் அதிகரித்திருப்பதும் சாலை விபத்து உயிரிழப்புகள் தொடர்ந்து உயர்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன. 2005ஆம் ஆண்டிலிருந்து சாலை விபத்து உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ஆம் ஆண்டில் உயிரிழப்புகள் 2.5 சதவீதம் உயர்ந்துள்ளன.
2024ஆம் ஆண்டுடன் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் பதிவான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 67,526 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. மதுரை மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டில் 2,660 சாலை விபத்துகளும், அவற்றால் 890 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
தேசிய சாலைப் பாதுகாப்புக் கொள்கை 2010ஆம் ஆண்டு கொண்டுவரப்படுவதற்கு முன்பே, தமிழ்நாடு அரசு 2007ஆம் ஆண்டில் சாலைப் பாதுகாப்புக் கொள்கையை அறிமுகப்படுத்திய முன்னோடி மாநிலமாகும். இருப்பினும், 2030ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்து உயிரிழப்புகளை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற தேசிய இலக்கை அடைய, தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்கப்பட்ட, தெளிவான கட்டமைப்பைக் கொண்ட மாநில சாலைப் பாதுகாப்புச் செயல் திட்டம் அவசியமாகிறது.
மாநில அளவிலான வலுவான சாலைப் பாதுகாப்புச் செயல் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தவும், அதன் அடிப்படையில் மாவட்ட அளவிலான நடைமுறைச் செயல் திட்டங்களை உருவாக்கவும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் வாழ்வாதார இழப்புகளைத் தடுப்பது குறித்து விவாதிக்கவும், சென்னையைச் சேர்ந்த சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (சிஏஜி), பெண்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத்துடன் இணைந்து பல்துறைப் பங்கேற்பாளர்களுக்கான கலந்தாய்வுப் பயிலரங்கை 2026 ஆகஸ்ட் 27ஆம் தேதி மதுரை ஹோட்டல் ராயல் கோர்ட்டில் நடத்தியது.
பெண்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரும், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினருமான முனைவர் சி. பாக்கியலட்சுமி வரவேற்புரை வழங்கினார்.
CAG அமைப்பின் ஆய்வாளர் இ. கவிப்பிரியா, இந்தியா, தமிழ்நாடு மற்றும் குறிப்பாக மதுரை மாவட்டத்தின் தற்போதைய சாலைப் பாதுகாப்பு நிலவரம் குறித்து விளக்கினார். தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
CAG அமைப்பின் மூத்த ஆய்வாளர் நினா சுப்பிரமணி, வலுவான நிர்வாக மற்றும் நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு மாநில சாலைப் பாதுகாப்புச் செயல் திட்டம் ஏன் அவசியம் என்பதை விளக்கினார். பிற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சாலைப் பாதுகாப்புச் செயல் திட்டங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்த அவர், 70 சதவீதத்திற்கும் அதிகமான சாலை விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் அதிவேகம் முக்கியக் காரணமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
சாலைப் பாதுகாப்புக்கான “பாதுகாப்பான அமைப்பு அணுகுமுறையை” பின்பற்றுதல், தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ளுதல் மற்றும் நடைமுறையில் அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயித்தல் ஆகியவை சாலைப் பாதுகாப்புச் செயல் திட்டத்தின் முக்கிய அம்சங்களாக இருக்க வேண்டும் என்பதை நிகழ்வில் உரையாற்றிய அனைவரும் வலியுறுத்தினர்.
மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சித்ரா தொடக்கவுரை வழங்கினார். வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணியில் தாம் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், தனது பணிக்காலத்தில் நேரில் கண்ட முதல் பெரிய சாலை விபத்திலேயே 12 பேர் உயிரிழந்த சம்பவம் தன்னை மனதளவில் பெரிதும் பாதித்ததாகக் குறிப்பிட்டார்.
வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவது, தலைக்கவசம் அணிந்தாலும் அதன் பட்டையை முறையாகப் பொருத்தாதது, பெண்கள் அணியும் தளர்வான துப்பட்டா மற்றும் சேலைத் தலைப்புகள் வாகனச் சக்கரங்களில் சிக்குவது போன்ற மனிதத் தவறுகள் மதுரையில் சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள மனிதர்களால் மதிப்பிடப்படும் ஓட்டுநர் உரிமத் தேர்வு முறைக்குப் பதிலாக, தேர்வை ஒரே தரநிலையில் நடத்துவதற்காகத் தானியங்கி ஓட்டுநர் திறன் பரிசோதனைத் தடங்களை மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சோதனை அடிப்படையில் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
“மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர், சித்ரா அவர்கள் பேசுகையில் - ஒரு சாலை விபத்து, அதில் சிக்கிய ஒருவரை மட்டும் பாதிப்பதில்லை; அவரது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் பாதிக்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்தின் வருமானம் ஈட்டும் நபராக இருந்திருக்கலாம். ஒரே ஒரு சாலை விபத்தால் அந்தக் குடும்பத்தில் திருமணங்கள் நின்றுபோகலாம்; குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படலாம் என குறிப்பிட்டு பேசினார்”
அவசர மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர் மருத்துவர் எஸ். செல்வா சிறப்புரை வழங்கினார். சாலை விபத்துகளால் ஏற்படும் உடல் பாதிப்புகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கிய அவர், விபத்துகளில் சிக்கி மருத்துவமனைக்கு வருபவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் கடுமையான காயங்களுடன் வருவதாகவும், சிறிய காயங்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார். விபத்துக்குப் பிந்தைய “பொன்னான நேரத்திற்குள்” உரிய மருத்துவ உதவி வழங்கப்படுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
“மருத்துவர் எஸ். செல்வா அவர்கள் பேசுகையில் அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல் நிலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு, சாலைப் போக்குவரத்து விபத்துகளால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு மாதமும் அழைத்து வரப்படுகின்றனர். மாதத்திற்கு 95 உயிரிழப்புகள் என்பது, நூறு விபத்து நோயாளிகளில் ஒன்பது பேர் உயிரிழப்பதற்குச் சமம். இது ஒரே ஒரு மருத்துவமனையின் நிலவரம் என குறிப்பிட்டார்.”
மதுரை போக்குவரத்துக் காவல் துணை ஆணையர் எஸ். வனிதா, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வதற்கு CAG நடத்திய இத்தகைய மாவட்ட அளவிலான கலந்தாய்வுகள் மிகவும் அவசியமானவை என்று தெரிவித்தார்.
சாலை விபத்து ஏற்பட்ட பிறகு காவல்துறை பின்பற்றும் நடைமுறைகளை விரிவாக விளக்கிய அவர், சாலை விபத்து உயிரிழப்பு என்பது ஒரு மனித உயிரின் இழப்பு மட்டுமல்ல; அந்த நபரின் கனவுகளையும், அவர் திட்டமிட்டிருந்த எதிர்கால வாழ்க்கையையும் முற்றிலுமாக அழிக்கும் சம்பவம் என்று கூறினார். தனது பணி அனுபவத்தின் அடிப்படையில், மதுரையில் நடைபெறும் 70 சதவீதத்திற்கும் அதிகமான சாலை விபத்துகளுக்கு மதுபோதையில் வாகனம் ஓட்டுவது முக்கியக் காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“மதுரை போக்குவரத்துக் காவல் துணை ஆணையர் எஸ். வனிதா அவர்கள் பேசுகையில் மதுரையில் ஒரே ஆண்டில் சுமார் 1,700 சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. தலைக்கவசம் அணிந்திருந்தாலும், அதிவேகமாகச் செல்லும்போது வாகனத்தின் கட்டுப்பாட்டை மிக எளிதாக இழக்க நேரிடும். சாலை என்பது நமக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட இடம் என்ற மனநிலை நம்மிடையே உள்ளது. சாலைகள் அனைவருக்குமானவை என்பதை நாம் உணர வேண்டும். உயிரிழப்புகளே இல்லாத தேசத்தை உருவாக்குவதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என குறிப்பிட்டு பேசினார்.”
இந்நிகழ்வில் அரசின் முக்கியத் துறைகள், சட்ட அமலாக்க அமைப்புகள், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள், போக்குவரத்து அதிகாரிகள், குடிமைச் சமூக அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சாலை விபத்துகளைத் தடுப்பது என்பது ஒரு துறையின் பொறுப்பு மட்டுமல்ல; பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடும், மாவட்ட அளவில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும் அவசியம் என்பதை இக்கலந்தாய்வு உறுதிப்படுத்தியது.
மாநில சாலைப் பாதுகாப்புச் செயல் திட்டம் உருவாக்கப்பட்டு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், ஆதாரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், அளவிடக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்கவும் தெளிவான வழிகாட்டுதல் கிடைக்கும்.
இத்தகைய விரிவான செயல் திட்டம் மதுரை மாவட்டத்தில் பாதுகாப்பான சாலைகளை உருவாக்குவதற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துவதுடன், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் சாலைப் பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கும் முக்கியப் பங்களிப்பை வழங்கும்.
சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (சிஏஜி), பற்றி:
சிஏஜி என்பது 40 ஆண்டு காலமாக இயங்கி வரும் இலாப நோக்கற்ற மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்பாகும். இது, நுகர்வோர், குடிமை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பங்கேற்பு முடிவெடுத்தல் உள்ளிட்ட நல்ல நிர்வாக செயல்முறைகளை ஊக்குவிக்கிறது.
ஊடகத் தொடர்புகளுக்கு: Nina S, மூத்த ஆய்வாளர் (Senior Researcher) - சாலைப் பாதுகாப்பு மற்றும் நிலையான போக்குவரத்து (Road Safety & Sustainable Mobility), CAG | 8754415824 | nina.subramani@cag.org.in