திரு. எஸ். சரவணன், இ.ஆ.ப. – இணை ஆணையர் (பணிகள்), பெருநகர சென்னை மாநகராட்சி
திரு. கோபிநாத் மல்யா – தலைமை ஆலோசகர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
திரு. எஸ்.ஏ. செல்வகுமார் – பொது மேலாளர் (இயக்கம்), மாநகரப் போக்குவரத்துக் கழகம்
திரு. சதீஷ் குமார் – உறுப்பினர், மாற்றுத்திறனாளிகள் உரிமைக் கூட்டமைப்பு
திருமதி அகிலா சண்முகராஜ் – கட்டிடக் கலைஞர் மற்றும் நகரத் திட்டமிடல் நிபுணர், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம்
உடனடி வெளியீட்டிற்காக
சென்னை, ஆகஸ்ட் 20, 2026
2026-ஆம் ஆண்டிலும் சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் பிறரின் உதவியின்றி சுதந்திரமாகப் பயணம் செய்வது பெரும் சவாலாகவே உள்ளது. சேதமடைந்த அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதைகள், போதிய முதல் மற்றும் கடைசிக் கட்ட இணைப்பு வசதிகள் இல்லாமை, அணுக இயலாத பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்புகள் போன்றவை சாதாரணப் பயணத்தைக்கூட கடினமான அனுபவமாக மாற்றுகின்றன.
அணுகத்தக்க தெருக்களும் நடைபாதைகளும் விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படும் வசதிகள் அல்ல; அவை அனைவருக்குமான உரிமை என்ற புரிதல் தற்போது வலுப்பெற்று வருகிறது. 2026 ஜூன் மாதத்தில், பாதுகாப்பான மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட நடைபாதைகளில் நடப்பது அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தெருக்களும் போக்குவரத்து அமைப்புகளும் வடிவமைக்கப்பட்டால், அவை அனைவருக்கும் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் அமையும். இதுவே அனைவரையும் உள்ளடக்கும் வடிவமைப்பின் அடிப்படை நோக்கமாகும்.
சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பு நடைமுறையில் எந்த அளவிற்கு அணுகத்தக்கதாக உள்ளது என்பதை அறிந்துகொள்ள, Citizen consumer and civic Action Group (CAG) ஓராண்டு கால ஆய்வை மேற்கொண்டது. கருத்துக்கணிப்புகள், குழுக் கலந்துரையாடல்கள் மற்றும் ஏற்கெனவே வெளியிடப்பட்ட தகவல்களின் ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வாய்வு நடத்தப்பட்டது.
அதன் முடிவுகள், ‘தடைகளற்ற பயணம்: சென்னையில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் போக்குவரத்துத் தடைகளின் ஆவணப் பதிவு’ என்ற அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் நேரடி வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
“அணுகத்தக்க போக்குவரத்து வசதிகள் இல்லாமையைத் தனித்தனி சம்பவங்களாக மட்டும் பார்க்கக் கூடாது. அதன் ஒட்டுமொத்த விளைவுகள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவச் சேவைகளைப் போன்ற பெறும் வாய்ப்புகளையே பாதிக்கின்றன,” என்று CAG-இன் நிலையான போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த ஆய்வாளர், திவ்யா அரவிந்த், தெரிவித்தார்.
“பாதுகாப்பற்ற கட்டமைப்புகள் காரணமாக, பலர், நகரும் வாகனங்களுக்கு அருகிலேயே சாலையில் நடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால், பிறரின் உதவியின்றிப் பயணம் செய்வது கடினமாகவோ, மிகவும் ஆபத்தானதாகவோ மாறுகிறது”, என்றும் அவர் குறிப்பிட்டார். “மக்களின் இத்தகைய அனுபவங்களை ஆதாரங்களாகப் பதிவு செய்து, அனைவரையும் உள்ளடக்கிய போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கு அரசின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் வழிகாட்டுவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்”, என்றார்.
பொதுப் போக்குவரத்து வசதிகள் அருகில் இருந்தாலும், அவற்றைப் பாதுகாப்பாக அணுக முடியாத பெரும் இடைவெளி இருப்பதை ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 66 விழுக்காட்டினர் பொதுப் போக்குவரத்து நிறுத்தம் அல்லது நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் வசிக்கின்றனர். இருப்பினும், மூன்றில் இரண்டு பங்கினர் மோசமான நடைபாதைக் கட்டமைப்புகள் காரணமாக அந்தச் சேவைகளைப் பாதுகாப்பாகச் சென்றடைய முடியவில்லை.
சுமார் 68 விழுக்காட்டினர் தடைகள் நிறைந்த அல்லது சமமற்ற நடைபாதைகள் காரணமாகச் சாலையில் இறங்கி நடக்க வேண்டிய நிலையைச் சந்தித்துள்ளனர். 41 விழுக்காட்டினர் நடைபாதைக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பாக உணரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பேருந்துகளும் புறநகர் ரயில்களும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்து முறைகளாக உள்ளன. இருப்பினும், அணுக இயலாத வாகன வடிவமைப்பு, ரயில் நடைமேடைக்கும் பெட்டிக்கும் இடையிலான இடைவெளி, போதுமான சாய்வுப்பாதைகள் இல்லாமை, தெளிவற்ற வழிகாட்டிப் பலகைகள், குறைவான ஒலி–ஒளி அறிவிப்புகள் மற்றும் அணுகத்தக்கதாக இல்லாத பேருந்து நிறுத்தங்கள் ஆகியவை சுதந்திரமான பயணத்திற்குத் தொடர்ந்து தடையாக உள்ளன.
பொதுப் போக்குவரத்து வாகனங்களின் உள்வசதிகள் குறித்து 4.5 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையான திருப்தியைத் தெரிவித்துள்ளனர். 61 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் அவற்றின் வசதிகள் மோசமாக உள்ளதாக மதிப்பிட்டுள்ளனர்.
ஒப்பீட்டளவில் அணுகத்தக்க கட்டமைப்பும் பயிற்சி பெற்ற பணியாளர்களும் இருப்பதால், சென்னை மெட்ரோ ரயில் பலராலும் விரும்பப்படும் போக்குவரத்து முறையாக உள்ளது. இருப்பினும், நிலையங்களிலுள்ள சில அணுகல் வசதிகளைப் பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் பூட்டப்பட்டிருப்பது, குறைவான வழித்தட இணைப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பயணக் கட்டணச் சலுகை இல்லாமை போன்ற குறைபாடுகளை ஆய்வில் பங்கேற்றவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த அறிக்கை 2026 ஆகஸ்ட் 20 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் (பணிகள்) திரு.எஸ்.சரவணன், இ.ஆ.ப., மற்றும் முக்கியப் போக்குவரத்து நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் உரிமை அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
தொடக்க உரையாற்றிய திரு.சரவணன், “அணுகல் வசதி என்பது உரிமை; அது சலுகை அல்ல” என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்வை “அனைவரையும் உள்ளடக்கிய அணுகல்தன்மைக்கான ஆக்கப்பூர்வமான உரிமைக் குரல்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் 80 கிலோமீட்டர் நீளமுள்ள நடைபாதைகளைத் தொட்டுணரும் வழித்தடங்கள் உள்ளிட்ட அணுகல் வசதிகளுடன் மேம்படுத்துதல், சந்திப்புகளை அணுகத்தக்கதாக மாற்றுதல், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளை மேம்படுத்துதல், நகரம் முழுவதும் சிறந்த மாதிரியிலான பேருந்து நிறுத்தங்களை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களையும் அவர் விளக்கினார்.
இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் உரிமைக் கூட்டமைப்பு (DRA), பார்வையற்றோருக்கான தேசிய சங்கம் மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிப் பெண்களின் உரிமைகளுக்கான சங்கம் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
தற்போதுள்ள தடைகளை அடையாளம் காண்பதுடன் மட்டுமல்லாமல், சென்னையின் போக்குவரத்துக் கட்டமைப்பில் அணுகல்தன்மையைத் திட்டமிட்ட முறையில் எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
போக்குவரத்து நிறுவனங்களின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் நிகழ்வில் விளக்கப்பட்டன. CUMTA-வின் கட்டிடக் கலைஞர் மற்றும் நகரத் திட்டமிடல் நிபுணர் திருமதி அகிலா சண்முகராஜ், சென்னைப் பெருநகரப் பகுதிக்காகத் தயாரிக்கப்பட்டு வரும் விரிவான போக்குவரத்துத் திட்டம், அணுகல்தன்மையை மதிப்பிடும் செயல்திறன் குறியீடுகள் மற்றும் தெரு வடிவமைப்புக்கான அளவுகோல்கள் குறித்து எடுத்துரைத்தார்.
CMRL தலைமை ஆலோசகர் திரு.கோபிநாத் மல்யா, ஒருங்கிணைந்த அணுகல்தன்மை வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றுவதே சென்னை மெட்ரோவின் நீண்டகால இலக்கு என்று தெரிவித்தார். இதற்காக மூன்றாம் தரப்பு அமைப்புகள் மூலம் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரை, தாழ்தளப் பேருந்துகளுக்கு மாறுவது அணுகல்தன்மையை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக உள்ளது. இனி கொள்முதல் செய்யப்படும் அனைத்துப் பேருந்துகளும் தாழ்தளப் பேருந்துகளாக இருக்கும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 1,000 தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் பொது மேலாளர் (இயக்கம்) திரு. எஸ்.ஏ. செல்வகுமார் தெரிவித்தார்.
நீண்டகால அடிப்படையில் சென்னை நகரப் பேருந்துகள் அனைத்தையும் தாழ்தளப் பேருந்துகளாக மாற்றுவது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. முதல் மற்றும் கடைசிக் கட்டப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்காக அணுகத்தக்க சிற்றுந்துகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு.சதீஷ் குமார், திட்டத்தின் தொடக்க நிலையிலேயே அணுகல்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கட்டமைப்புகள் உருவாக்கப்பட்ட பிறகு குறைபாடுகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக, திட்ட வடிவமைப்பிலேயே அணுகல்தன்மை ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும், ஒப்பந்தப் புள்ளி ஆவணங்களிலேயே அணுகல்தன்மைக்கான நிபந்தனைகள் கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னையின் போக்குவரத்துக் கட்டமைப்பு விரிவடைந்து நவீனமடைந்து வரும் நிலையில், கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு கூடுதலாக இணைக்கப்படும் வசதியாக அணுகல்தன்மையைக் கருத முடியாது என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
திட்டமிடல், வடிவமைப்பு, கொள்முதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பு என அனைத்துக் கட்டங்களிலும் அணுகல்தன்மை அடிப்படைக் கூறாக இடம்பெற வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய போக்குவரத்து அமைப்பு என்பது வசதியான பயணத்திற்காக மட்டும் தேவையானதல்ல; மாற்றுத்திறனாளிகள் பிறரின் உதவியின்றிப் பயணம் செய்யவும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவச் சேவைகளில் சமமாகப் பங்கேற்கவும் அது இன்றியமையாததாகும்.
முழு ஆய்வறிக்கையைப் பதிவிறக்கம் செய்ய:
Moving Without Barriers – முழு அறிக்கை
CAG பற்றி
Citizen consumer and civic Action Group (CAG) என்பது நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளில் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கடந்த நாற்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இலாப நோக்கமற்ற, அரசியல் சார்பற்ற தொழில்முறை அமைப்பாகும். வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் மக்களின் பங்கேற்புடன் கூடிய முடிவெடுக்கும் நடைமுறைகள் உள்ளிட்ட நல்லாட்சிக் கொள்கைகளை ஊக்குவிப்பதும் இவ்வமைப்பின் முக்கியப் பணியாகும்.
மேலும் விவரங்களுக்கு:
நினா எஸ்.
மூத்த ஆய்வாளர் – சாலைப் பாதுகாப்பு மற்றும் நிலையான போக்குவரத்து, CAG
தொலைபேசி: 87544 15824
மின்னஞ்சல்: nina.subramani@cag.org.in