Skip to main content

40 வருட கொடுங்கையூர் குப்பைமேட்டிற்கு பயோ மைனிங் தீர்வா?  

பல வருடங்களாக கொடுங்கையூர் மக்கள் இந்த ஒரு வாக்கியத்தை கேட்டு கேட்டு அலுத்து விட்டார்கள் - அதாவது, கொடுங்கையூர் குப்பைமேடு சுத்தமாகிவிடும்; மேலும், அந்த இடத்தில் பூங்கா அமைக்கப்படும். இதை கேட்ட பிள்ளைகளின் பிள்ளைகள் இன்று பள்ளி செல்ல தொடங்கிவிட்டார்கள், ஆனால் அங்கே மாற்றம் ஏதும் நடந்திடவில்லை. இன்று மீண்டும் அந்த வார்த்தைகள் கொடுங்கையூர் வீதிகளில் உலாவருகிறது. இம்முறை கொஞ்சம் மும்முரமாக வேலைகளும் நடந்துகொண்டு இருப்பதால், அங்குள்ள மக்களும் மிகவும் நம்பிக்கையாக உள்ளார்கள். சமீபத்தில், மத்திய அரசின் - ஸ்வச் பாரத் மிஷன் 2.0 -ன் கீழ், தமிழ் நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இணைத்து கொடுங்கையூரில் இருக்கும் குப்பைமேட்டை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க மூன்று தனியார் நிறுவங்களிடம் ஒப்பந்தம் போட்டது. (Zigma, Ramky and Ascent)   

Zigma - இது ஒரு பயோ மைனிங் செய்யும் நிறுவனம், இந்தியா முழுவதும் சில இடங்களிலும் மற்றும் தமிழகத்தில் பல இடங்களிலும் தற்போது வேலை செய்து கொண்டு இருக்கிறது. சென்னை பள்ளிக்கரணை குப்பைமேட்டை ஜிக்மா நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயோ மைனிங் செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Ramky - திடக்கழிவு, மருத்துவக்கழிவு மற்றும் அபாயகரமான கழிவு மேலாண்மை   செய்து வரும் இந்த நிறுவனம், இம்முறை கொடுங்கையூரில் பயோ மைனிங் செய்வதற்கான ஒப்பந்தத்தை முதன் முறையாக பெற்றுள்ளது. இந்நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு சென்னையில் திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தத்தை சரியாக நிர்வகிக்காததால் ஒப்பந்தம் நடுவில் நீக்கப்பட்டது, மேலும் சென்னை மாநகராட்சி இந்த நிறுவனத்தின் மீது  6 கோடி அபராதத்தை விதித்தது குறிப்பிடத்தக்கது.     

Ascent - மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தகவல் தொழில் நுட்ப சேவைகளை செய்யும் ஒரு நிறுவனம். இவர்களும் பயோ மைனிங் செய்யும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார்கள்.

CAG

படம் 1: குப்பை மேடு/CAG 

பயோ மைனிங் என்றால் என்ன?  

பொதுவாக குப்பைமேடுகளில் பலவருடங்களாக மேலும் மேலும் கொட்ட பட்ட குப்பைகள் மழையிலும், வெயிலிலும் அழுகி இறுக்கமாக பிணைந்து  கிடக்கும். அப்படி இருக்கும் குப்பைகளின் மேல் பொழியும் மழைநீர் மற்றும் அதிலிருந்து இருந்து அழுகி வடியும் நீர், லிசேட் (Leachate)  என்று சொல்லப்படும். இது சுற்றியுள்ள நிலத்தடி நீரையும் அதன் நீர் தேக்கிகளையும், விவசாய நிலங்களையும், அதை தொடர்ந்து மனிதர்களையும், விலங்குகளையும் பெரும் அளவில் பாதிக்கும். மேலும் குப்பைகளின் இறுக்கத்தில்  இருந்து உருவாகும் மீத்தேன் மற்றும்  கார்பன் டை ஆக்சைடு  வாய்வு, சுவாசிக்கும் காற்றின் தரத்தை குறைக்கும். அத்துடன் இந்த நச்சு வாய்வுக்கள் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாகவும் இருக்கின்றன.

பல வருடங்களாக குப்பைமேடுகளில் குமிந்து கிடைக்கும் குப்பைகளை மற்றும் அந்த நிலத்தை மீட்டெடுக்க பயோ மைனிங் மற்றும் பயோ ரெமிடியேஷன் என்று முறை இந்தியா முழுவதும் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  எளிதாக சொல்லவேண்டும் என்றால் குப்பைமேடுகளில் குமிந்து கிடக்கும் குப்பைகளை அகழ்த்தெடுத்து, அதை தரம் பிரித்து, அதில் கிடைக்கும் கண்ணாடி, இரும்பு, பிளாஸ்டிக், ஆடைகள், பேப்பர், கரிமப் பொருள் (organic matters) போன்ற பல மதிப்புள்ள பொருட்களை தனி தனியாக பிரித்தெடுத்து அதை, வேறு பயன்பாடு செய்தல், மறுசுழற்சி, அதிலிருந்து எரிபொருள் மீட்பு, அல்லது மாற்று எரிபொருளாக பயன்படுத்துவது, மற்றும் அதிலிருக்கும் கரிமப் பொருள் (organic matters) மீட்டெடுத்து மீண்டும் மண்ணிற்கே அறிமுக படுத்துவது தான் பயோ மைனிங் மற்றும் பயோ ரெமிடியேஷன். இறுதியாக குப்பைகளில் சிக்கி கிடக்கும் நிலத்தையும் மீளுருவாக்கம் செய்வது தான் இதன் இன்னொரு அம்சம். 

நமது குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதின் அவசியத்தை நாம் இங்கு உணர வேண்டும். நாம் அன்று தரம் பிரித்து கொடுக்காத குப்பைகள் தான் இன்று 614 கோடி செலவில் கொடுங்கையூரில் இன்று பயோ மைனிங் முறையில் தரம் பிரிக்கப்படுகிறது.  

  1. பொதுவாக ஒரு குப்பைமேட்டை மீட்டெடுப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. பல வருடங்களாக அழுத்தத்தில் புதைந்து இருக்கும் குப்பைகளில் பல இரசாயனங்கள், வாய்வுக்கள், பாதரசம் போன்ற ஆபத்தான விஷயங்கள் புதைந்து இருக்கும். இதை எடுத்த எடுப்பில்  பயோ மைனிங் மற்றும் பயோ ரெமிடியேஷன்  செய்ய நினைத்தால் அது விபத்துகளை ஏற்படுத்தலாம். ஆகையால் முதலில் அந்த குப்பைமேட்டை ஆய்வு செய்து  அதிலுள்ள கழிவு வகைகள், மொத்த பரப்பளவு, அதில் இருக்கும் குப்பையின் அளவு மற்றும் அந்த குப்பைமேட்டின் காற்றின் திசை, நீர், நிலம் மற்றும் சுற்றுச்சூழலை பகுப்பாய்வு செய்வது அவசியம். இது சரியான திட்டங்களை செயல்படுத்த வழிவகுக்கும்.   
  2. பின்பு குமிந்து கிடக்கும் குப்பைகளை எடுத்து அதை சின்னஞ்சிறு குன்றுகளாக (windrows) மாற்றி, வெயிலில் உலர்த்தி, அதை நன்றாக கிளறிவிட்டு, அதில் காற்றோட்டத்தை ஏற்படுத்துவார்கள். (இங்கேயே ஓரளவுக்கு கண்ணுக்கு தெரிந்த மதிப்புள்ள பொருட்களை மீட்டுவிடுவார்கள்.  எடுத்துக்காட்டு - பெரிய பொருட்கள், பிளாஸ்டிக் வகைகள், இரும்பு, ஆடைகள்)    
  3. அதன்மீது நுண்ணுயிர்களை கொண்ட பயோ கல்சர் (Bio-culture)  எனும் தெளிப்பானை தெளிப்பார்கள். பயோ கல்சர் தெளிப்பான் அந்த குன்றுகளில் இருக்கும் கரிமப் பொருட்களை விரைவாக சிதைவடைய செய்யும். அதனால் அந்த குப்பை குன்றின் அளவு குறைய தொடங்கும். தொடர்ந்து தெளிப்பான் தெளித்து மற்றும் காற்றோட்டத்தை ஏற்படுத்துவதினால் அந்த குன்றின் அளவு குறைந்து அது கழிவு நீர் (leachate)  மற்றும் வாய்வுகளை உற்பத்தி செய்யாத நிலையை அடைந்து விடும். இதை கழிவு நிலைப்படுத்தல் (Stabilized Waste) என்று சொல்வார்கள். கழிவுகளை வெயில், காற்று மற்றும் பயோ கல்சர் நுண்ணுயிர்களை கொண்டு நிலைப்படுத்தும் முறையை பயோ ரெமிடியேஷன் என்பார்கள்.
  4. நிலைப்படுத்தல் செய்யப்பட்ட கழிவுகள் பின்பு இயந்திரங்கள் (Trommel, vibrating screens and air blowers) மற்றும் தொழிலார்களின் உதவியுடன் தரம் பிரிக்கப்படும். இந்த செயல்முறையை சிகிரீனிங் (Screening)  என்பார்கள். இதிலிருந்து மதிப்புள்ள பொருட்களை மீட்டுக்கொள்வார்கள் - அதாவது, பிளாஸ்டிக், பேப்பர், மெட்டல், கண்ணாடி, கற்கள், மண் மற்றும் பல. பின்பு, அவற்றை, அந்தந்த வகைகளுக்கு ஏற்ப, சிமெண்ட் தொழிற்சாலைகள் (மற்ற எரிபொருளுடன் சேர்த்து எரிப்பதற்கு), மறுசுழற்சியகங்கள், கட்டுமான பணிகள் (கற்கள் மற்றும் மண்ணை நில நிரப்பிகளாக பயன்படுத்துவது)   போன்ற இடங்களுக்கு அனுப்புவார்கள்.

இதெல்லாம் போக கடைசியில் மீளும் சில கலவையான, பயன்படுத்த முடியாத கழிவுகளை (Heterogeneous waste), ஓழுங்குபடுத்தப்பட்ட குப்பை கொட்டும் இடங்களில் கொட்டுவார்கள். இதுபோன்ற கலவையான கழிவுகள் வேறு எதற்கும் பயன்படுத்த முடியாதவை. இது காலத்திற்கும் குப்பைமேடுகளில் தான் கிடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

  1. கடைசியில் குப்பைமேட்டை குப்பைகள் இல்லாத சமநிலை ஆக்குவார்கள். பொதுவாக சமநிலை அடைவதற்கு பல மாதங்களில் இருந்து வருடங்கள் எடுக்கும். இது அந்த குப்பைமேட்டின் அளவை பொறுத்தது. 

மேலே  குறிப்பிட்ட வழிமுறை பயோ மைனிங் மற்றும் பயோ ரெமிடியேஷன்  செய்வதற்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களின்படி சொல்லப்பட்ட வழி முறைகளில் ஒன்றாகும். இது போக இன்னும் வேறு சில வழிமுறைகளும்  பின்பற்றப்படுகின்றன. இது அந்த குப்பைமேட்டின் இடம், அளவு  பொறுத்து மாறுபடும்.

CAG

படம் 2: கும்பகோணம் குப்பைமேடு மீட்புக்கு முன்னும் பின்னும்/Zigma   

குப்பைகளின் ஆக்கக்கூறு ஒரு பெரும் சிக்கல் 

கொடுங்கையூர் குப்பைமேடு கடந்த நான்கு சகாப்தங்களாக செயல்பாட்டில் உள்ள ஒரு இடம்! இங்கே பல வகையான குப்பைகள், எந்த ஓரு ஓழுங்குமுறையும்   இன்றி, கொட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது. உதாரணத்துக்கு, சில அபாயகரமான குப்பை வகைகள்: 

  1. பிளாஸ்டிக் கழிவுகள் 
  2. மருத்துவ கழிவுகள் 
  3. இரசாயன கழிவுகள் 
  4. தொழிற்சாலைகளின் கழிவுகள் 
  5. மின்னணு கழிவுகள் மற்றும் 
  6. கதிரியக்க கழிவுகள்

இதுபோன்ற கழிவுகள், பலவருடங்களாக கலந்து, மக்கி, பெரும் மேடுகளாக உருவாகி இருக்கின்றன. இப்படி இருக்கும் குப்பைமேட்டின் கழிவுகளை மீட்டெடுக்கும் போது, அதில் இரசாயனங்கள், கன உலோகங்கள் மற்றும் நுண் பிளாஸ்டிக் துகள்களின் சுவடுகள் இருப்பது வழக்கம். இந்த பன்முக தன்மை கொண்ட கழிவு வகைகள் பயோ மைனிங்கிற்கு பெரும் சவாலாக இருந்து கொண்டு இருக்கிறது. 

இப்படிப்பட்ட குப்பைகளில் இருந்து மீட்கப்பட்ட மண்ணை விவசாய நிலங்களிலோ அல்லது மற்ற இடங்களிலோ  பயன்படுத்தினால் அது ஒரு இடத்தில இருக்கும் குப்பைமேட்டின் மாசுபாட்டை  இன்னொரு இடத்திற்கு மாற்றுவது போன்ற விளைவுகளை உண்டாக்கும்.  மேலும் பல வருடங்களாக மண்ணில் மக்கிப்போன பிளாஸ்டிக், மழையிலும் வெயிலிலும் சிதைந்து அதன் நுண்துகள்கள் குப்பைமேடுகளில் கிடக்கும். இப்படி இருக்கும் பிளாஸ்டிக் நுண்துகள்களை, பயோ மைனிங் முறையில் கண்டுபிடித்து அதன் பிரச்னைகளை தீர்ப்பது சாத்தியமற்றது. அது விவசாய நிலங்களுக்கு சென்று அங்கிருந்து நமது உணவு சங்கிலிகளுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதனால் இதுபோன்ற குப்பைமேட்டில் இருந்து மீட்கப்பட்ட மண்ணை, ஆய்வகங்களில் ஆராய்ந்து, அதில் மாசுபாடுகளை கண்டறிந்து, நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.  மேலும், இதை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதிசெய்ய வேண்டும்.  

என்ன தான் நீங்கள் கோடிகள் செலவழித்து பயோ மைனிங் செய்தலும், குப்பைகளை தரம் பிரிப்பது போன்ற சின்னன்சிறு பழக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்றால், அது கடலில் போடும் உப்பை போன்றது. ஒருபுறம், குப்பைகளை அகழ்ந்தெடுத்து பயோ மைனிங் செய்து கொண்டு இருக்கும் வேளையில், மறுபுறம், தரம் பிரிக்கப் படாத குப்பைகள் டன் கணக்கில் தினம்தோரும் அதே குப்பைமேடுகளில் கொட்டப்பட்டால், அது பயனற்று போகிறது.

தயாரிப்பாளர் பொறுப்பு 

பிளாஸ்டிக் உற்பத்தி செய்து அதில் தங்களது தயாரிப்புகளை விற்கும் நிறுவனங்கள் தங்களது பிளாஸ்டிக் குப்பைகளின் முழுப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்தும் கொள்கை முடிவு தான் நீட்டிக்க பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு (EPR). இது இந்தியாவில் அமலில் இருக்கும் ஒரு சட்டம். இந்தியாவில் உணவு முதல் ஒப்பனை வரை இருக்கும் பொருட்களில் பல்வேறு விதமான இரசாயங்கள் சேர்க்கப்படுகிறது, தனியாக அபாயகர கழிவுகள் மேலாண்மை சட்டங்கள் இருந்தாலும், இது போன்ற தினசரி உபயோக பொருட்களில் சேர்க்கப்படும் இரசாயன சேர்மங்கள், கழிவு மேலாண்மை சட்டங்களில் இருந்து நழுவி குப்பைமேடுகளில் விழுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை தடுப்பதற்கு  நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு சட்டங்களை போன்ற சட்டங்கள், இரசாயன சேர்மங்களிலும் கொண்டு வரப்பட வேண்டும். மேலும் தயாரிப்புகளில் சேர்க்கப்படும் இரசாயன சேர்மங்களின் வெளிப்படை தன்மையை தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்! ஒரு குப்பைமேட்டில் காலாவதி ஆன மருந்துகள் முதல் இரசாயனம்  சேர்க்கப்பட்ட பாத்திரம் கழுவி  வரை கொட்டப்படுகிறது. இதெற்கெல்லாம் பொறுப்பு, இதை தயாரித்தவர்களிடம்  ஒப்படைப்பதே சிறந்த தீர்வாகும். 

வடசென்னை மக்களின்  நுரையீரல் ஒரு குப்பைமேடு!

கொடுங்கையூரில் பயோ மைனிங் திட்டத்தின் போர்வைக்குள் ஒளிந்து இருக்கும் இன்னொரு திட்டம் தான் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலைகள். 

ஏற்கனவே பல வருடங்களாக குப்பைமேட்டின் இன்னல்களை சந்தித்து கொண்டு இருக்கும் மக்களுக்கு மத்தியில் பயோ மைனிங் திட்டம் எதோ ஒரு சிறு நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் இதற்கு பின்னால் இருக்கும்  பேராபத்தான எரிஉலை திட்டம் மீண்டும் அவர்களை கற்காலத்துக்கே அழைத்து செல்வது போல் உள்ளது.  எரி உலைகள் என்பது பலகோடி செலவழித்து எடுத்து,  ஓடாத படத்தை போன்றது!

ஆரம்பத்தில் பேசப்பட்ட கலவையான (Heterogeneous waste) பயன்படுத்த முடியாத கழிவுகளை, எரிஉலைகளில் போட்டு எரித்து விடலாமே! என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், இந்த எரிஉலைகள் குப்பைகளை மாயாஜாலம் செய்து காணாமல் போக செய்வதில்லை. மாறாக அதை சாம்பல்களாக மாற்றிவிடுகிறது. இது மேலும் அதிக சிக்கலை ஏற்படுத்திவிடும். அவை எரியும் போது வெளியிடும் நச்சு வாயுக்களை தவிர, அதன் சாம்பல் மீண்டும் குப்பை மேட்டை அடைகிறது. அவை காற்றில் மிதந்து, வடசென்னை மக்களின் உடலில் கலந்து விடுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

பயோ மைனிங் வித்தகர்கள் முறைசாரா தூய்மை பணியாளர்கள்

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், கொண்டுவருவதற்கு முன்பு, அங்கே வாழும் மக்களின் கருத்தை கேட்பது அவசியம். அப்படி கொடுங்கையூரில் கொண்டுவரும் திட்டங்களுக்கு அங்கே வசிக்கும் மக்களிடம் சரியான கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தவேண்டும். மாறாக கண்துடைப்பு கூட்டத்தை நடத்தி அந்த திட்டத்தை அனுமதிப்பது மிகவும் தவறான செயலாகும். ஒரு குப்பைமேட்டிற்கான திட்டமானது அங்கே  அருகில் வாழும் மக்களின் நலனுக்காக இருக்கவேண்டும். மாறாக, அவர்களை எதிர்மறையாக பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது. 

இந்த பயோ மைனிங் தொழிநுட்பம், போன்றவற்றை எல்லாம் பேசுவதற்கு பல வருடங்களுக்கு முன்ப முறைசாரா தூய்மை பணியாளர்கள், குப்பைமேடுகளில் இருக்கும் பல மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை அங்கிருந்து எடுத்து மறுசுழற்சி செய்து விட்டனர். இன்றும் அவர்கள் அதை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் அவர்களுக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை, மாறாக குப்பைமேடுகள் உள்ளே நுழைய பல தடைகள் தான் போடப்பட்டுள்ளது. கொடுங்கையூரில் நடக்கும் பயோ மைனிங் திட்டத்தில், அங்கே பல வருடங்களாக குப்பை சேகரிக்கும் முறைசாரா தூய்மை பணியாளர்களையும் இணைத்து அந்த திட்டம் செயல்பட்டால், அது விளிம்பு நிலையில் இருக்கும் அவர்களுக்கு ஒரு பெரும் வலுவாக இருக்கும், மேலும் அது  ஒரு சிறந்த கொடை-தீர்ப்பு மாற்றமாகும் (Just transition).

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and email addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.