நான் வார இறுதிகளில் வனத்திற்குள் சென்று தன்னார்வலர்கள், வன அதிகாரிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதி. சுற்றுச்சூழல் பொறியியல் (M.E Environmental Engineering) படித்திருந்தாலும், சில உண்மைகள் புத்தகங்களில் முழுமையாகப் புரியாது. களத்தில் வேலை செய்யும் போது தான் அவை மனதில் ஆழமாக பதிகிறது. அப்படிப்பட்ட ஒரு கடுமையான உண்மை - நெகிழி (plastic) வனவிலங்குகளுக்கு ஒரு “மெல்லக் கொல்லும் நஞ்சு” (slow poison) என்பதை உணர்தேன். இது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாததால் பல நேரங்களில் கவனிக்கப்படாது. ஆனால் காலப்போக்கில் அது ஒரு உயிரின் முழு உடல்நிலையையும் சிதைத்து மரணத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு தெரிந்த சிலவற்றை பகிர்கிறேன் இங்கு, உதாரணமாக யானைகளைப் பற்றிய சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
யானைகள் வன பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிக்கும் முக்கியமான "சூழல் அமைப்புப் பொறியாளர்கள்"
உலகளவில் உள்ள காட்டு யானைகளில் கிட்டத்தட்ட 60% இந்தியாவில் உள்ளது என்பது இந்த விவாதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. யானைகள் காடுகள் உருவாக மிகவும் முக்கியமான ஒரு காரணி எப்படி என்றால், ஒரு யானைக்கு ஒரு நாளுக்கு 200 முதல் 250 கிலோ வரை உணவு தேவைப்படுகிறது, 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும் . யானை உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு சுமார் இரண்டு நாட்கள் (48 மணிநேரம்) வரை ஆகலாம். யானைகள் உண்ணும் உணவில் சுமார் 40-50 சதவீதம் மட்டுமே செரிமானமாகிறது. மீதமுள்ள விதைகள் அப்படியே சாணத்தின் வழியாக வெளியேற்றப்படுகிறது. யானையின் செரிமானப் பாதையில் உள்ள அமிலங்கள் விதைகளின் கடினமான மேலோட்டை மென்மையாக்குகின்றன. இதனால், இந்த விதைகள் சாதாரண விதைகளை விட மிக வேகமாக முளைக்கும் திறன் பெறுகின்றன. யானையின் சாணம் விதைகளுக்குத் தேவையான மிகச்சிறந்த இயற்கை உரமாக (Fertilizer) பயன்படுகிறது. இது விதைகள் வேகமாக வளர ஊட்டச்சத்து அளிக்கிறது. இதனால் விதைகள் தாய் மரத்தில் இருந்து பல கிலோமீட்டர் தூரத்திற்கு பரவி, புதிய காடுகள் உருவாக உதவுகின்றன.
மேலும், யானைகளுக்கு ரொம்ப நல்ல நினைவாற்றல் இருக்கும் , பழைய ஆறுகள், குளங்கள், பருவமழை நீர் தேங்கும் இடங்கள் இதை தலைமுறைகளாக நினைவில் வைத்துக்கொள்கின்றன. தண்ணீரின் வாசனையை தூரத்தில் இருந்து உணர முடியும் (யானை தும்பிக்கை சுமார் 40,000 முதல் 1,00,000 தசை நார்களால் ஆனது), ஈரமான மண், செடிகளை வைத்தும் தண்ணீரை கண்டறிகிறது . ஒரு யானை சாதாரணமாக உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் தினமும் சுமார் 10 முதல் 25 கிலோமீட்டர் வரை நடக்கும். தண்ணீர் மற்றும் உணவு கிடைப்பதைப் பொறுத்து, அவை சில நேரங்களில் 300 கி.மீ க்கும் அதிகமான தூரம் பயணிக்கின்றன. யானைகள் செல்லும் பாதைகள் கோடையில் பிற விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க உதவுகிறது. இவற்றால் தான் “யானைகள் வனத்தின் பாதுகாவலன் என்றும் , வனத்தை உருவாக்கும் பொறியாளன்” எனவும் கூறப்படுகின்றன.
காட்டு யானைகளின் பாதங்கள் அதன் உடல் எடையைத் தாங்கும் வகையில், மென்மையான கொழுப்பு மற்றும் நெகிழ்வான திசுக்களால் ஆன ஒரு குஷன் பஞ்சுபோன்ற திசுக்களால் (soft, cushion-like fatty tissue) ஆனவை. இவற்றுக்குக் கீழே ஒருவித விரிவடையும் தன்மை கொண்ட மெத்தை போன்ற அமைப்பு (elastic pad) உள்ளது. இதனால், சத்தம் வராமல் (silent walkers) நடக்க உதவுகிறது. பலர் கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசி உடைக்கின்றனர். தரம் பிரிக்கப்படாத கழிவுகளில் இருக்கும் கண்ணாடித் துண்டுகள் அவைகளின் பாதங்களில் பதிந்து ஏற்படும் ஆழமான காயங்கள், பாதத்தின் தோல் மடிப்புகளில் தொற்றுநோய்களை உருவாக்கி, நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சீழ்க்கட்டி (Abscesses) ஏற்பட்டு சில சமயங்களில் உயிரிழந்து போக நேரிடுகிறது. இந்த பாதிப்புகள் குறித்து ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’ (கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி - யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக இவர் உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றுள்ளது) பற்றிய நூலிலும் காணலாம்.
உண்மைத் தகவல்கள் :-
இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்லக்காடு திறந்த குப்பைக் கிடங்குகளில் உணவு தேடும் யானைகள், மனிதக் கழிவுகளுடன் சேர்ந்து அதிக அளவில் மட்காத பிளாஸ்டிக் மற்றும் பல அடுக்கு பொதியிடும் பொருட்களை உட்கொள்வது பதிவாகியுள்ளது. தி கார்டியன் (2022) வெளியிட்ட தகவலின்படி, கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதியில் சுமார் 20 யானைகள் பிளாஸ்டிக் உட்கொள்ளுதல் தொடர்பான சிக்கல்களால் உயிரிழந்துள்ளன. இலங்கையில் யானைகள் அடிக்கடி வருகை தரும் 54 திறந்த குப்பைக் கிடங்குகள் பதிவாகியுள்ளன. தினசரி சுமார் 1,000 யானைகள் குப்பைகளில் உணவு தேடும் பழக்கத்தில் ஈடுபடுகின்றன என பாதுகாப்பு ஆய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. உடற்கூராய்வுகளில், செரிமானக் குழாய்களில் பிளாஸ்டிக் தேக்கம் காணப்பட்டு, குடல் அடைப்பு, சத்து உறிஞ்சும் திறன் குறைவு மற்றும் நீண்டகால பட்டினி போன்ற நிலைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலை உடல் உறுப்புகள் மீது நீடித்த அழுத்தத்தை ஏற்படுத்தி இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கிறது. இது “மெதுவான நஞ்சாக்கம்” என விவரிக்கப்படும் ஒரு நீடித்த உயிரியல் பாதிப்பாகும்.
நம் தமிழ்நாட்டு நிலையிலும் வேறுபாடு இல்லை. குறிப்பாக முதுமலை பகுதியில் மே 2025-ல் நடந்த கர்ப்பிணி யானையின் உயிரிழப்பு இந்த பிரச்சனையின் தீவிரத்தை வெளிப்படுத்தியது. அதன் உடற்கூராய்வில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அலுமினியம் ஃபாயில் இருப்பது கண்டறியப்பட்டது. உணவுடன் சேர்ந்து உட்கொண்ட இந்த நச்சுப் பொருட்கள் அதன் உடல் உறுப்புகளை பாதித்து, இறுதியில் உயிரிழப்பை ஏற்படுத்தின. மேலும், அந்த யானையின் கருப்பையில் வளர்ந்து கொண்டிருந்த (சுமார் 12-15 மாத வயதுடைய ) ஆண்சிசுவும் உயிரிழந்தது. இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. மாறாக, நம் கழிவு மேலாண்மை முறையில் உள்ள பெரிய குறைபாட்டின் அறிகுறி. ஜூலை 2025-ல் தமிழக வனப்பகுதிகளில் நடத்தப்பட்ட ஒரே நாள் தூய்மைப் பணியில் மட்டும் 55 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. என்பது இந்த பிரச்சனையின் பரவலான தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த அளவிலான கழிவு, வன எல்லைகளில் மற்றும் சுற்றுலா பகுதிகளில் இருந்து தொடர்ந்து வனத்திற்குள் நுழைகிறது என்பதற்கான நேரடி சான்றாகும்.
வனவிலங்குகள், உணவுக்காக, மனிதர் பகுதிகளுக்கு அருகிலுள்ள குப்பைகளை கொட்டும் இடத்திற்கு வரும்போது, அதனுடன் இருக்கும் பிளாஸ்டிக் அவற்றின் உயிருக்கு மறைந்த நஞ்சாக மாறுகிறது. உட்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் குடல்களில் தேங்கி செரிமானத்தை தடுத்து, மெதுவாக உடல் உறுப்புகளை சேதப்படுத்தி இறுதியில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இது யானைகள் மட்டும் அல்லாமல் மான்கள், கரடிகள், காட்டெருமைகள், குரங்குகள் உள்ளிட்ட பல உயிர்களையும் பாதிக்கிறது. மேலும், மைக்ரோபிளாஸ்டிக் மண், நீர், தாவர வளர்ச்சி மற்றும் முழு உணவுச் சங்கிலியையே பாதித்து, காட்டு தீ அபாயத்தையும் அதிகரிக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களின் நிலைத்தன்மை தான் இந்த பிரச்சனையின் மையம். சில பிளாஸ்டிக் பைகள் 10–20 ஆண்டுகளில் சிதைவடையலாம். ஆனால் பிளாஸ்டிக் பாட்டில்கள், டயப்பர்கள் போன்றவை சுமார் 450 ஆண்டுகள் வரை நீடிக்கின்றன. அவை முழுமையாக மக்காமல், மைக்ரோபிளாஸ்டிக் துகள்களாக மாறி நீண்டகாலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் கொண்டே இருக்கும். இதனால், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், பல தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல தூய்மை பணிகளை நான் செய்த போது அதில் ஸ்பூன், தண்ணீர் பாட்டில் குப்பிகள், மிட்டாய் காகிதம், தடை செய்யப்பட்ட புகையிலை கலவை பாக்கெட்டுகள், மது பாட்டில்கள், டயப்பர் என சொல்லிக்கொண்டே போகலாம். அதிகமாக ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் நெகிழி குப்பைகளே அதிகம் இருக்கும். ஒரு ஒரு முறையும் தூய்மை பணியை முடித்து திரும்பும் பொழுது மீண்டும் அந்த இடங்களில் குப்பைகள் வீசப்பட்டிருக்கும். இதை பார்க்கும் பொழுது கேள்விகள் பல்லாயிரம் எழும். யானைகளை வனத்தில் பார்க்கும் கடைசி தலைமுறை நாமாக தான் இருப்போமோ என்ற ஒரு பெரிய அழுத்தம் மனதில் பதிந்தது. தீர்வு, குப்பை உருவான பிறகு அல்ல, உருவாகும் இடத்திலேயே தொடங்க வேண்டும்.
திறந்த குப்பை கிடங்குகள், தவறான கழிவு மேலாண்மை மற்றும் அலட்சியமான பயன்பாடு இந்த பிரச்சனையை தீவிரமாக்குகின்றன. இந்தியாவில் Solid Waste Management Rules 2026 மற்றும் Plastic Waste Management Rules 2016 உள்ளன என்றாலும், செயல்படுத்தலில் பெரிய இடைவெளி உள்ளது. CPCB தரவுகளின்படி, வருடத்திற்கு சுமார் 3.4 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவு உருவாகிறது. இது மேலாண்மை அல்ல, கட்டுப்பாட்டு சவால் என்பதை காட்டுகிறது.ஒற்றைப் பயன்பாட்டு நெகிழி உற்பத்தியை குறைத்தல், விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) முறையை கடுமையாக அமல்படுத்தல், மற்றும் உற்பத்தியாளர்களின் முழுப் பொறுப்பை உறுதி செய்தல் அவசியம். வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தி, நெகிழி நுழைவை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் மூலத்திலேயே கழிவுகளை பிரிக்கும் முறை மற்றும் மூடிய சுற்று கழிவு மேலாண்மை (closed-loop waste system) நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும். முக்கியமாக, விழிப்புணர்வு மட்டும் போதாது — அது உருவாகும் இடத்திலேயே கட்டுப்பாடு தேவை. நுகர்வு பழக்க மாற்றமும், நடைமுறை விதிமுறைகளும் இல்லாமல் இந்த பிரச்சனைக்கு தீர்வு சாத்தியமில்லை.
“ஒரு நெகிழி பை, சில நிமிடம் வசதி,
ஆனால் இயற்கைக்கும், உயிர்களுக்கும் ஆயுள் முழுவதும் வலி”.

கொழும்புக்குக் கிழக்கே சுமார் 130 மைல் தொலைவில் உள்ள பள்ளக்காடு கிராமத்தில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் காட்டு யானை ஒன்றின் உடல் / Source

காட்டில் உள்ள ஒரு யானையின் வலிமிகுந்த கால் தொற்றிற்குச் சிகிச்சை அளித்தல் / Source

நெகிழிக் கழிவுகளை உட்கொண்டதால் கர்ப்பிணி யானை உயிரிழந்தது; அதன் வயிற்றில் இருந்த 12–15 மாதக் குட்டியும் உயிரிழந்தது / Source
மேலே உள்ள சில புகைப்படங்கள் யானைகளின் நிலை குறித்து விளக்குகிறது.
வனத்தின் வழியாக செல்லும் நாம் அழகை ரசிக்கிறோம் , அது நல்லதே. ஆனால் விழிப்புணர்வு இன்றி நெகிழியை வீசுவதும், உணவு கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர்களின் இயற்கை உணவுச் சங்கிலி-யை தடை செய்வதும் நாம் அறியாமல் செய்யும் கொலை.
“யோசிப்போம் - அவர்களும் இந்த உலகின் உயிர்கள்.
அவர்களின் மௌனமான கண்ணீரும் கூட, நம் தவறுகளைச் சொல்கிறது.”
---
Add new comment