சைக்கிள் டாக்டரின் கதை

Fri, 03/02/2023 - 15:26

80ஸ் கிட்ஸ்களின் புல்லட்டாக இருந்த சைக்கிள்களை ரிப்பேர் செய்யும் சைக்கிள் ரிப்பேர்காரர்களின் கதையைதான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். ஆமாம், நம்மில் பலருக்கு தெரியாத, சிலருக்கு படித்ததும் பால்ய நினைவுகளை முன்னிறுத்தப்போகும் கட்டுரைதான் இது. 1960 களில் பல இளைஞர்களின் புஷ்பக வாகனமாக சைக்கிள் இருந்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? அதிலும், அதை வாங்கக்கூட இயலாத வகையில் இங்கு பொருளாதார நிலை நிலவியது என்பது விசித்திர உண்மை.

பலருக்கு சைக்கிள் ஓட்டுவதே பெரிய சாதனையாக இருந்ததாம். சைக்கிள் ஓட்ட பயந்து வாழ்க்கை முழுக்க சைக்கிள் பக்கமே திரும்பாதவர்களும் உண்டு. இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் சைக்கிளை தனது குடும்ப உறுப்பினருள் ஒருவராகவே பாவித்த கதாபாத்திரங்களும் உண்டு. தினமும் அதை துணியால் துடைத்து  அழுக்கில்லாமல் பளபளவென வைத்திருப்பதே சைக்கிள் உரிமையாளர்களின் அலாதியான பொழுதுபோக்கு. சிறுவர்கள் அப்பா அல்லது அண்ணன்மார்கள் மதிய வேளையில் சாப்பாட்டுக்காக வீட்டு வாசலில் கொண்டுவந்து நிறுத்தும் சைக்கிளை, அவர்களிடம் அனுமதி பெறாமல் (கேட்டால் தர மாட்டார்கள் – கீழே போட்டு உடைத்துவிடுவாய் என்று கர்ஜிப்பார்கள்) ரகசியமாக சிறிது தூரம் தள்ளிச் சென்று பிறகு குரங்கு பெடல் அடித்து ஓட்டிப் பழகுவார்கள். நன்றாக ஓட்டத் தெரிந்துவிட்டால் சீட்டின் மீது அமர்ந்து ஆரோகணித்து ஒய்யாரமாக ஓட்டுவார்கள். கடை வீதிகளிலும் நெரிசல் மிக்க சாலைகளிலும் பெல்லை விடாமல் அடித்துக்கொண்டு ஓட்டுவது, பெரிய கூட்டத்தில் ஆட்களுக்கு நடுநடுவில் புகுந்து, யார் மீதும் இடிக்காமல் ஓட்டுவது, பெரிய சாகசம். யாருமில்லாத இடங்களில் இரண்டு கைகளையும் ஹாண்டில் பாரிலிருந்து எடுத்துவிட்டு இடுப்பை ஆட்டாமல் அப்படியே நேராக ஓட்டிப் பழகும்போது ஏற்படும் வீர உணர்ச்சிக்கு ஈடாக எதுவும் இருந்ததில்லை. இப்படியெல்லாம் சைக்கிளை விளையாட்டுக் கருவியாக, பொழுதுபோக்குக்குத் தோழனாக, உயிர் காக்கும் உதவியாளாக, வேலைக்குப் போக அன்றாட நண்பனாக, குடும்பங்களைக் காப்பாற்றும் டெலிவரி வேலைகளுக்குச் சரக்கேற்றிச் செல்லும் வாகனனாகவெல்லாம் சைக்கிளுடன் வாழ்ந்தவர்கள் அனேகம். அதுமட்டுமல்ல அந்தகால போலீஸ்காரர்களின் ரோந்து வாகனமே சைக்கிள் தான். நாம் நமது பள்ளிப்பருவங்களில் சைக்கிளில் செல்லும்போது டயர்களுக்கு காற்றடிக்கவோ, பஞ்சர் ஒட்டவோ அதிகம் மெனக்கெட்டதில்லை; ஏனெனில் பெரும்பாலும் எல்லாத்தெருமுனைகளிலும், முக்கிய சந்திப்புகளிலும் சைக்கிள் ரிப்பேர் கடை கட்டாயம் இருக்கும். ஆனால் இன்றோ அவ்வாறான சைக்கிள் கடைகளை அடையாளம் காண்பதே சிரமமாகியிருக்கிறது. இது குறித்து சைக்கிள் கடைக்காரர்களின் கருத்துகளை அறிய முற்பட்டேன்.

அவ்வாறாக பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் ஹவுசிங் போர்டு குடியிருப்பிற்கு வெளியே சைக்கிள் ரிப்பேர் கடை நடத்திவரும் முருகன் அண்ணனை சந்தித்த போது ‘உன்ன எங்கயோ பாத்த மாதிரி இருக்கே தம்பி’ என உரையாடலை தொடர்ந்தார். நானும் ‘இங்கு பக்கத்தில் உள்ள மடுமாநகர் பகுதியில் தான் வசிக்கிறேன், நான் 11ம் வகுப்பு படிக்கும் போது அரசு கொடுத்த இலவச சைக்கிளை உங்க கடையில தான் ரிப்பேர் பன்னேன்’ எனக்கூறினேன். ‘ஓ அப்படியா?’ என கேட்டுக்கொண்டே ஒரு சைக்கிளுக்கு வீல் பென்டு எடுத்துக்கொண்டிருந்தார். ‘அண்ணா நான் சைக்கிள் ரிப்பேர் கடைகாரர்களை பத்தி ஒரு BLOG எழுதுறேன் உங்ககிட்ட கொஞ்சம் தகவல் கேட்டுக்கலாமா? எனக்கேட்டதும், சட்டென ‘நான் படிக்காதவன் தம்பி, என்கிட்ட கேட்டு எழுதி பெயிலாயிட போற-னு’ சிரித்த முகத்துடன் பதில் சொல்ல ஆரம்பித்தார். ‘உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?’ என்றேன் நான்.

“என்ன பத்தி சொல்ல என்ன இருக்கு தம்பி. இது எங்க அப்பாவோட தொழில். படிப்பு ஏறல; அதனால நானும் இதே தொழில கத்துக்கிட்டு வண்டிய ஓட்ட ஆரம்பிச்சிட்டேன். ஆனா ஒன்னு தம்பி - இந்த தொழில வச்சித்தான் என் பையன படிக்க வச்சேன். என் பொண்ண கட்டிக்குடுத்தேன், எல்லாமே.” என தொடர்ந்தார். “ஆரம்பத்துல சின்ன பையனா இருக்கும் போது, ஸ்கூல் லீவுடைம்ல அப்பாவுக்கு ஒத்தாசையா இருக்க கத்துக்கிட்டேன். ஆனா நாளாக  நாளாக இதுமேல ஒரு INTEREST வந்துச்சி.. படிப்பு ஏறல அதனால இதையே தொழிலா மாத்திக்க வேண்டிய கட்டாயம். அதனால FULL-ஆ கத்துக்கிட்டு அப்பாக்கூடவே கடைல இருந்திட்டேன். எனக்கு கல்யாணம் ஆச்சு அந்த நேரம் பாத்து அப்பாவுக்கும் ஒடம்பு முடியாம படுத்த படுக்கையா ஆயிட்டாரு, அதனால கடைய நானே பாத்துக்க வேண்டிய சூழ்நில. அப்பா செத்து 5 வருசம் ஆகுது. நான் தான் கடைய பாத்துக்குறேன்” என்றபடி பேசிக்கிட்டே தனது வேலையை செய்துக்கொண்டிருந்தார். “அண்ணா, இந்த வருமானம் போதுமானதா இருக்கா? கொரோனா வுக்கு அப்புறம் இப்ப தொழில் எப்புடி இருக்கு?’ எனத் தொடர்ந்தேன் நான். அதற்கு அவர் “எங்க தம்பி கொரோனாவுக்கப்புறம் பரவாயில்ல ஆனா முன்ன மாதிரி இல்ல தம்பி. கவர்மென்ட்டு பிரீ சைக்கிள் குடுக்குறப்ப மட்டும் கொஞ்சம் நல்ல வியாபாரம் இருக்கும். மத்த நாள்ல ரொம்ப கஷ்டம் தான். முன்னாடில்லாம் சைக்கிள் தான் பிரதானமா இருந்துச்சி இப்போ யாரு தம்பி சைக்கிள்லாம் ஓட்டுறா? ஸ்கூல் பசங்க கூட லட்ச ரூபா மதிப்புள்ள பைக்க ஓட்டிக்கிட்டு போறாங்க. மொத்தமா பாத்தா இப்பொல்லாம் சைக்கிளுக்கும் மதிப்பில்ல, எங்களுக்கும் மதிப்பில்ல. மனுசன் ஒடம்புல பிரச்சனைனு வந்து  வைத்தியம் பாத்து சரிபண்றவங்கள டாக்டர்னு சொல்றோம். அப்போ சைக்கிளுக்கு வைத்தியம் பாக்குற எங்கள சைக்கிள் டாக்டர்னு தானே சொல்லனும்” அப்படின்னு அவர் சொன்னது என்னை சிந்திக்க வைத்தது.

இவ்வாறு சைக்கிள் ரிப்பேர் கடைகளின் எண்ணிக்கை குறைவதால் சைக்கிள் உபயோகிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து சைக்கிள் உபயோகிப்பாளரும் சமூக ஆர்வலருமான வியாசர்பாடி பகுதியை சேர்ந்த திரு.தனக்கோட்டி அவர்களிடம் கேட்டபோது, முன்பெல்லாம் வேறு எந்த மாற்றுமின்றி சைக்கிளை மட்டுமே போக்குவரத்துக்கான வாகனமாக கொண்டிருந்தோம். ஆனல் தற்போதோ மலிவு விலையில் மாதாமாதம் பணம் கட்டும் வகையில் பைக்குகள் மார்க்கெட்டில் குவிந்துக்கிடக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சைக்கிள் உபயோகிப்பதையே கவுரவ குறைச்சலாக எண்ணக்கூடிய இளையத்தலைமுறையினர் சிலர் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிவருவதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று, எனக் கூறினார் 

road safety

சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள சிறு சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டிக்கொண்டிருக்கும் சைக்கிள் ரிப்பேர் கடைக்காரர் 

தற்போதைய சூழலில் சைக்கிள் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், ஒருபுறம் பொழுதுபோக்கிற்காக சைக்கிளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை காணமுடிகிறது. ஆயினும் அவர்கள் இதுபோன்ற தெருவோர சிறு சைக்கிள் கடைகளில் சைக்கிளை ரிப்பேருக்கு எடுத்துச்செல்வதில்லை. மாறாக அந்த குறிப்பிட்ட பிராண்ட் சைக்கிளின் சர்வீஸ் சென்டர்களையே நாடிச்செல்கின்றனர். ஆம், இவ்வளவு விலைஉயர்ந்த சைக்கிள்களை இந்த சிறுகடைகளில் கொடுத்து ஏதேனும் தவறு நிகழ்ந்துவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சமும், இது போன்ற பழைய சைக்கிள் ரிப்பேர் கடைக்காரர்களுக்கு புதிய தொழில்நுட்ப சைக்கிள்களை ரிப்பேர் செய்யுமளவிற்கு தொழில்நுட்பங்களை சார்ந்த திறன் குறைவு போன்றவையே முக்கிய காரணிகளாய் இருக்கின்றன. மேலும் இன்றும் கூட இரவு காவலர்கள், தபால்காரர்கள், பால் மற்றும் பேப்பர் போடுபவர்கள், கட்டுமானதொழிலாளர்கள் , சில பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட சிலர் வாழ்வாதாரத்திற்காக சைக்கிள்களில் பயணிப்பதை பல சமயங்களில் பார்க்க முடிகிறது.

பெரும்பாலும் விலையுயர்ந்த சைக்கிள்களை உபயோகிப்பவர்கள் எந்தவொரு பழுதுநீக்கத்திற்கும் தயாரிப்பாளரின் பிரத்யேக கடைகளையே நாடினாலும், சிறு சிறு பழுதுகளுக்கு சிறு சைக்கிள் ரிப்பேர் கடைக்காரர்களையே நாடிச்செல்ல வேண்டியுள்ளது. மேலும் வாழ்வாதாரத்திற்காக சைக்கிளை பயன்படுத்துபவர்களும் லோக்கல் சைக்கிள் ரிப்பேர் கடைகளையே நம்பியிருக்கின்றனர். எனவே சைக்கிள் பழுதுபார்க்கும் கடைகள் அத்தியாவசிய சேவையாக உள்ளது. அவர்கள் எண்ணிக்கை குறைந்து இருக்கலாம்; ஆனால் அவை இன்றும் தேவைப்படுகின்றன. அவர்கள் ஒரு இடத்தில் இல்லை என்றால், சைக்கிள் ஓட்டுபவர்கள் அங்கு இல்லை என்பதே நிதர்சனம்.

இத்தகைய சிக்கல்களை களைய, அரசாங்கம் அல்லது சைக்கிள் கிளப்புகள் அல்லது இரண்டும் இணைந்து சைக்கிள் ரிப்பேர் கடைக்காரர்களின் திறன் மேம்பாட்டிற்காக திறன் வளர் பயிற்சிகளை வழங்கலாம். இதன் மூலம் விலையுயர்ந்த சைக்கிள்களை உபயோகிப்பவர்கள் கூட சிறு சைக்கிள் ரிப்பேர் கடைகளை நம்பி தங்கள் சைக்கிள்களை ரிப்பேர் செய்ய முன்வருவர். மேலும் அரசு நலவாரிய உதவிகளில் இது போன்ற சிறு சைக்கிள் ரிப்பேர் கடைகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், குறைந்தபட்சம் முக்கிய சாலை சந்திப்புகளில் சைக்கிள் ரிப்பேர் கடைகள் சேவை இருப்பதை உறுதிசெய்ய முன்வரவேண்டும். இவ்வாறான முயற்சிகள் சைக்கிள் உபயோகிப்பாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைவதால் சைக்கிள் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்புண்டு.

பொதுமக்களும், அரசும், சைக்கிள் உபயோகிப்பதனை பொருளாதார சிக்கன நடவடிக்கையோடு மட்டும் ஒப்பிட்டுப்பார்க்காமல், தற்போதைய காலநிலை மாற்றத்தின் அறிவியல் கண்ணோட்டத்தோடு ஒப்பிட்டுப்பார்ப்பதே இத்தகைய சிக்கல்களை களைவதற்கான ஒரே வழி. மேலும் எரிபொருள் சிக்கனத்திற்கும், பூஜிய கழிவு மேலாண்மைக்கும் வேறெந்த மாற்றுமின்றி ஆபத்பாந்தவனாக திகழ்வது சைக்கிள் மட்டுமே. எனவே சைக்கிள் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையும், சைக்கிள் ரிப்பேர் (டாக்டர்)கடைகளின் எண்ணிக்கையும் குறைவது, சமூகத்தின் அபாய நிலைக்கான ஆரம்பமே. இதனை களைவதன் மூலம் சைக்கிள் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையோடு சேர்ந்து, சைக்கிள் ரிப்பேர்க்காரர்களின் வாழ்வாதாரமும் உயரும்.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and email addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.