Skip to main content

தெருவோர வியாபாரிகளின் பார்வையில் தி.நகர் பாதசாரி வளாகம்

அறிமுகம்

தியாகராய நகர் (தி.நகர்) என்றவுடன் நம் மனதில் முதலில் தோன்றுவது கூட்டமும் நெரிசலும் நிறைந்த தெருக்கள், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் துணிக்கடைகள் மற்றும் பரபரப்பான வணிகச் சூழலும் தான். சென்னை மட்டுமல்லாமல், பல அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தி.நகரை நோக்கி படையெடுக்கக் காரணம், பிரபலமான பெரிய துணிக்கடைகள் மட்டுமல்ல, சிறு சிறு தெருவோரக் கடைகளும் அந்த வணிக ஈர்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்தகைய சூழலில், போக்குவரத்து நெரிசல், பயண அசவுகரியம் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், “பாண்டி பஜார் பாதசாரி வளாகம்” என்ற திட்டம் 2018 ஆம் ஆண்டு சுமார் 40 கோடி ரூபாய் செலவில் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்ட முயற்சியின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாக வணிகர்களின் வருவாய் அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல் மற்றும் பாதசாரி பயன்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவை இருந்தன. ஆனால், இன்றளவும் இந்தப் பிரச்சனைகள் முழுமையாகத் தீர்க்கப்படாமல், தொடர் சவால்களாகவே நீட்டிக்கின்றன என்பதே, சாலையோர வியாபாரிகளாக இருந்து தற்போது பாதசாரி வளாகத்திற்கு இடம்பெயர்ந்துள்ள வியாபாரிகளின் கவலையாக உள்ளது. இத்திட்டத்தின் வரலாறு, தற்போதைய நிலை, பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளை ஆராய, அன்றைய தி.நகரைப் பார்வையிடுவோம். வாருங்கள், அன்றைய தி.நகரைப் பார்ப்போம்.

அன்றைய தி.நகர்

ஆசிரியர் நல்லி குப்புசாமி தம்முடைய தியாகராய நகர் அன்றும்... இன்றும் என்ற நூலில் “பாண்டி பஜாரில் 75 ஆண்டுகளுக்கு முன்பு கடைகள் அவ்வளவாக இல்லை” என்றும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த சொக்கலிங்க முதலியார் என்பவர், பாண்டி பஜாரில் இப்போது கீதா கஃபே இருக்கும் இடத்துக்கு அருகில் பத்துக் கடைகள் கொண்ட ஒரு வணிகக் கட்டடத்தை உருவாக்கினார். அந்தக் கட்டடத்துக்கு ‘பாண்டி பஜார்’ என்று பெயர் சூட்டியவரும் அவரே. இதைத் தொடர்ந்தே இன்று தியாகராயர் சாலையானது பாண்டி பஜார் என்று அழைக்கப்படுகிறது. அப்போது, பாண்டி பஜார் என்ற வணிகக் கட்டடத்தைத் தவிர, பிற பகுதிகள் எல்லாம் வீடுகளாக இருந்தன. அப்போதைய பாண்டி பஜார் கட்டடத்தில் அதன் உரிமையாளரான சொக்கலிங்க முதலியார், ‘பாகீரதி ஆயில் மில்ஸ்’ என்ற கடையினையும் நடத்தி வந்தார். சுப்பிரமணிய ஐயர் என்பவர் ஒரு சைக்கிள் கடை வைத்திருந்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், பாண்டி பஜாரின் பெயர்க்காரணத்தினையும், அன்றைய தி.நகரின் அமைதியான குடியிருப்பு சூழலினையும் நம்மால் அறிய முடிகிறது.

அன்றைய தி.நகர், இன்றைய பரபரப்பான வணிக மையத்திலிருந்து முழுவதுமாக மாறுபட்டு, அமைதியான குடியிருப்புப் பகுதியாகவும், வெகு சில வணிக நிறுவனங்களை மட்டுமே கொண்ட பகுதியாகவும் இருந்தது என்பதும், பாண்டி பஜார் என்ற பெயர் ஒற்றை வணிகக் கட்டடத்துடன் தொடங்கி, பின்னர் முழு பகுதிக்கும் பரவியது என்பதும் ஆச்சரியமே! இந்தப் பகுதி படிப்படியாக வணிக மையமாக உருவெடுத்து, சென்னையின் மிக முக்கியமான ஷாப்பிங் மையங்களில் ஒன்றாக மாறியது காலத்தின் வரப்பிரசாதம்.

ஏன் தேவை தெருவோர வியாபாரிகள்?

தெருவோர வியாபாரிகள் தி.நகரின் வணிக ஈர்ப்பில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர். இவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள், பெரிய கடைகளில் கிடைக்கும் விலையுயர்ந்த பொருட்களுக்கு மாற்றாக, மலிவு விலையில் கிடைப்பவை. பேரம் பேசுதல், உள்ளூர் உணவு வகைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்கள் ஆகியவை தெருவோரக் கடைகளின் தனித்துவமாக திகழ்கின்றன. மேலும் இவை பொருளாதார ரீதியாகவும் பல்வேறு தரப்பு மக்களை கவர்ந்துள்ளன.

மேலும், தெருவோர வியாபாரிகள் தி.நகருக்கு ஒரு தனி கலாச்சார அடையாளத்தை வழங்குவதோடு, இவர்களுடனான பேரம் பேசும் முறைகள், சகஜமான உரையாடல்கள் மற்றும் அவர்களின் விற்பனை யுக்திகள் ஆகியவை  இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவர்கள் அறிந்திராத ஒரு குதூகலமான அனுபவத்தை பெற்றுத்தருகின்றன. இந்த அனுபவம், தி.நகரை ஒரு வணிக மையமாக மட்டுமல்லாமல், ஒரு சமூக மையமாகவும் மாற்றியுள்ளது என்றால் அது மறுக்கமுடியாதது. ஆனால், இக்கடைகளினால், போக்குவரத்து நெரிசல் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு போன்ற பிரச்சனைகள் இருப்பதாக சொல்லி தி.நகர் பாதசாரி வளாகம் அமைக்கப்பட்டது.

தற்போதைய சூழல்

தி.நகர் பாதசாரி வளாகம், தியாகராயர் சாலையின் கிளார்க்சன் வீதி மற்றும் வெங்கடநாராயண வீதிகளுக்கு இடையே சுமார் 1 கி.மீ. நீளம் கொண்ட பகுதியில் அமைந்துள்ளது. இந்த வளாகமானது சற்று உயர்த்தப்பட்ட நடைபாதைகள், பாதசாரிகளுக்கான பிரத்யேக தொகுதி (Exclusive pedestrian zone), பல்வேறு வகையிலான நாட்டு மரங்கள் (எ.கா., மகிழமர், புன்னை) மற்றும் எதிர்கால சாலைப் பணிகளுக்கு ஏதுவான வகையில் பயன்பாட்டு குழாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் முத்தாய்ப்பாக 2024 ஆம் ஆண்டு 256 கார்கள் மற்றும் 550 இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் திறன் கொண்ட பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் (Multi Level Car Park - MLCP) இயங்கத் தொடங்கியது. அது, வாகனங்களை சாலையில் பார்க்கிங் செய்வதிலிருந்து தவிர்த்து, சாலைகளில் பாதசாரிகளின் பயன்பாட்டை உறுதி செய்ய உருவாக்கப்பட்டதாகும். ஆனால், இந்த வசதியானது முழுமையாகப் பயன்படுத்தப்படாமல், இன்றளவும் சாலையோர வாகன நிறுத்தமே இப்பகுதியில் தொடர்கிறது.

இச்சூழலில், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம், சென்னை போக்குவரத்து காவல்துறை (GCTP) விதிகளை மீறி சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களை இழுத்துச் சென்று அபராதம் விதித்துள்ளது. ஆனால், பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) இந்த நடவடிக்கையில் பங்கேற்கவில்லை. இச்செயல் அரசு நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாமைக்கு உதாரணமாக உள்ளது. இதற்கிடையில், இரு வாரங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஆக்கிரமிப்பு அகற்றும் முயற்சிகளின் பயனாய் 60-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத கடைகளை அகற்றி, அபராதங்களை விதித்து, நடைபாதைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பிரச்சனைகள்
  1. வாகன நிறுத்த விதிமீறல்கள்: இலவச MLCP இருந்தபோதும், கடைக்காரர்கள், விநியோக பணியாளர்கள் (Delivery workers) மற்றும் வாடிக்கையாளர்கள் சாலையோர வாகன நிறுத்தத்தை இன்றளவும் தொடர்கின்றனர். இது சாலைகளில் பாதசாரிகளுக்கான உரிமையினை பறிக்கும் செயலாக உள்ளது.
  2. போக்குவரத்து நெரிசல்: குறுகிய அணுகு வழிகளில் (Service roads) இரு வழி போக்குவரத்தானது மேலும் போக்குவரத்து நெரிசலை அதிகரிப்பதோடு பாதசாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.
  3. அணுகல் குறைபாடுகள்: மாற்றுத்திறனாளிகளுக்கான தொட்டுணர் பலகைகள், சரிவு பாதைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட பேருந்து நிறுத்தங்கள் இல்லாதது மாற்றுத்திறனுடையோர் இப்பகுதியினை பயன்படுத்துவதில் பெரும் தடையாக உள்ளது.
  4. வியாபாரிகள் மறு குடியமர்வு2013ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின் படி, தெருவோர வியாபாரிகள், மாநகராட்சியின்   தெருவோர வ்யாபாரிகளுக்கான பிரத்யேக வளாகத்திற்கு மாற்றப்பட்டனர். ஆனால், பலரும்  அதை பயன்படுத்துவதற்குத் தயங்கி, சாலையோர விற்பனைக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
  5. பராமரிப்பு சவால்கள்: தூய்மையன பராமரிப்பு, மின் விளக்குகளை பழுதுபார்த்தல் மற்றும் சுற்றுசூழல் பராமரிப்பு ஆகியவை பட்ஜெட் மற்றும் தளவாட குறைபாடுகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரச்சனை தீர்ந்ததா?

பாதசாரி வளாகத்தின் அறிமுகம், தி.நகர் பகுதியில் நடைபயண அனுபவத்தை ஓரளவு மேம்படுத்தியிருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகள் இன்னும் முழுமையாகத் தீர்ந்தபாடில்லை. MLCP அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும், சாலையோர வாகன நிறுத்தம் தொடர்கிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் முயற்சிகள் தற்காலிக தீர்வுகளாக மட்டுமே உள்ளன. மேலும் வியாபாரிகளின் மறு குடியமர்வு முழுமையாக வெற்றி பெறவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. மேலும் பராமரிப்பு குறைபாடுகள் பிளாசாவின் நீண்டகால நிலைத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

தீர்வுகள் என்னென்ன?

தி.நகர் பாதசாரி வளாகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க, அப்பகுதியின் சாலையோர வியாபாரிகள் பின்வரும் தீர்வுகளை குறிப்பிடுகின்றனர்:

  1. வாகன நிறுத்த அமலாக்கம்:
    • MLCP பயன்பாட்டை ஊக்குவிக்க, முதல் ஒரு மணி நேரத்திற்கு இலவச நிறுத்தம் அல்லது குறைந்த கட்டணம் வசூலிக்கலாம்.
    • சாலையோர வாகன நிறுத்தத்திற்கு கடுமையான அபராதங்களை அமல்படுத்தி, தொடர்ந்து கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  2. போக்குவரத்து மேலாண்மை:
    • அணுகு வழிகளை ஒரு வழி போக்குவரத்து முறையாக (One way route) மாற்றி, நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கலாம்.
    • பாதசாரி தொகுதிகளில் (Pedestrian Zone) சிக்னல் விளக்குகளை (Signals) அமைத்து, பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
  3. அணுகல் மேம்பாடு (Accessibility improvement):
    • மாற்றுத்திறனாளிகளுக்கான தொட்டுணர் பலகைகள், சரிவு பாதைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட பேருந்து நிறுத்தங்களை உடனடியாக அமைப்பதன் மூலம் மாற்றுத்திறனாளிகளும் வசதியாக பிளாசாவினை பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம்.
    • இந்த வசதிகளை அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.
  4. வியாபாரிகள் மறு குடியமர்வு:
    • பிளாசாவில் பிரத்யேக வியாபார மண்டலங்களை உருவாக்கி, தெருவோர வியாபாரிகளுக்கு முறையான இடங்களை ஒதுக்க வேண்டும்.
    • வியாபாரிகளுக்கு குறைந்த வாடகையில் கடைகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
  5. பராமரிப்பு மேம்பாடு:
    • தூய்மையான பராமரிப்பு, மின் விளக்குகளை பழுதுபார்த்தல் மற்றும் சுற்றுசூழல் பராமரிப்பு  போன்ற பணிகளை மேற்கொள்ள நிரந்தர ஒப்பந்ததாரர்களை நியமிக்க வேண்டும்.
    • மேற்படி பராமரிப்பு செலவுகளுக்கு உள்ளூர் வணிகர்களிடமிருந்து நிதி பங்களிப்பு பெறலாம்.
  6. பொது விழிப்புணர்வு:
    • பிளாசாவின் பயன்பாடு மற்றும் விதிமுறைகள் குறித்து அருகாமையிலுள்ள குடியிருப்பாளர்கள், கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகளிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்த வேண்டும்.
    • உள்ளூர் குடியிருப்பாளர்களை ஈடுபடுத்தி, பிளாசாவை பொது இடமாக பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
முடிவுரை

தி.நகர் பாதசாரி வளாகம், சென்னையின் நகர புதுப்பித்தல் முயற்சிகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தாலும், அடர்த்தியான வணிகப் பகுதிகளை மறுவடிவமைப்பதில் உள்ள சவால்களை இது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. இத்திட்டம், பாதசாரிகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நகர அழகியலை உயர்த்துவதற்கும் ஒரு முக்கியமான முயற்சியாக உள்ளது. ஆனால், வாகன நிறுத்த விதிமீறல்கள், ஆக்கிரமிப்புகள், அணுகல் குறைபாடுகள், மற்றும் பராமரிப்பு சவால்கள் ஆகியவை இதன் முழுமையான வெற்றியைத் தடுக்கும் தடைகளாக உள்ளன.

பிளாசாவின் நீண்டகால வெற்றிக்கு, அமலாக்கத்தை சமநிலைப்படுத்துதல், உறுதியான பராமரிப்பு முறைகளை உருவாக்குதல் மற்றும் குடியிருப்பாளர்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்பை உறுதி செய்தல் ஆகியவை அவசியம். இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால், தி.நகர் பாதசாரி வளாகம், சென்னையின் துடிப்பான, அணுகக்கூடிய, மற்றும் நீடித்த பொது இடமாக மாறி, நகரத்தின் வணிக மற்றும் கலாச்சார அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும்.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and email addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.