கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இருந்து ஒரு கி.மீக்குள் அரசு மருத்துவமனையோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையமோ இல்லை ஆனால் கிடங்கில் இருந்து 500 மீ. தொலைவில் டாஸ்மாக் இருக்கிறது. கிடங்கில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் காவல் நிலையம் இருக்கிறது அங்கு செல்லும் வழிகளிலெல்லாம் புகை பழக்கத்திற்கு பீடி, சிகரெட் எனும் பொருள் எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. அது வயது குறைந்தவர்களுக்கும் அதாவது 18 வயத்துக்குட்பட்டோருக்கும் பாரபட்சமின்றி விற்கப்படுகிறது. இந்திய அரசின் COTPA ACT - 2003 (Cigarettes and Other Tobacco Products Act) -ன் படி பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் இருந்து 100 மீ. தொலைவில் புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது. 200 மீ. தொலைவிற்குள் புகைபிடித்தல் கூடாது, அப்படி மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அறிவுறுத்துகிறது. ஆனால் இது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. ஏற்கனவே குப்பை கிடங்கில் இருந்து வரும் நச்சு காற்று உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்த கூடியது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. கூடுதலாக, சிகரெட்டின் புகையும் கலப்பதனால் மேலும் அபாயங்கள் நேர வாய்ப்புகள் இருக்கிறது.

கிடங்கிற்கு வரும் குப்பைகளில் சிறு சிறு சிகரெட், பீடி & சுருட்டு போன்ற போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்ட மீதி துண்டுகளாக(Cigaret Butt) குப்பைகளுடன் குப்பையாக பிரிக்கப்படாமல் வந்து குவிக்கப்படுகின்றன. அங்கு குப்பை எடுப்பதற்காக வரும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறிய அளவே என்றாலும் காசு இல்லாமல் கிடைக்கிறது என்ற காரணத்தினால் அதை எடுத்து தூசியினை தட்டிவிட்டு புகைக்கின்றனர். பெரியவர்கள் பயன்படுத்துவதை பார்க்கும் சிறுவர்கள் தாங்களும் அந்த புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகின்றனர். அதோடு கிடங்கில் இருந்து எடுத்து சென்று மற்ற சிறுவர்களுடனும் பகிர்ந்துக்கொள்கின்றனர். கிடங்கை சுற்றியுள்ள சிறுவர்களுக்கு சிகரெட் விற்கப்படாமலேயே எளிதாக கிடைக்கும் நிலையில் இருக்கிறது. என்னென்ன ஆபத்துகள் என்று அறியாமல் அவர்கள் தினமும் இதை உட்கொள்வது அவர்களின் உடல் நலனை பாதிக்கிறது புகைபிடித்தல் பற்றிய போதிய விழிப்புணர்வும் இல்லை, விழிப்புணர்வு இருப்பவர்களும் அதை உணர்ந்ததாக தெரியவில்லை. பெற்றோர்கள் அற்ற குழந்தைகளும், பெற்றோர்களின் வயோதிக காரணத்தினாலும் குப்பை எடுக்க செல்லும் சிறார்களுமாக இருப்பதால் அதில் இருந்து அவர்களை தடுப்பதற்கான சூழலோ அல்லது விலக்குவதற்கான சூழலோ இல்லை.
பொதுவாக ஒவ்வொரு நாளும் சிகரெட் புகைக்கப்பட்டு அதன் அடித்தண்டு கழிவு லட்சக்கணக்கில் உருவாகிறது. இதில் அன்றாட வாசிகள் பீடி & சுருட்டு போன்ற மற்ற வகையும் பயன்படுத்துகின்றனர். இப்படி எதாவது ஒரு வகையில் புகைப்படும் புகையிலை பொருட்களை பயன்படுத்திய பிறகு அதன் அடித்தண்டை பற்றிய அபாயம் தெரியாமல் பெரிதும் கவலையின்றி தெரு ஓரங்களில், சாலை ஓரங்களில், குப்பை தொட்டியில் வீசிவிடுகிறோம். வீட்டில் குப்பை தொட்டியில் கொட்டி அதை தொகுப்பவரிடமோ அல்லது தெருமுனை குப்பை தொட்டியிலோ போட்டு விடுகிறோம். அதோடு நம் பிரச்சனை முடிந்தது என்று எண்ணுகிறோம்.
சிகரெட், பீடி & சுருட்டு போன்றவற்றை விற்கும் நிறுவனங்களும் விற்பனை வரைக்கும்தான் கவனம் செலுத்துகிறது. ஆனால்
பிரச்சனைகள் இதற்கு மேலேயும் தொடர்கிறது. அப்படி ஒதுக்கப்படும் அடித்தண்டு ஒன்று அருகில் இருக்கும் கால்வாய் வழியாக மழை நீருடன் அல்லது கழிவு நீருடன் சேர்ந்து அதன் தன்மையை மாற்ற கூடிய ஆற்றல் வளம் கொண்டது.
இதனால் நிலத்தடி நீரின் தன்மை மாற வாய்ப்புகள் உள்ளது. அதே போல பல தொட்டிகளில் இருந்து தொகுக்கப்படும் குப்பை இறுதியாக கிடங்கிற்கு கொண்டு சென்று கொட்டிவைக்கின்றனர். அதில் இருக்கும் அடித்துண்டுகளை அங்கு குப்பை எடுக்கவரும் சிறுவர்கள் பயன்படுத்தி நோய்க்கு ஆட்படுகின்றனர். மேலும் மழை, வெயில் காரணமாக அடித்தண்டில் மீதமிருக்கும் நிகோடின், எரிந்த நிலையில் இருக்கும் நிகோடினின், அதன் பஞ்சில் பரவிய நிகோடின் என பல வேதிபடிமங்கள் மண்ணுடன் இணைகிறது. நிலத்தில் வாய்க்கால் வழியே எங்கும் நிறைந்து மண்ணின் தன்மையை மாற்றுகிறது. இந்த படிமங்கள் Leachate ன் மூலங்கள் ஆக மாறுகிறது அதனால் நிலத்தடி நீர் தன்மை மாறவும், நிலம் மாசு பாடவும், ஆதாரமாகிறது.
சிகரெட்டின் சிறிய துண்டு கூட எவ்வளவு பெரிய பிரச்சனையை ஏற்படுத்த கூடியது என்பது தெளிவாகிறது. சிறிய துண்டு குப்பை என அலட்சியமாக அப்புறப்படுத்தாமல் விடுவதால் தான் பிரச்சனை. இது இங்கு மட்டுமல்ல உலகளாவிய குப்பை கிடங்கை சுற்றி நடக்கும் பிரச்சனைதான். இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துடன், தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் பொறுப்பை உணரவேண்டும். அதற்காக போதை பொருட்கள் பற்றிய உடல் உபாதைகளை மட்டுமல்லாது அதை அப்புறப்படுத்த அல்லது மறுசுழற்சி செய்ய வேண்டிய Extended Producer Responsbility (EPR) எனப்படும் கடமையும் பொறுப்பும் அவர்கள் மீது திணிக்கப் படவேண்டும். இதற்காக அரசாங்கம் COTPA ACT - 2003 சட்டத்தில் உற்பத்தி, விற்பனை மற்றும் விற்பனைக்கு பிறகான அதன் கழிவுகள் மேலாண்மை குறித்த தேவையான சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும்
ஒவ்வொரு ஆண்டும் புகை பிடிப்பபவர்கள் லட்சக்கணக்கான பேர் இறக்கின்றனர் அவர்களுடன் புகை பிடிக்காதவர்களும் அந்த புகையினால் இறக்கின்றனர். புகைபழக்கம் உள்ளவர்கள் மற்றும் இரண்டாம் நிலை புகை நுகருபவர்கள் என ஆண்டொன்றுக்கு சுமார் 8 லட்சம் பேர் இந்தியாவில் மட்டுமே இறந்து போவதாகவும் 2020 ல் அது 10லட்சமாக இருக்கும் என்று உச்சநீதி மன்றம் 2001 ல் எச்சரித்துள்ளது. இந்த நேரடி உடல் நல பாதிப்புகள் ஒரு புறம் இருக்க, மறைமுக சுற்றுசூழல் பாதிப்புகளையும் ஆலோசித்து, ஒரு பொருளை தயாரிக்க இருக்கும் சட்டத்திட்டங்கள் இருப்பது போல அதை அப்புறப்படுத்துவதற்கும் உடனடியாக இயற்ற வேண்டும். ஏற்கனவே பிளாஸ்டிக் போன்ற பொருட்களுக்கு EPR பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது மக்காத எல்லா பொருட்களுக்கும் நீடிக்கப்படவேண்டும்.
Add new comment