படம் 1: மெட்ராஸ் பல்கலைக்கழகத்திற்கு பின்னால் இருக்கும் பக்கிங்காம் கால்வாய்
எந்நேரமும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் இந்த சென்னை மாநகரம்,
அத்துடன் சேர்ந்து பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் பலகோடி மக்கள். இந்த பரபரப்புக்கு மத்தியில் நாம் காண மறுக்கும் முகத்தை சுழிக்கும் துர்நாற்றம் வீசும் அந்த வற்றாத சாக்கடைகளுக்கு ஒருகதை உண்டு. அது பூத்து குலுங்கி, பல்லுயிர் செழித்து வாழ்ந்த காலங்களும் உண்டு. உண்மையில் அது சாக்கடைகள் இல்லை. ஒருகாலத்தில் சென்னை நகரில் செழித்து ஓடிக்கொண்டு இருந்த ஆறுகள் மற்றும் போக்குவரத்து கால்வாய்கள். இந்த ஆறுகள் ஏன் இப்படி ஆயின. இதற்கு காரணம் என்ன போன்றவற்றை திரைப்படங்களின் காட்சிகள், வசனங்கள் மற்றும் இதர தரவுகளை அடிப்படையாக கொண்டு பகுப்பாய்வு செய்கிறது இந்த கட்டுரை.
சென்னையில் ஓடும் இரண்டு பிரதான ஆறுகள் மற்றும் ஒரு கால்வாய்: 1. அடையாறு 2. கூவம் ஆறு மற்றும் 3. பக்கிங்காம் கால்வாய், ஒருகாலத்தில் அவ்வளவு தெளிவாக இருந்ததாம் இந்த நீர்நிலைகள். இந்த நீர்நிலைகள் எந்த அளவிற்கு தூய்மையாக இருந்தது என்று உங்களுக்கு தெரியும்படி சொல்ல வேண்டும் என்றால் மேல இருக்கும் ஒரு படமும் மற்றும் கீழே இருக்கும் இரண்டே திரைப்பட காட்சிகளுமே போதுமானது. 80 - களில் ரஜினிகாந்த் கடற்கரை சாலையில் ஓடிவந்து போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்கு நேப்பியர் பாலத்தின் மேல இருந்து கீழே இருக்கும் கூவம் ஆற்றில் குதிப்பார். இது பில்லா திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. அப்பொழுது கூவம்
ஆறு தெளிவாக இருக்கும். இதேபோல் இன்னும் ஒரு திரைப்படத்தில் அமிதாப்பச்சன் நடித்திருப்பார். அதிலும் கூவம் ஆற்றை காட்சிப்படுத்தி இருப்பார்கள்.கீழே இருக்கும் அந்த காட்சிகளை பாருங்கள்.
படம் 1: 1980ல் நேப்பியர் பாலம் மேலிருந்து கீழ் இருக்கும் கூவம் ஆற்றில் குதிக்கும் ரஜினிகாந்த், மற்றும் படம் 2: 1983ல் நேப்பியர் பாலம், அதற்கு கீழ் இருக்கும் கூவம் ஆற்றில் தெள்ளிய நீர் அன்று மற்றும் அதற்கு பின்னால் தெரியும் ஒரு படகு
https://youtube.com/clip/UgkxJMEylXYwKtfoKiiqqiXwEZEuDaYznaRL?si=oKVWLW2u6cLwkIkr
https://youtube.com/clip/UgkxOKlMPaF-YXsvypilZ8cYq--e9rM6KrbG?si=d8zR5vaskSMjBp08
அப்படியே கட் செய்து 2006க்கு வந்தால் அதே போல நடிகர் வடிவேலு கோட் சூட் அணிந்து பில்லா ரஜினி போல அடையாறு ஆற்றில் குதிப்பார். ஆனால் அவர் வெளியில் வரும் பொழுது சாக்கடையில் முங்கி எழுந்தது போல கரு கருவென இருக்கும் அவரது தோரணை. என்னதான் அது நகைச்சுவை காட்சியாக இருந்தாலும் அது தத்ரூபமாக சென்னையில் இருக்கும் ஆறுகளின் உண்மை நிலையை மறைமுகமாக எடுத்து கூறியிருக்கும்.
படம் 3: அடையாறு ஆற்றில் நடிகர் வடிவேலு
https://youtube.com/clip/Ugkx_lQdl-zquPFDpCBOAmj3NuqeNai_knyj?si=VQsYuCnQ5_KdmzTk
சரி எப்படி தான் நமது நகரத்தின் அழகிய ஆறுகள் இப்படி சாக்கடைகளாக மாறியது? இவை ஒரே நாளில் இப்படி சாக்கடைகளாக மாறிவிடவில்லை. திட்டமிடப்படாத வளர்ச்சி, தொழிற்சாலைகள், கட்டிடங்கள், கழிவுநீர் வெளியேற்றம், முறையற்ற திடக்கழிவு மேலாண்மை, இந்த ஆறுகளை பற்றிய அறியாமை போன்ற பல விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆறுகளை அழிக்க தொடங்கின. ஒரு காலத்தில் இன்றைய வளர்ந்த நாடுகளில் எப்படி தூய்மையான ஆறுகள் நகரங்களுக்குள் வலம்வருகின்றனவோ அதே போல தான் மெட்ராஸின் அன்றைய ஆறுகளும் இருந்தன. நகரத்துக்குள் மிக அழகாக இந்த ஆறுகள் வலம்வந்தன. இதில் படகு சவாரி, நட்சத்திர உணவகம் போன்ற பல அம்சங்களும் இருந்தன. இந்த ஆறுகளை அழகு படுத்த, சீரமைக்க, அக்காலத்தில் இருந்தே (1967-68 களில்) பல திட்டங்கள் தமிழக அரசால் பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதில் சில திட்டங்கள் தொடங்கவும் செய்தது. ஆனால் ஒரு திட்டமும் பலனளிக்கவில்லை. இன்று இருக்கும் பல இளைய தலைமுறைகளுக்கு இது ஒரு ஆறு என்றே தெரியவில்லை. இதை ஒரு கழிவுநீர் கால்வாயாகவே பலரும் நினைத்து, அதை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துகின்றனர்.
மேலும், கடந்த பல வருடங்களாக, தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளை இந்த கூவம் ஆற்றின் கரையில் தான் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் இது மிகவும் அதிகமாக நடந்தேறியது. இதை பற்றி பல ஆதார காணொளிகளும் பல புகார்களும் பதிவாகி இருக்கிறது. ஆனால் குப்பைகளை கொட்டுவதோ எரிப்பதோ குறையவே இல்லை. சென்னையின் குடிநீரைத் தேக்கும் செம்பரம்பாக்கம் ஏரிக் கரையிலும்யிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, சென்னையில், நாளொன்றுக்கு 100 கிலோ அல்லது அதற்கு மேல் கழிவுகளை உருவாக்கும், அல்லது, 5000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், சந்தைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பல, மொத்தக் கழிவு உருவாக்கிகள் (BWGs) பட்டியலில் உள்ளனர். இவர்கள், உருவாக்கும் கழிவுகளை தனியார் கழிவு மேலாண்மை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்; அல்லது, தாமாகவே தங்களது குப்பைகளை சீரான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். பெரும்பாலானோர் தனியார் திடக்கழிவு மேலாண்மை நிறுவனங்களிடம் தான் அவர்களது குப்பை அகற்றும் பொறுப்பினை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த தனியார் குப்பை அகற்றும் நிறுவனங்கள், இக்- குப்பைகளை சரியான முறையில் அகற்றுவதில்லை. பலர் நேராக குப்பை கொட்டும் கிடங்குகளிலோ அல்லது ஆறுகளிலோ தான் கொட்டுகிறார்கள். மேலும், சில அடுக்குமாடி குடியிருப்புகள் தங்கள் கழிவு நீரையும் ஆறுகளில் கலக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் பலமுறை மக்களால் கவனிக்கப்பட்டு புகார்கள் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குகள் எல்லாம் நடந்திருக்கிறது. இருப்பினும் இத்தகைய தவறான செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றது.
படம் - 4: 80-களில் வெளிவந்த நிழல்கள் திரைப்படம் அதில் கட்டப்படும் குப்பை இல்லாத தூய்மையான கூவம் மற்றும் அதில் இருக்கும் சிறு படகு நிறுத்துமிடம்
https://youtube.com/clip/Ugkx4kD9bzUjZdIYdQ-4nEOfpakVVbTLUQGg?si=xc-aec3LNj_0MbXg
அடுத்து நமது ஆறுகளை பாதுகாப்பதில் இருக்கும் இருபெரும் சவால்கள் 1. தொழிற்சாலைகளின் கழிவுகள் மற்றும் 2. திட்டமிடப்படாத நகரமயமாக்கல். வட சென்னையில் உள்ள பல தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கப்படுவது சென்னை பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றிலும் தான். இது எண்ணூர் கழிமுகத்தில் வழியே கடலில் கலக்கிறது. இது இந்த கழிமுகத்தை சார்ந்து உள்ள பல மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகிறது! மேலும், சென்னையின் உபரி வெள்ள நீரை கொண்டு சென்று கடலில் கலப்பது இங்கு ஓடும் ஆறுகள் தான். ஆனால், இன்று சென்னையில் அடிக்கடி நடக்கும் வெள்ள பாதிப்பு பிரச்னைகளுக்கு இந்த ஆறுகளில் ஏற்பட்டு இருக்கும் இடையூறுகள் மற்றும் திட்டமிடப்படாத நகரமையமாக்கல் ஒரு பெரும் காரணம். இன்று, சென்னையில் அங்கங்கே ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருக்கும் கட்டிடங்கள் பல, சென்னையின் வெள்ள பாதிப்புக்கு வழிவகுக்கிறது. மேலும், இதனால் சென்னையில் இருக்கும் 50 சதவீத நீர்நிலைகளை நாம் இழந்துள்ளோம் என்பது வருந்தத்தக்க உண்மை.
படம் - 5: எண்ணூர் கழிமுகம் அன்றும் இன்றும்
https://youtube.com/clip/Ugkxe3HzPIeLgbQXho-zPBaQqV8xTb-eEn65?si=Zgw5805gK7Pi1izS
https://youtube.com/clip/UgkxT1fmtFPAz4Z2_7DK1ctMcqDcB7EnJHLN?si=vH2mQ6MVd0BCHhOK
கைகழுவி விடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பொறுப்புகள்
வீடுகளில் இருந்தபடியே நெகிழி பைகளில் கட்டி வீசப்படும் குப்பை, எந்த ஒரு முன்யோசனையும் இன்றி, பொது இடங்களில் வீசப்படும் குப்பை, தரம்ப்பிரிக்காமல் கொடுக்கப்படும் குப்பை, ஆறுகளில் வீசப்படும் குப்பை, சுற்றுலாத்தலங்களை நாசம் செய்வது போன்ற பல சூழல் கேடுகளுக்கு மக்கள் கண்டிப்பாக பொறுப்பேற்கவேண்டும். அதே சமயத்தில், அரசும், திடக்கழிவு மேலாண்மை விதிகளை சரியாக பின்பற்றி, மற்றும் அவற்றை துரிதமாக அமல்படுத்த, பல கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்கள் தூக்கியெறியும் குப்பைகளில் மிக சிக்கலானவை பல்லடுக்கு நெகிழி. இவற்றை மறுசுழற்சி செய்வது சாத்தியமில்லை. இவை பெரும்பாலும் குப்பைக்கிடங்களிலும், எரியோலைகளிலும் அல்லது சுற்றுசூழலிலும் தான் உலாவிக்கொண்டு இருக்கின்றன. எரியோலைகளில் இதை எரிப்பது ஒரு மிக பெரிய சூழல் மற்றும் மனித நலக்கேடு.
தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரித்து அதில் இருந்து இலாபம் பெற்றவுடன் அவர்களின் பொறுப்பு முடிந்துவிடாது. இலாபம் மட்டுமே நோக்கமாக இல்லாமல், தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு படி கீழே சென்று, அவர்களின் தயாரிப்புகளின் சுற்றுச்சூழல் தாக்கத்தை, கணக்கிட்டு, அதன் அடிப்படையில், அவர்களது தயாரிப்புகள் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் மறுவடிவமைப்பு செய்திட வேண்டும். நீடிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு விதிகளின் படி, பல்லடுக்கு நெகிழி குப்பைகளை சரியான முறையில் கையாளும் பொறுப்பை அந்தந்த நிறுவனங்களின் பொறுப்பாக்குவது அரசின் முக்கிய கடமையாகும். மக்களாகிய நாம் குப்பையை தரம் பிரித்து கொடுப்பது, குப்பையை பற்றிய விழிப்புணர்வு பெறுவது, அதை முறையான முறையில் அப்புறப்படுத்துவது மேலும் சிக்கலான குப்பைகளை தவிர்ப்பது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும்.
Add new comment