Skip to main content

மாற்றுத்திறனாளிகள் போக்குவரத்தில் சந்திக்கும் பிரச்சனைகள்

வண்ணாரப்பேட்டை டெக்ஸ்டைல் பார்க்குக்குள் நுழையும் பகுதி - பரபரப்பான காலை, சாலையின் இருபுறமும் மின்னல் வேகத்தில் கடந்து செல்லும் வாகனங்கள், எதையோ தொலைத்துவிட்டு திரிவதை போல உம்மென்று ஹெட்செட்டில் மூழ்கியிருக்கும் மனிதர்கள் - இவற்றுக்கிடையே ஒரு தடவைக்கு வெறும் 30 நொடிகளை மட்டுமே வாய்ப்பாக அளித்திருக்கும் சிக்னல் விளக்கை பார்த்த படி சாலையை தன் கைகளாலேயே தவழ்ந்து கடக்கவேண்டும் என்கிற வரத்தோடு சாலையை கடக்க தயார் நிலையில் இருக்கும் ஒரு தவழும் மாற்றுத்திறனாளியை இன்று சந்தித்தேன். அவருடனான உரையாடலின் ஒரு பகுதி

அண்ணே… ‘வணக்கம்’ என கூறி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், என்ன வேலை செய்றீங்க? எங்கிருந்து வரீங்க? என அவருடனான எனது உரையாடலை தொடங்கினேன். நான் தீவுதிடல் பக்கத்துல இருக்குற திடீர் நகர் பகுதியில தான் பொறந்து வளந்தேன் தம்பி. நான் மட்டும் இல்ல எங்க தாத்தா காலத்துல இருந்து அங்கதான் இருந்தோம். சின்னவயசில இருந்தே இளம்பிள்ளை வாதத்துனால காலு ரெண்டும் இப்புடி தான் இருக்கு என்று கூறியவராய் பாதி மட்டும் முதிர் வளர்ச்சி கண்டிருக்கும் தனது கால்களை காட்டினார் அவர். 

road safety

உச்சி வெயிலில் தன் கை மற்றும் கால்களை ஊன்றி நடந்துசெல்லும் மாற்றுத்திறனாளி | தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க அறக்கட்டளை

இருந்தோம்.. இருந்தோம்.. ன்னு சொல்றீங்களே? இப்போ எங்க இருந்து வர்றீங்க? என கேட்டேன். பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டுல இருந்து வர்றேன் தம்பி. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி காவாவ சுத்தம் பண்ணி ‘போட்டு’ விட போறதா சொல்லி, எங்க வீட்டையெல்லாம் இடிச்சி மாற்று இடம் தர்றோம்-ன்னு சொல்லி பெரும்பாக்கத்துல தூக்கி போட்டுட்டாங்க தம்பி. 

வீட்டைமட்டும் வெச்சிக்கிட்டு என்ன பண்றது? நாலு காசு சம்பாதிச்சா தானே ஒரு வேளை சோறாச்சும் சாப்பிட முடியும் அதுக்காகதான் ஓடுறேன் தம்பி. நான் இங்கதான் பிளாட்பாரத்துல ஜட்டி, பனியன், கர்சீப், குழந்தைங்க துணியெல்லாம் வித்துகிட்ருக்கேன் தம்பி. 

வியாபரமெல்லாம் எப்புடி போகுது? கொரோனாவுக்கப்புறம் இப்ப பரவாயில்லையா? என கேட்டேன். இப்பொல்லாம் யாரு தம்பி பிளாட்பார கடையில வாங்குறா? ஒன்னு பெரிய பெரிய கடைங்களுக்கு குடும்பதோட போய் வேடிக்கபாத்துக்கிட்டே வாங்குறாங்க, இல்லனா நெட்டுல ஆர்டர் பண்ணா வீட்டுக்கே வந்துருது. அப்புடியே வாங்கினாலும் ஏதோ ஒன்னு ரெண்டு கஸ்டமர் வர்றாங்க தம்பி. அவங்க கூட நம்ம கண்ணு முன்னாடியே “பாவம் ஊனம் டா இவர்கிட்ட வாங்கலாம்ன்”னு பேசும்போது ஒடம்பெல்லாம் கூசுது தம்பின்னு கண் கலங்கினார். 

இந்த பாழாப்போன காலு இருந்திருந்தா எனக்கு தெனம் 60ரூபா மிச்சம் தம்பி. பாரீஸ் போனா தான் பெரும்பாக்கத்துக்கு துரூ பஸ் கெடைக்கும். அதுக்கு இங்கிருந்து ஆட்டோவுக்கு தெனம் 60ரூபா செலவாகுது தம்பி. இந்த கால வச்சிக்கிட்டு பஸ்ஸுல ஏறி எறங்க முடியல. காலு நல்லா இருந்தா ரெண்டு கைல பைய புடிச்சிக்கிட்டு வெள்ள போர்டுல போனா வெறும் 16ரூபாதான். என்ன பன்றது தம்பி. ஊனமுற்றோருக்கு இலவசம்ன்னு சொல்ற அரசாங்கம் அப்புடியே நாங்க ஏறி பயணம் செய்ய ஏத்த வசதிய செஞ்சிகுடுத்தா புண்ணியமா போகும் என கூறியபடி ஒரு தார்பாயை விரித்து தனது கடையை பரப்ப துவங்கினார். 

இதற்கிடையில், மணலி புதுநகரை சார்ந்த மாற்றுத்திறனாளிகளை குழுவாக சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அச்சந்திப்பில் திரு.ஹரிகிருஷ்ணன் மற்றும் திரு.முரசொலி இப்ராஹிம் எனும் இரு தவழும் மாற்றுத்திறனாளிகள் அறிமுகமாயினர். அவர்களுடனான தொடர் உரையாடலில் இருவரும் சுய தொழில் முனைவோர் என்பதை அறிந்து மேலும் உரையாடலைத் தொடர்ந்தேன்.

திரு.ஹரிகிருஷ்ணன் சுமார் 30 வயது மதிக்கத்தக்க தவழும் மாற்றுத்திறனாளி. சொந்தமாக பஞ்சர் கடை நடத்தி வருகிறார். வாழ்வாதாரத்தை தாண்டி போக்குவரத்திற்காக வருமானத்தின் அதிக பகுதி செலவழிப்பதாக தெரிவிக்கும் அவர், இருப்பினும் தனது ஊனத்தின் காரணமாக எந்த இடத்திலும் முடங்கிக்கிடக்காமல் அடிக்கடி கோவில்கள், பொழுதுபோக்கு இடங்களுக்கு தனது சொந்த வாகனத்தில் பறந்துவிடும் பழக்கம் உள்ளவர் எனவும் தெரிவித்தார். மேலும், ஒரு மாற்றுத்திறனாளியாக, வாகனங்களை ஓட்டும்போது பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும், குறிப்பாக சக வாகன ஓட்டி தங்கள் வாகனத்தின் மீது மோதினாலும் கூட பல்வேறு சமயங்களில் மாற்றுத்திறனாளிதான் தவறு இழைத்திருப்பார் என்கிற கண்ணோட்டத்தில் பொதுமக்கள் “ஏம்பா… பாத்துபோக வேண்டியது தனே?” என அட்வைஸ் பண்ணுவதாகவும், சிலர் “யோவ்.. வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?” எனவும், “இதுங்களுக்கெல்லாம் லைசன்ஸ் குடுத்து நம்ம உசுர வாங்குறாங்க” என வசைபாடுவதாகவும் கொட்டித்தீர்த்தார். இவ்வளவும் தனி போக்குவரத்தில் உள்ள பிரச்சனைகள். பொதுப்போக்குவரத்து பயன்பாட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் இன்னும் சொல்லி மாளாது எனவும் குறிப்பாக மாற்றுத்திறனுடையோருக்கு அரசு வழங்கிவரும் மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் எனவும், அவ்வாறு பெறப்படும் உதவித்தொகை மாதந்தோறும் இடைநிற்றலின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் ஹரிகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

முரசொலி இப்ராஹிம் அண்ணா, 51 வயது மதிக்கத்தக்க தவழும் மாற்றுத்திறனாளி ஊதுபத்தி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். தவழும் மாற்றுத்திறனாளியாக அவர் சந்திக்கும் பிரச்சனை பிரத்தியேகமானது. சென்ட்ரல் இரயில் நிலையம் உள்ளிட்ட மெட்ரோ இரயில் நிலைய பணிகளின் காரணமாக ஆங்காங்கே இரும்பு தகடுகள் சாலைகளில் வேயப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். நம்மில் பலர் அந்த இரும்பு தகடுகளை வாகனத்தில் கடக்கும்போது “கட கட வென” சத்தம் ஏற்படுவதை எரிச்சலுடன் கடந்திருப்போம். ஆனால் ஒருபோதும் அதில் செருப்பின்றி நடந்த்திருக்கவோ, உச்சி வெயிலில் கைகளை ஊனி பார்த்திருக்கவோ  மாட்டோம். ஆம், ஒரு தவழும் மாற்றுத்திறனாளியாக எங்கு செல்லும்போதும் தன் கைகளை கொண்டு தவழ்ந்து செல்வதையே ஒரே வாய்ப்பாகக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளியான முரசொலி இப்ராஹிம் உச்சி வெயிலில் ஊதுபத்தி விற்பனைக்கிடையே, வெள்ளிக்கிழமை மதிய வேளை தொழுகைக்கு அந்த இரும்பு தகடுகளை தன் கை மற்றும் கால்களை ஊனி கடந்து வரும்போது நரக வேதனையை அனுபவித்து வருவதாக தெரிவித்தார். 

இவையெல்லாம் நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க அல்ல, நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம். இந்த பிரச்சனைகளுக்கான தீர்வினை நாம் வேறொரு உலகில் போய்த்தேடும் அவசியமில்லை; மாறாக, சக மனிதர்களை மதிப்புடன் நடத்தும் தன்மையுடையவர்களாக, மனித நேயம் உடையவர்களாக நாம் ஒவ்வொருவரும் வாழ கற்றுக்கொண்டாலே போதுமானது. மேலும், அரசின் திட்டங்கள் வெறும் ஏட்டளவில் மட்டுமல்லாமல் செயல்வடிவத்தில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை களைவதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். மேலும், மாற்றுத்திறனுடையோரின் நலனுக்காக அரசு எடுக்கும் சில முயற்சிகள் வெற்றியடையாததற்க்கான காரணம், சரியான தொலைநோக்குத் திட்டமிடல் இலாமையே, ஆம். தமிழக அரசு மாற்றுத்திறனுடையோருக்கு இலவச பேருந்து சேவையை அறிவித்திருக்கும் போதிலும், அதை முழுமையாக பயன்படுத்த முட்டுக்கட்டையாக இருப்பது அவை தாழ்தள பேருந்துகளாக இல்லமையே என எல்லா மாற்றுத்திறனுடையோரும் சந்திக்கும் பிரச்சனையாக வெளிப்படுத்துகின்றனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக பணியாற்றிவரும் மணலி புதுநகரை சேர்ந்த திருமதி.பிரேமா அவர்களிடம் பேசிய போது “மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் எல்லா பொதுக் கட்டிடங்களையும் மாற்றுவதற்கு வழிவகை செய்யும் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 சாய்வுதளம், தனிக் கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை கட்டாயமாக்கினாலும், தமிழகத்தின் தலைநகரிலேயே 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களில் அம்மாதிரி வசதிகள் கிடையாது எனவும், தமிழகத்தில் உள்ள பேருந்துகள் பெரும்பாலும் தாழ்தள பேருந்துகளாக இல்லாமல் உயரமான படிகளைக் கொண்டவை என்பதால், அதில் மாற்றுத் திறனாளிகள் ஏற சிரமப்படுவதாகவும், சென்னை மின்சார ரயில்களில் எளிதில் ஏறிவிட முடியும் என்றாலும், ரயில் நிலையங்களுக்குள் செல்வதற்கு பெரும் எண்ணிக்கையிலான படிகளைக் கடந்தாக வேண்டும். பெரும்பாலான மின்சார ரயில் நிலையங்களை அடைவதற்கு நகரும் படிக்கட்டுகளோ, மின் தூக்கிகளோ இருப்பதில்லை எனவும், எங்களுக்கான பொருளாதார சலுகைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் அரசு எங்களின் சம உரிமைக்கான வாய்ப்புகளை மறந்துவிடுகிறது”, என்று தெரிவித்தார்.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and email addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.