கொடுங்கையூர் என்றாலே சென்னைக்கு மட்டும் அல்ல அதை சுற்றியுள்ள நகரங்களுக்கும் தெரியும் அது சென்னையின் பெரும்பாலான பகுதி குப்பைகளை கொட்டிவைக்கும் குப்பை தொட்டி என்று. அப்படி ஒரு எண்ணம் தோன்ற காரணம் கொடுங்கையூரின் குப்பை கிடங்கு.
கிடங்கின் எதிரில் இருக்கும் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 288 வீடுகள் உள்ளது. அதில் ஏறக்குறைய 120க்கும் மேற்பட்ட பள்ளிக்கு செல்லும் சிறார்கள் இருக்கின்றனர், அந்த குடியிருப்பு பின்புறத்தில் இராஜரத்தின நகர் துவக்க பள்ளி இருக்கிறது. அதில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும் சுமார் 90 பேர் பயிலுகின்றனர். ஆனால் பள்ளி கூடத்துக்கு வருகை தருவது என்பது சுமார் 60 மாணவர்கள் தான். அந்த மாணவர்களின் தாய் அல்லது தந்தை சில பேர் பிரிந்தோ அல்லது இறந்து போயிருக்கின்றனர், சில பெற்றோர்கள் குடும்ப வறுமை காரணமாக இருவரும் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது முழு கவனம் செலுத்துவதில்லை. அந்த குழந்தைகளுக்கு கண்காணிப்பும், கட்டு பாடும் இல்லாததால் மனம் போன போக்கில் போவதுடன் தவறான பழக்கத்திற்கும் ஆளாகின்றனர். வயது வித்தியாசம் ஏதும் இன்றி மது, புகையிலை, மாவா, குட்கா போன்ற போதைப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.
அன்றொரு கள ஆய்வின் சமயத்தில், அந்த பகுதி பள்ளி ஆசிரியர்களின் அன்றாடம் பணிகளில் ஒன்று பள்ளிக்கு வராத குழந்தைகளை தேடி அழைத்து வந்து அமரவைத்து பாடம் புகட்டுவது. அப்படி ஒருநாள் ஒரு ஆசிரியை மூன்றாம் வகுப்பு மாணவன் பள்ளிக்கூடம் வராததை அறிந்து அவனை தேடி சென்றுள்ளார். அண்டை அயலார் வீடுகளில் விசாரிக்கும் போது, அந்த பையன் குப்பை மேட்டில் இருப்பதாக தகவல் கிடைக்கிறது, எனவே குப்பை மேட்டிற்கு செல்கிறார், அந்த மாணவன் குப்பை மேட்டின் மீது சாய்ந்து விழுந்து கிடந்ததை பார்த்து, சில பேரின் உதவியுடன் அவனை பள்ளிக்கு அழைத்து வந்து விசாரிக்கிறார். ஆனால் நிற்பதற்கு கூட திராணியற்று மயங்கி விழுந்து விட, சரி கொஞ்ச நேரம் கழித்து விசாரிக்கலாம் என சற்று பொறுத்து விசாரித்த போது தான் தெரிந்தது, மூன்றாம் வகுப்பு படிக்கும் அந்த பையன் குப்பை மேட்டில் கிடைத்த ஒயிட்னரை(Whitener) வாட்டர் பாக்கெட்டில்(Water packet) மிக்ஸ் பண்ணி ஏதேதோ செய்து சாப்பிட்டிருந்தான் என்பது. அது தந்த போதைக்கு அடிமையாகி கடந்த 10 நாட்களாக அந்த பையனின் அம்மா வேலைக்கு சென்றவுடன் அவன் தினமும் பள்ளி செல்லாமல் அந்த குப்பைமேட்டுக்கு சென்றிருக்கிறான், ஒயிட்னர் உட்கொள்வதால் அவன் உயிருக்கே உலை வைக்கும் என அறியாமல் அதற்கு அடிமையாகிருக்கிறான்
ஒயிட்னர் என்பது காகிதத்தில் தவறாக எழுதியதை அழிக்க எல்லா அலுவலகத்திலும் வீடுகளிலும் அவசியம் வைத்திருக்கும் ஒரு பொருள். அதில் உள்ளே நீர்மத்தில் டொலுவீன், எளிதில் ஆவியாகிற அலிபாட்டிக் பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன்கள், ட்ரைக்லோரோஈதேன்(Toluene, Aliphatic petroleum hydrocarbons & Trichloroethane) போன்ற வேதி பொருட்கள் இருக்கும். குறிப்பாக ட்ரைக்லோரோஈதேன் என்பதை சுவாசித்தால் அது மனிதனின் மைய நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்கி அவற்றை செயல்படவிடாமல் செய்துவிடும் மேலும் இதை தொடர்ந்து பயன்படுத்தினால் கல்லீரல், நுரையீரல் மற்றும் இதயம் பாதிக்கப்படும், சில சமயங்கள் நரம்புகள் மிக மிக அதிகமாக, வேகமாக செறிவூட்டப்படுவதால் உடனடியான இறப்பும் ஏற்படலாம். இது மதுவை விட 300 மடங்கு கொடியது என மருத்துவ அறிக்கை பக்கங்கள் கூறி வருகின்றன. எந்த வகையிலும் நன்மையற்றதாக கருதி உத்தரகண்ட் மாநிலம் கடந்த 2016 ஒயிட்னர் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. இந்த சூழலில் கொடுங்கையூர் கிடங்கில் குப்பைகளை பிரித்து கையாளப்படாமல் கொண்டுவந்து கொட்டுவதால் சென்னை நகரின் பெரும்பாலான அலுவலக குப்பைகளில் இருந்து இந்த ஒயிட்னர் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.
இது போன்று இன்னும் என்னவெல்லாம் நடக்கிறது என எண்ணிப்பார்க்கவே சற்று பயமாகத்தான் உள்ளது ஏன் எனில் குப்பை கிடங்கில் இருந்து பிளாஸ்டிக், இரும்பு மற்றும் கண்ணாடி குடுவைகள் என பொருக்கி எடுத்து அருகில் இருக்கும் கடையில் கொடுத்து வரும் பைசாவில் அவர்களுக்கு தேவையற்றதை பழகுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் அங்குள்ளது.
இது போன்ற அபாயங்களை தவிர்க்க உத்தரகண்ட் போல ஒயிட்னர் விற்பனையை முறைபடுத்தவேண்டும் அல்லது ஒயிட்னர் போன்ற அபாயகரமான கழிவுகளை பட்டியலிட்டு அதை தனியே முறையாக அப்புறப்படுத்தும் வழிமுறையை அரசு முயற்சிக்கவேண்டும். மாநகராட்சி இன்று வரை கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்காக ஒரு முழுமையான தீர்வை நோக்கி செயல்படாததால் அந்த பகுதியில் வாழும் இளம் தலைமுறையினர் சுற்றுசூழல் பாதிப்புகளை கடந்து இது போன்ற போதை பழக்கங்களுக்கும் ஆளாகின்றனர்
Add new comment