Skip to main content

"பிளாஸ்டிக் சாமான், பழைய துணி வாங்குறது"

"பிளாஸ்டிக் சாமான், பழைய துணி வாங்குறது…."_ கணீர் கணீர் என்று சின்ன ஒலிபெருக்கியில் கேட்கிறது லட்டுவின் காரமான குரல், சிலர் வீட்டிற்கு அருகில் சென்றால் ஒலிபெருக்கியை ஆஃப் செய்துவிடுவார்; சத்தம் போட்டால் அவர்களுக்குப் பிடிக்காதாம். வடசென்னையின் வீதிகளில் இருபத்தைந்து ஆண்டுகளாக அவரும், அவரது சைக்கிளும், சுழன்று கொண்டிருக்கிறது. ‘மக்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். எனது சைக்கிள் மற்றும் ஒலிபெருக்கி மட்டும் தான் மாறியுள்ளது’ என்கிறார் லட்டு. 

plastics

படம் 1: லட்டுவின் அன்றாட பணிக்கு இடையில் ஒரு தேனீர் இடைவேளை | CAG

"இருவத்தஞ்சு வருஷமா தெருமேல தொழில்பன்றேன், தெருவுல எங்க கேட்டாலும் தொப்பிக்கார பாய்யின்னு சொன்னா சொல்லிடுவாங்க. எங்க ஏறியாவுல என்ன லட்டுன்னு கூப்பிடுவாங்க." ஏன் லட்டு என்று இடைமறித்தேன். புன்னகைத்து "சின்னவயசுல குண்டா லட்டு மாறி இருப்பேன்" என்றார்.  இவரின் உண்மையான பெயர் கரீம். சென்னை புளியந்தோப்பில் வசிப்பவர், பழைய துணி வியாபாரம் செய்து வருகிறார், நகரம் முழுவதும் இவர் கூவாத வீதிகள் இல்லை. சென்னை முழுவதும் இவரைப் போன்று இருபதாயிரம் பேர் இருக்கிறார்களாம், இவர்களில் பெண்களும் அடக்கம். இவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் இருந்து அவர்கள் பயன்படுத்தாத பழைய துணிகளை வாங்கி, அதற்குப் பதிலாகப் பொருள் (அலுமினியம்   மற்றும் பிளாஸ்டிக் வீட்டுச் சாமான்கள்) அல்லது காசை கொடுப்பார்கள். பெரும்பாலும் ஆண்கள் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்களிலும் பெண்கள் தலைமேலும் பொருட்களைச் சுமந்து செல்வது வழக்கம். பின்பு, அவற்றை, மொத்த கடை வியாபாரிகளிடம் விற்று,   அதிலிருந்து வரும் லாபத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த மொத்த கடை வியாபாரிகள் இவர்களுக்கு முதலாளி போலத் தான். வியாபாரம் இல்லாத சில சமயங்களில் பணம் தந்து உதவுபவர்கள் இந்த மொத்த கடை முதலாளிகளே. சென்னையில் புளியந்தோப்பு, வியாசர்பாடி, எருக்கன்சேரி, கண்ணப்பர் திடல், பல்லாவரம் போன்ற பல பகுதிகள் இந்த மொத்த கடை வியாபாரிகளின் தொழிலிடமாக உள்ளது. 

plastics  

படம் 2: சைக்கிளில் சென்று பழைய துணி வியாபாரம் | CAG

பட்டாம்பூச்சியும் ஜீன்ஸ் பேண்ட்டும்

மனிதன் தோன்றிய சில காலங்களிலிருந்தே உடை உடுத்துவதற்கான கட்டாயம் அவனுக்கு நேரிட்டதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். இதற்கு நிலப்பரப்பு, தட்பவெப்பநிலை போன்ற பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இன்று  பரிணாம வளர்ச்சி அடைந்த நாம் உடுத்தும் உடை - இனம், மொழி, மதம், கலாச்சாரம், தட்பவெப்பநிலை - போன்ற பல விஷயங்களுக்குள் பிணைந்து தான் நம்மிடம் கடத்தப்பட்டிருக்கிறது. அசுர வேகத்தில் இன்று வளங்களை வாரிச் செரித்த வளர்ச்சியை, மன்னிக்கவும், பரிணாம வளர்ச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நம்மிடம், புதிதாக நமக்கே தெரியாமல் ஒரு போக்கு பரவிக் கொண்டிருக்கிறது. நாம் பார்க்கும் விளம்பரங்கள், திரைப்படங்கள், பாடல்கள் போன்ற அனைத்துக் காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்ந்து வலியுறுத்தும் ஒரு விஷயம் -  அளவிற்கு அதிகமான நுகர்வு - ஆடைகள் உட்பட! , எத்தனை வண்ண வண்ண,  புதுசு புதுசான ஆடைகளுக்கான விளம்பரங்கள் ,  தினுசு தினுசாக சலுகைகள், பார்க்கும் இடமெல்லாம் பரவிக் கிடக்கின்றன! நாம் தொடர்ந்து துணிகளை வாங்குவதற்காகவே பல மூளைகள் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைபார்த்துக் கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் ஒரு நல்ல விசேஷத்திற்குத் துணி மணிகளை வாங்கினோம். ஆனால் இன்று பருவத்திற்குப் பருவம் புது புது ஆடைகள் வாங்கி குமிக்க ஆரம்பித்து விட்டோம். ஒரு பருவத்தில் வாங்கிய ஆடை அடுத்து பருவம் வருவதிற்குள்ளாகவே பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிடுகிறது. 

எனது மேல் அதிகாரி ஒருவரிடம் ஆடை நுகர்வைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது அவர் ஓர் சுவாரசியமான தகவலை நினைவூட்டினார். அதாவது முன்பெல்லாம் தான் பயன்படுத்திய ஆடை தனக்குப் பிறகு வீட்டில் இருக்கும் சின்னவர்களுக்குள் (தம்பி, தங்கையுடன்) மாற்றிக்கொள்ளும் பழக்கம் எல்லா வகுப்பு மக்களிடம் இருந்தது. இங்கு இதை இரண்டு வகைகளாக நாம் பிரித்து புரிந்துகொள்ள வேண்டும் (1) நம்மிடம் காலங்காலமாக இருந்து வந்த நிலைத்தன்மையான நுகர்வு (2) ஆடைகளின் தரம். உலகில் அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் பட்டியலில், ஆடை உற்பத்தியகங்களும் உள்ளன. மலிவான மற்றும் அளவுக்கு அதிகமான ஆடை உற்பத்தியும் நுகர்வும் இதற்கு ஒரு திடமான காரணம். இதைத் தான் ‘ஃபாஸ்ட் ஃபேஷன்’ என்பார்கள் வல்லுநர்கள். மலிவான உற்பத்தி மற்றும் தேவைக்குத்தாண்டிய நுகர்வு இவை இரண்டிற்கும் பிறக்கும் குழந்தை தான் குப்பைமேடுகள். இதற்கு அப்பட்டமான ஓர் தரவு, இந்திய மக்கள் வருடத்திற்குத் தூக்கி எரியும் 10 லட்சம் டன்னிற்கும் அதிகமான ஆடைக்கழிவுகள். இதில் கணிசமான அளவு இந்தியாவில் எரிக்கப்படுகிறது என்பது வேறொரு திடுக்கிடும் செய்தி . விறுவிறுவென வளர்ந்து நிற்கும் இந்த ஆடை தொழிற்சாலைகளுக்கு நமது தமிழ்நாட்டில் எத்தனையோ ஆறுகள் பலிக்காடாகியுள்ளன. அதற்குத் திருப்பத்தூரில் சாயத்தால் கலங்கி நிற்கும் எத்தனையோ ஆறுகள் சாட்சி. ஒரு ஜோடி ஜீன்ஸ் பேண்ட் தயாரிப்பதற்கு 3,781 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறதாம். இது மூன்று ஆண்டுகளில் ஒருவர் குடிக்கும் தண்ணீரின் அளவு. ஒரு பட்டாம்பூச்சி விளைவு போல நாம் இங்கு வித விதமாகப் போட்டுத் திரியும் ஜீன்ஸ் பேண்டிற்கு எங்கோ தமிழ்நாட்டில் ஒருவர் தண்ணீருக்காக ஊர் ஊராக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்.

பழைய துணிக்கும் ஜிஎஸ்டி?

"தெருமேல் பழைய துணி வாங்கபோறவங்க காலையில எங்ககிட்ட வந்து சாமான் வாங்கிப்பாங்க. இவ்ளோ ரூபா பிளாஸ்டிக் சாமான் இவ்ளோ ரூபாயில அலுமினிய சாமான்னு  கணக்கு வெச்சுப்போம்.  சாமானெல்லாம் வண்டியிலியோ அல்லது கூடையிலோ அடுக்கினு ஒரு பத்துமணி போல கெலும்புவாங்க. தெருமேல “பழைய துணி” “பழைய துணி” னு கூவிகிட்டு போவாங்க. . சிலபேர் துணிக்கு காசுகேட்பாங்க; சில பேர் சாமான் கேட்பாங்க. துணிக்கு ஏத்தமாரி காசோ சாமானோ பேரம் பேசி கொடுத்துட்டு துணி எடுத்துனு வந்துருவாங்க. இதே போலச் சாயங்காலம் வரைக்கும் வியாபாரம் செய்வாங்க. அப்பறோம் இங்க வந்து வாங்கினு போன சாமானுக்குப் பதிலா துணிகுடுப்பாங்க. கழிச்சது போக அவங்களுக்கு ஒரு மூன்னூறூவா நானூறூவா லாபம் நிக்கும். சில சமயத்தில கம்மியாகவும் கிடைக்கலாம்; அதிகமாகவும் கிடைக்கலாம். இப்படி தான் தினமும் நடக்கும். செவ்வாய், வெள்ளி லீவு. எங்க அப்பா காலத்துல இருந்து நான் இந்த தொழில்ல இருக்கேன். அப்பொலாம் சாமானையும் துணியையும் தலையில தான் சுமந்துனு போவோம். நானும் தெரு தெருவா சுத்தி தான் இன்னிக்கு இந்த இடத்துல உக்காந்துனு இருக்கேன். முன்னே வியாபாரம் நல்ல இருந்துச்சு; இப்போ பல கெடுபிடிங்க வந்துருச்சு. நாங்க பண்றதே பழைய துணி வியாபாரம் இதுல குடோன் வாடகை, கரண்ட் பில்லு, சம்பளம்னு பல செலவு இருக்கு. போததைக்கு அஞ்சு சதவீதம் ஜீ.எஸ்.டி! இப்போ புதுசா ரெண்டு நாளைக்கு முன்னாடி தெருல இருக்குற பழைய துணி கடைகளையெல்லாம் கணக்கு எடுத்துட்டு வந்தாங்க. என்னென்னு கேட்டா  இந்த பழைய துணிங்களுக்கு தொழில் வரின்னு ஏதோ கொண்டு வரப்போராங்களாம் பெருநகர சென்னை மாநகராட்சி!” என்று இவர்களின் அன்றாட  பணியையும் அதில் இருக்கும் பிரச்சினைகளையும் விளக்கினார் மொத்த கடை வியாபாரி ஹயாத் பாய். 

மேற்படி இங்கே கொண்டுவரும் துணி என்னவாகும் என்று கேட்டேன். “நாங்க காட்டன், பட்டு, பாலிஸ்டர், பூனம், கிழிஞ்சது, கிழியாததுன்னு பல வகையா  பிரிப்போம். பிரிச்சு அழகா மடிச்சு மூட்டைகட்டி வைப்போம். எங்ககிட்ட இருந்து பார்ட்டீங்க வாங்கினுபோவாங்க. அதுல சிலது ஊருங்களுக்கு எடுத்துனு போய் நல்ல வாஷ் பண்ணி ஏதாச்சும் கிழிஞ்சு இருந்த அத தைச்சு செகண்ட் ஹேண்ட்ல விப்பாங்க. இருக்கப்பட்டவன் ஷோரூம்ல ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்து புது துணி வாங்கும்போது, இல்லாதவங்க, தினக் கூலி வேலைக்கு போறவங்க இந்த மாறி இருநூறு முந்நூறூவா  பழைய துணி தான் வாங்குவாங்க.”

plastics

படம் 3:ஹயாத் பாயுடன்  கடையில் ஆடைகளை வகை பிரிக்கும் ஊழியர்கள் | CAG

கொல்கத்தா வெத்தல முதல் குக்கர் கம்பெனி வரை

“நான் எங்க அப்பா, அண்ணா, மச்சான் எல்லாரும் இந்த தொழிலில் தான் இருக்கோம். அப்பா நாப்பதுவருஷமா இந்த லைன்ல  தான் இருக்காங்க. அப்படியே நாங்களும் இதே லைனுக்கு வந்துட்டோம். இங்கே வர எல்லா துணியும் எதாச்சு ஒண்ணுத்துக்கு கண்டிப்பா யூஸ் ஆகும். இந்த சாரியை எடுத்துகோங்க. இத வெச்சு ஒரு கயிறு கூட திரிக்கலாம். நாங்கெல்லாம்   இத தான் கயிறா யூஸ் பண்ணுவோம். பொதுவா வடமாநிலங்கள்ல எல்லாம் கிழிஞ்ச புடவைய வெச்சு தான் கயிறு செஞ்சு யூஸ் பண்ணுவாங்க. காட்டன் துணி குக்கர் மற்றும் பீரோ கம்பெனிங்களுக்கு தொடைக்க போகும். இந்த பழைய துணிய வெச்சு மிதியடி செய்வாங்க. இதேபோல் கொல்கத்தால இருந்து வர வெத்தலைக்கு இந்த துணிய தான் வாஷ் பண்ணி வெத்தல காஞ்சு போகாம இருக்க யூஸ் பண்ணுவாங்க. இப்படி பல விஷயத்துக்கு இந்த துணி யூஸ் ஆகும். என்கிட்ட வாரத்துக்கு இரண்டாயிரம் கிலோ துணிவரும். இங்க வர துணி எதுவுமே வீனா போகாது. இப்போ வெயில் காலம்கறதால பிசினஸ் கொஞ்சம் டல்லா இருக்கு” என்று விவரித்தார் பழைய துணி குடோன் வைத்திருக்கும் செந்தில் அண்ணா.

plastics

படம் 4: செந்தில் அண்ணா அவரது குடோனில் | CAG

முடிவில் மீண்டும் லட்டு

"எனக்கு அறுவது வயசாச்சி இப்போ என்னால முடியில. முன்னாடி நெரிய இடம் போவேன். இப்போல்லாம் சாமான் விலைங்க முப்பது நாப்பது ரூவா  ஏறிப்போச்சு. ஏழு எட்டு வருஷத்திற்கு முன்னாடி இருந்த வியாபாரம் இப்போ இல்ல. என் புள்ளைங்களுக்கு இதுல வர வருமானதுல இருந்து தான் கல்யாணம் பண்ணேன். இப்போ தான் விலைவாசி ஏறிப்போச்சு. முன்னே எல்லாம் நாலு வியாபாரம் பண்ணா போதும் ஓரளவுக்கு வருமானம் பாக்கலாம். இப்போ பத்து வியாபாரம் பண்ணாலும் கட்டுப்படி ஆகமாட்டேங்குது. காவாலயும் குப்பையிலும் போற இந்த துணிக்கு எதுக்கு இத்தனை இடையூறுகள்? நாங்க எல்லாரும் தொழில் பண்ணலேன்னா இந்த துணி குப்பைமேடுகளுக்கு தான் போகும்" என்கிறார் லட்டு.

ஆடை உற்பத்தி, நுகர்வு, நிலைத்தன்மை, குப்பை என்னும் சங்கிலியில் கணிசமான ஆடை கழிவுகளைக் குப்பைமேடுகளுக்குப் போகாமல் தடுப்பதில் லட்டு போன்றோருக்கு ஓர் முக்கிய பங்குண்டு. ஆடைகள் மட்டுமல்ல பிளாஸ்டிக், இரும்பு, காகித அட்டை போன்ற பல பொருட்களை மறுசுழற்சி செய்வதில் இந்தியா முழுவதும் உள்ள முறைசாரா தூய்மை பணியாளர்களுக்கு பெரும் பங்குண்டு . இவர்களின் இப்பெரும்பங்களிப்பை அரசு அங்கீகரித்து அதே சமயத்தில் ஆடை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பினை (EPR) (நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் தொடக்கம் முதல் முடிவு வரை சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு தீங்கும் விளைவிக்காமல் தயாரிப்பதும் அப்புறப்படுத்துவதும் நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பின் கட்டாய கடமையாகும்) அரசு அமல்படுத்த வேண்டும், மேலும் நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பின் கீழ் வரும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய மறுசுழற்சி, சேமிப்பு, சேகரிப்பு போன்ற செயல்பாடுகளில் இந்தியா முழுவதும் உள்ள முறைசாரா தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். 

நுகர்வோருக்கு

பர பரவெனப் பறந்து கொண்டு இருக்கும் இந்த நகர நாகரிகம், தான் வாழ்ந்த எச்சங்களை எதிர்காலத்திற்கு விட்டுச்செல்லும் என்றால் அதில் குப்பை தவிர்க்க முடியாத ஒன்றாய் இருக்கும். நமது போலியான நுகர்வு நம்மை பல இன்னல்களுக்கு நிச்சயமாக இட்டுச்செல்லும். இதை முடிந்த வரையில் தவிர்ப்பதற்கு, தேவைக்கேற்ப அளவான நுகர்வே தீர்வு. அதேபோல நிறுவனங்கள் பிளாஸ்டிக் புட்டிகளில் இருந்து ஆடை தயாரிப்பது, போலியான நிலைத்தன்மை விளம்பரங்களை பரப்புவது போன்ற யுக்திகளை விட்டுவிட்டு  உண்மையான நிலையான மாசற்ற சூழலில் ஆடை உற்பத்தி நடப்பதற்கு வழிசெய்ய வேண்டும்.  இன்னொருபுறம் தூக்கியெறியும் பொருட்களுக்கு மீளுருவம் கொடுக்கும் லட்டு போன்றோர் (முறைசாரா தூய்மை பணியாளர்கள்)  இன்னும் சமூகத்தில் அங்கீகரிக்கப்படாமல் இருப்பது வேதனையே. குறைந்தபட்சம் அடுத்த முறை  நாம் தூக்கியெறியும் ஆடைகளை  இவர்கள் போன்ற முறைசாரா தூய்மை பணியாளர்களின் கைகளில் கொண்டு சேர்ப்பது நமது கடமையே. 

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and email addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.