படம் 1 : சாலைகளில் வைப்பதற்கு எடுத்து செல்லப்படும் அரசியல் பேனர் | Source
தூரத்தில் பழைய சினிமா பாடல்கள் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டு இருந்தது; வீடுகளை மறைக்கும் அளவிற்கு பெரிய பெரிய பிளெக்ஸ் பேனர்கள் வரிசையாக வாசங்கங்களை சுமந்து நின்றன; கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரிசையாக இருக்கைகளை அடுக்கிக் கொண்டு இருந்தார்கள்; நீண்ட இருக்கையின் வரிசைக்கு கடைசியில் ஒரு பெரிய மேடை, அடர்ந்த மின்விளக்குகளால் அலங்கரிக்க பட்டிருந்தது; அந்த மேடையில், கட்சி தலைவரை வாழ்த்தி ஒரு பேனர் - வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்!, என்று.
சமீபத்தில், எங்கள் வீட்டிற்கு அருகில் நடந்த ஒரு பெரிய கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றின் காட்சிகள் இவை. அதிக அளவில் மக்கள் கூட்டம், ஆரவாரம், மேடை பேச்சுக்கள், அனல் பறக்கும் ஆட்டம் பாட்டம் போன்ற எல்லாவற்றிற்கும் பிறகு மாநாடு முடிந்தது. மக்கள் எல்லாம் சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து விட்டார்கள். மேடை, இருக்கைகள், ஒலிபெருக்கிகள் எல்லாம் கலைக்கப் பட்டு, வாகனங்களில் ஏற்றி எடுத்துச்செல்லப்பட்டன. இரவாகிவிட்டது. மஞ்சள் தெருவிளக்குகளுக்கு மத்தியில் இரவின் நிசப்தம், யாரும் அங்கே இல்லை. ஆனால் அந்த கட்சியின் தலைவர் மட்டும் சிரித்தபடி காற்றின் அசைவிற்கு ஏற்றாற்போல் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு இருந்தார் - அங்கே கட்டப்பட்டு இருந்த பிளெக்ஸ் பேனரில். கட்சி தலைவரின் முகம் சிரித்தபடி இருக்கும் அந்த பேனரின் கீழே எழுதப்பட்டு இருந்த வாசகத்தில் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மட்டும் கிழிந்து தொங்கிக் கொண்டு இருந்தது.
வெறும் அந்த ஒரு கட்சியின் கூட்டத்தில் மட்டுமே நான் ஆறு பெரிய பிளெக்ஸ் பேனர்களை பார்த்து இருப்பேன். இது போல் ஒருநாளில் பல பேனர்களை நான் கடந்து செல்வதுண்டு. சினிமா மற்றும் அரசியல் தாண்டி இன்று இவை திருமணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, பிறந்த நாள் விழா போன்ற பல நிகழிச்சிகளில் சரளமாக பொதுமக்களால் பயன்படுத்தப்படுகிறது/ வைக்கப்படுகிறது. இதன் பயன்பாடு வெறும் ஒரு சில மணிநேரங்களே, பின்பு இவையெல்லாம் எங்கே போகிறது, இதன் முழு வாழ்க்கை சுழற்சி என்ன? இதை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துகிறீர்களா? இதற்கு பின்னால் இருக்கும் வணிகம் என்ன போன்றவற்றை விளக்குகிறார், ஜான்சன்.
மூர் மார்க்கெட் ஜான்சன்
“இந்த லைன்ல இருபத்தி அஞ்சு வருஷமா இருக்கேன் சார். எனக்கு தார்ப்பாய் வியாபாரம். மூர் மார்க்கெட்ல உங்களுக்கு எல்லா பொருளும் கிடைக்கும் - ட்ரம்மு, மோட்டாரு, தர்ப்பை, பிளெக்ஸ் பேனர் எல்லாம் கிடைக்கும். கம்மி விலையில. மூர் மார்கெட்டுக்குள்ள ஒரு பொருள் வந்துடுச்சுனா அது செகண்ட்ஸ் தான். அது வைரமா இருந்தாலும் நாம செகண்ட்ஸ்-ல தான் விப்போம்.”
படம் 2 : மூர் மார்க்கெட் ஜான்சன் அவரது கடையில் | Source
குட்டி குட்டி சந்து பொந்துகளில் கடைகள் கொட்டி கிடக்கின்றன. இது சென்னை மாநகரத்தின் நடுவில் இருக்கும் ஏழைகளின் எக்ஸ்பிரஸ் அவென்யூ (பேரங்காடி)! கிளி முதல் சங்கிலி வரை எல்லாமே கிடைக்கும், குறைந்த விலையில்.
“2000-துல இருந்த தான் இந்த பிளெக்ஸ் பேனர் எல்லாம். அதுக்கு முன்னாடி தார் பாய் தான். ரிலையன்ஸ் கம்பெனி காரங்க தான் முதல்ல பிளெக்ஸ் பேனர் மார்க்கெட்ல கொண்டு வந்தாங்க. பின்னாடி நிறைய சின்ன கம்பெனிங்க இதுபோல பேனர்களை கொண்டு வந்தாங்க. அதுக்கு அப்பறோம் நெரிய சினிமா காரங்க மற்றும் அரசியல்வாதிங்கோ பிளெக்ஸ் பேனர்ல விளம்பரம் பண்ணிகிட்டாங்க. அதுக்கு முன்னாடி எல்லாம் இவங்க கையில வரைஞ்ச கட் அவுட் தான் வெப்பாங்க”, என்றார் ஜான்சன்
கடந்த 2018ஆம் ஆண்டு மெட்ராஸ் உயர்நீதி மன்றம் தமிழ் நாட்டில் பொது இடங்களில் பிளெக்ஸ் பேனர்களை வைப்பது மீது கடும் கட்டுப்பாடுகள் விதித்தது. இருப்பினும் தமிழ் நாட்டில் பல இடங்களில் வீதிமுறைகளி மீறி பேனர் கலாச்சாரம் இன்றளவும் காணப்படுகிறது. இது பொது மக்களுக்கு இடையூறாக, மற்றும் சில நேரங்களில், உயிரை பறிக்கும் அளவிற்கு ஆபத்தாக இருப்பது மட்டுமில்லாமல், சுற்றுசூழலுக்கு ஒரு ஸ்லோ பாய்சனாக இருந்து வருவது நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
கச்சா எண்ணெய் மற்றும் பல இரசாயனங்களை மூல பொருட்களாகச் சேர்த்து செய்யப்படும் பாலி-வினைல் குளோரைடு (பிவிசி), உலகம் முழுவதும் பல பிளாஸ்டிக் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது - குறிப்பாக, கட்டுமானம், மின் கேபிள்கள், ஆடைகள் மற்றும் பிளெக்ஸ் பேனர்களில்.
பாலி-வினைல் குளோரைடு எனும் இரசாயனம் மற்றும் பிளாஸ்டிக்கை வைத்து தயாரிக்கப்படும் பிளெக்ஸ் பேனர்கள் ஒரு தீவிரமான சுற்றுச்சூழல் மற்றும் உடல் நல அபாயம் ஏற்படுத்தும் இரசாயனம். பிவிசி பிளாஸ்டிக்குகளை வளையத்தக்க தன்மையாக மாற்ற பயன்படுத்தப்படும் Phthalates எனும் இரசாயனம் எண்டோகிரைன் சீர்குலைப்பான்களாக (Endocrine disruptors) இருந்து வருகின்றன. இது இன்றைய பல உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அடித்தளமாக இருக்கின்றது. மேலும் இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருந்துவருகிறது. இது போன்ற பிவிசி தயாரிப்பதற்கு பல இராசயனங்கள் பயன்படுத்தப் படுகிறது. இது, மனிதர்களிடையே சோர்வு, நரம்புத்தளர்ச்சி, கண் எரிச்சல் மற்றும் புற்றுநோயின் காரணிகளாக இருப்பது, ஆய்வுகளின் கூடுதல் கூற்று.
வண்ண பொழிவுகளில் மக்களை கவரும் விதங்களில் விளம்பரப்படுத்துவதற்கு பிளெக்ஸ் பேனர்கள் உயர் தரம் வாய்ந்த டிஜிட்டல் அச்சுக்களை வழங்குகின்றன, 15x15 அடி = 225 sq ft பிளெக்ஸ் பேனர் தயாரிப்பதற்கு குறைந்தது 8 முதல் 10 ஆயிரம் வரை செலவாகவும் இதில் dtp, பேனர், சாரம் மற்றும் இதை கட்டும் தொழிலார்களின் செலவும் அடங்கும்.
வெறும் ஒருசில நாட்கள் மட்டுமே வைக்கப்படும் இந்த பேனர்கள் மண்ணில் மக்காதன்மை கொண்டவை. மேலும் அவை எரிக்கும்போது, இந்த பேனர்களில் இருந்து வரும் கிளோரின் நச்சு புகை உடல்நலத்திற்கு தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். சமீபமாக, பிளெக்ஸ் பேனர்கள், கிராமங்களில் அதிக அளவில் பயன்படுத்துகிறது. பெரும்பாலான கிராமங்களில், போதுமான திடக்கழிவு மேலாண்மை வசதிகள் இல்லாததால், பேனர் போன்ற கழிவுகள், மற்ற பிளாஸ்டிக் கழிவுகளுடன் சேர்த்து, எரிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளது.
மிகவும் குறுகிய நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஃப்ளெக்ஸ் பேனர்கள், பெரும்பாலும் கிழிந்தநிலையில் இருக்கும் பேனர்கள் குப்பைமேடுகளிலும், திறந்தவெளியில் எரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. பயன்படுத்தப்பட்டு கிழியாமல் இருக்கும் சில பேனர்களுக்கு மூர் மார்க்கெட் ஒரு செகண்ட் ஹேண்ட் சந்தையாக இருந்துவருகிறது, “ஒரு நாள் யூஸ் பண்ணி அப்படியே எங்க கிட்ட கொண்டு வந்து கொடுத்துடுவாங்கோ அப்பறோம் அத வாங்கி நாங்க செகண்ட்ஸ்-ல விப்போம்”, என்கிறார் ஜான்சன். இங்கே விற்கப்படும் பழைய பேனர்கள் பெரும்பாலும் மழையில் ஒழுகும் கூரை அல்லது ஷீட் வீடுகளில் பயன்படுத்தப்படும். மேலும், அவரிடம், ஒரு சின்ன வீட்டு கூரையை மறைப்பதற்கு எத்தனை பேனர் தேவைப்படும் என்று கேட்டதற்கு, “ஒரு பேனர் போதும், அது 1,000 ரூபாயில் கிடைத்து விடும், கட்டிவிட்டா ரெண்டு வருஷம் வரும்”, என்றார். மேலும், முன்பு போல் இப்பொழுது வியாபாரம் இல்லை என்றார். ஏனென்றால், “பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நிறைய குடுச வீடுங்க இருந்துச்சு. இப்போ எல்லமே கான்கிரீட் வீடுங்களா மாறிடுச்சு. அதனால நிறைய மக்கள் வந்து வாங்குறதில்ல. இப்போலாம் கட்டடம் கட்றவங்க அல்லது ஸ்கிராப் கடை காரங்க தான் அதிகமா வந்து வாங்குறாங்க. (கட்டிட தொழிலாளர்கள் தூசி/ பெயிண்ட் மற்ற இடங்களில் பரவாமல் இருப்பதற்கு பயன்படுத்துவார்கள்; மற்றும், ஸ்கிராப் கடைகளில், தரையில் விரித்து சாமான்களை தரம் பிரிப்பதற்கு பயன்படுத்துவார்கள்).
பிவிசி பேனர்களில் இருக்கும் பல்லடுக்கு மூல சேர்க்கைப்பொருட்கள் மற்றும் இதன் பயன்பாட்டிற்கு பிந்தைய அசுத்தங்கள் இதன் மறுசுழற்சிக்கு பெரிதும் சவாலாக இருந்துவருகிறது. இதனால் உலகளவில் பிவிசி பேனர் மறுசுழற்சி செய்யும் விகிதம் மிக மிக குறைவே. மேலும், பேனர் மறுசுழற்சி ஒரு இலாபகரமான தொழிலாக இல்லை என்று இதை மறுசுழற்சி செய்த பலர் கோருகின்றனர், என்கிறார் அமித் ஷர்மா, அவரது லிங்க்டின் தளத்தில்.
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி 100 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளெக்ஸ் பேனர்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் 100 மைக்ரானிற்கு மேல் இருக்கும் பிளெக்ஸ் பேனர்கள் நீடிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி பேனர்களை சரியான முறையில் அப்புறப்படுத்துவது/மறுசுழற்சி செய்வது இதை தயாரிக்கும் அல்லது செய்யும் நிறுவனங்களின் பொறுப்பு. ஆனால் இன்று இந்திய முழுவதிலும் பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பேனர்கள் பெரும்பாலும் ஏழை மக்களின் வீட்டுக்கு கூரைகளிலும் பின்பு எரி உலைகளிலும் தான் காணப்படுகிறது. மாறாக, இதற்கு எந்த நிறுவனங்களும் பொறுப்பேற்றதாக தெரியவில்லை.


Add new comment