Skip to main content

பிளாஸ்டிக்கின் உடன்பிறந்த சகோதரர் பயோ பிளாஸ்டிக்! போலி தீர்வு - வலையில் விழுந்தது நாம் அனைவரும் தான்!

ஆங்கிலத்தில் வெளிவந்த பயோ பிளாஸ்டிக் பற்றிய கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்                                                                                                         

உலகமே பிளாஸ்டிக் குப்பைக்கு மத்தியில்  சிக்கி திணறி கொண்டு இருக்கிறது! பொதுவாக நாம் இதுபோன்ற பல வாக்கியங்களை அன்றாடம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். இது மக்களை பயமுறுத்துவதற்கோ அல்லது அவர்களது கவனத்தை கவருவதற்கோ அல்ல. மாறாக இது இன்றைய உலகின் நிகழ் நிதர்சனம். ஏனென்றால் நாம் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்! நம்மை சுற்றி உள்ள நிலத்தில், நீரில், கடலில், காற்றில் கடுமையான பிளாஸ்டிக் மாசு ஏற்பட்டிருக்கிறது. மிக நுண்ணிய முதல் நுண் துகள்களிலாலான இந்த பிளாஸ்டிக், விலங்குகள், பறவைகள், மீன்கள், ஏன் மனித இரத்த ஓட்ட குழாய்களிலும் காணப்படுகிறது. இதன் மூலம் நமது உணவுச் சங்கலியிலும் பிளாஸ்டிக்  ஒரு அங்கமாகி விட்டதாக பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன? உற்பத்தியை தவிர்ப்பதை தவிர வேறு எந்த தீர்வும் இல்லாத இந்த பிளாஸ்டிக்கிற்கு, இதுதாண்டா சர்வரோக நிவாரணி என்று கெடுவாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொண்ட நிறுவனங்கள், நவீனம் என்ற பெயரில்  நம்மை பயோ பிளாஸ்டிக் போன்ற போலி தீர்வுகளுக்குள்  சிக்க வைத்தது எப்படி என்று பார்ப்போம். 

சில வருடங்களுக்கு முன்பு சமூகவலைத்தளத்தில் எதர்ச்சயாக ஒரு  நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்தேன். அந்நிறுவனம் ஒரு சுற்றுச்சூழல் அக்கறை கொண்ட நிறுவனமாக தன்னை முன்னிருத்திக் கொண்டு, சூழலை மாசுபடுத்தாத, சூழல் ஒத்த நிலைத்தன்மையான மாற்றுகளை தயாரிப்பதாக விளம்பரப்படுத்திக் கொண்டது. சுற்றுச்சூழல் பற்றிய போதிய தெளிவு எனக்கு இல்லாத நாட்கள் அது. அதை பார்த்ததும் பூமி நலனில் நானும் பங்காற்ற வேண்டும் என்று, சரசர வென அதில் இடம்பெற்ற மூங்கில் பிடிப்பில் செய்யப்பட்ட பல் துலக்கி, அழகு சாதன பொருட்கள், மக்கும் நெகிழி பை  போன்ற பல பொருட்களை வாங்கிசேர்த்தேன். அப்பொழுது நான் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்தேன். அங்கே குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கச் சொல்லி வலியுறுத்திக் கொண்டு இருந்தார்கள். மாநகராட்சியின் குப்பைகளை மக்கும், மக்காத மற்றும் சுகாதார கழிவுகளாக தரம் பிரித்து கொடுக்கவேண்டும் என்ற  அமலை பற்றி எங்களுக்கு தெரிந்து இருந்த போதிலும், சரியான செய்முறை தெளிவு இல்லாமல் நான் அப்பொழுது வாங்கிய நவீன மக்கும் பிளாஸ்டிக் பைகளில் (Compostable garbage bag) மக்கும் குப்பைகளை அதில் கட்டி தூக்கிபோடுவதில் மன நிறைவாகவே இருந்தேன். ஒருமுறை இந்த மாற்று பொருட்களை வாங்கிய பிறகு எனக்கு இதுபோன்ற பல விளம்பரங்கள் அடிக்கடி வரத்தொடங்கின. மேலும் இந்த பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவயாக இருந்தன. நானும் பூமியையே காக்கும் விஷயம் அல்லவா? அப்படிதான் இருக்கும் என்று என்னை நானே பக்குவப்படுத்தி கொண்டேன். அப்படியே மூன்று வருடங்கள் கழித்து இன்று நான் திடக்கழிவு மேலாண்மையில் ஒரு ஆராய்ச்சியாளர். இன்று ஒரு ஆராய்ச்சியாளனாக ஒவ்வொரு நாளும் நெகிழி, கழிவு மேலாண்மை பற்றியெல்லாம் படிக்கும் பொழுது, நான் இத்தனை நாள் நம்பிக்கொண்டு இருந்த பல விஷயங்கள் சல்லி சல்லியாக உடைகின்றன - குறிப்பாக, கச்சா எண்ணையை அகழ்ந்து எடுப்பது முதல் அதன் கடைசி எச்சமான பிளாஸ்டிக் குப்பைகளை தூக்கிப்போடும் வரையிலான, சங்கலிக்குள் ஒளிந்திருக்கக் கூடிய பல சுற்றுசூழல் மாசுபாடுகள்.

ஆய்வுகள் பல, மக்கள் கூடுதல் பணம் கொடுத்து சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்று கூறுகின்றன. ஆனால் இன்றைய   சந்தை, பல நவீன, போலி தீர்வுகளால் ததும்பி வழிந்து கொண்டிருக்கிறது. அதில் மிகவும் பிரபலமான நவீன தீர்வு பிளாஸ்டிக்கிற்கு மாற்று, பயோ பிளாஸ்டிக். இந்த பயோ பிளாஸ்டிக் எனும் வார்த்தை பல இடங்களில் வேறு வேறு சொற்களால் குறிப்பிடப்படுகிறது. உதாரணத்துக்கு, பயோ டீகிரேடபில் பிளாஸ்டிக் (Biodegradable plastic), கம்போஸ்ட்டபில் பிளாஸ்டிக் (Compostable plastic), ஆக்ஸோ டீகிரேடபில் பிளாஸ்டிக் (Oxo-degradable plastic) என்றெல்லாம் சொல்லப்படும். இவைகளின் பெயர்கள் மற்றும் கலவைகள் தான் வித்தியாசமே தவிர இவை யாவும் நெகிழி பிரச்சனைக்கான உண்மையான தீர்வல்ல. 

பயோ பிளாஸ்டிக் (Bio-plastic) - என்பது ஒரு குடைச்சொல்லாகும். இவை உயிர்த்திரளில் (biomass) இருந்து பெறப்படுகின்ற அல்லது கடைசியில் உயிர்திரளாக மாற்றப்படுகின்ற பிளாஸ்டிக்கை குறிக்கும். ஆனால் பெரும்பாலும் பயோ-பிளாஸ்டிக்கை உயிரியல் சார்ந்த அதாவது பயோ பேஸ்ட்டு (Bio-based plastics) உடன் சேர்த்து, பெரும்பாலும் தவறுதலாக குறிக்கப்படும். பயோ பேஸ்ட்டு (Bio-based) என்ற சொல்லானது வழக்கமான பெட்ரோலிய கனிமங்களின் இருந்து விலகி தாவரங்களால் இருந்து உதாரணத்துக்கு சோளம், கரும்பு, கிழங்கு போன்றவையில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கை குறிக்கும். இதுபோன்ற பிளாஸ்டிக்குகளால் சுற்றுச்சூழலுக்கு இருக்கும் ஒரே நன்மை என்பது, பெட்ரோலிய எரிபொருட்களிலிருந்து உருவாக்கப்படும் மேல்தட்டு செயல்பாடுகளில் (நெகிழி பாலிமர்களின் உற்பத்திக்கான புதைபடிவ எரிபொருட்களை பிரித்தெடுக்கும் செயல்முறைகளில்) உருவாகும் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மட்டுமே. இருப்பினும், இது மிக துல்லியமான கூற்று அல்ல, ஏனெனில் இந்த பயோ பேஸ்ட்டு பிளாஸ்டிக்ஸ் (Bio-based plastics) சுற்றுச்சூழலுக்கு சிறந்தவை என்று ஒருவர் கூறுவதற்கு முன் அதன் முழு வாழ்க்கைச் சுழற்சி மதிப்பீட்டையும் புரிந்து கொள்ள வேண்டும்.   

பயோ டீகிரேடபில் பிளாஸ்டிக் (Biodegradable plastic) - பொதுவாக பயோ டீகிரேடபில் என்ற வார்த்தை அடிப்படையில் நுண்ணுயிர்களால்  கார்பன் டை ஆக்சைடு, நீர் போன்ற இயற்கை கூறுகளில் ஒரு பொருள் சிதைவடையும் தன்மையாகும். எல்லா பயோ டீகிரேடபில் பிளாஸ்டிக்கும் உயிரியல் (bio-based) தாவரங்கள் அடிப்படியிலானவை அல்ல. மேலும், இந்த பயோ டீகிரேடபில் பிளாஸ்டிக்கின்  மக்கும் தன்மை என்பது அதன் மூலப் பொருளில் இல்லை. (plant-based or fossil fuel)   மாறாக, அதனுடைய பிளாஸ்டிக் கூறுகளில் (polymers) உள்ள இரசாயன கலவை தான் அதை தீர்மானிக்கும். பயோ-பேஸ்ட்டு (Bio-based) என்பது பிளாஸ்டிக்கின் மூலக்கூறுகளைக்  குறிக்கும். அதேபோல் “பையோ டீகிரேடபில்”  என்பது பிளாஸ்டிக் பயன்பாட்டின் பிறகுள்ள  சிதைவு தன்மை போன்றவற்றை குறிக்கும். நாம் நினைப்பது போல் பயோ டீகிரேடபில் பிளாஸ்டிக் தூக்கிப்போட்ட உடன் சூழலில் கலந்து மக்கிவிடுவதில்லை. இதற்கு கூடுதலாக சில இரசாயன சேர்ம செயல்முறைகள் தேவைப்படுகின்றன. 

கம்போஸ்ட்டபில்  பிளாஸ்டிக் (Compostable plastic) என்பது பயோ டீகிரேடபில் (Biodegradable) பிளாஸ்டிக்கில் ஒரு ரகம். கம்போஸ்ட்டபில்  பிளாஸ்டிக் உரமாவதற்கும்  குறிப்பிட்ட  சில இரசாயன சூழல்களில் அந்த நெகிழி இருந்தாகவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிதைவடைந்து உரமாகும். பொதுவாக, நமது வீட்டில் இருக்கும் உரத்தொட்டிகளில் இது சாத்தியமாகாது. இதற்காக தனியாக சில தொழிற்சாலைகள் மற்றும் வெப்பநிலையங்கள் தேவைப்படுகின்றன. கம்போஸ்ட்டபில் மற்றும் பயோ டீகிரேடபில், இந்த இரண்டு பிளாஸ்டிக்குகளுக்கும் மத்தியில் இருக்கும் வித்தியாசம் என்பது கம்போஸ்ட்டபில் பிளாஸ்டிக் தோராயமாக ஒரு ஆறு மாதத்தில் சிதைவடையும் என்று வைத்து கொள்ளலாம். ஆனால் பயோ டீகிரேடபில் பிளாஸ்டிக் எந்த வகை, என்ன கலவை மற்றும் இதன் சேர்மங்களை பொறுத்து, இதன் சிதைவடையும் கால அளவு  மாறுபடலாம். 

ஆக்ஸோ டீகிரேடபில்  பிளாஸ்டிக் (Oxo-degradable plastic) இது மேல குறிப்பிட்ட எந்த வகைகளையும் சாராது. இது வழக்கமான கச்சா எண்ணையில் செய்யப்படும் பிளாஸ்டிக்குகளை போன்றது தான். ஆனால் அதில் கூடுதலாக சில இரசாயன சேர்மங்கள் சேர்க்கப்படுகின்றன. அது இந்த பிளாஸ்டிக்குகளை  சிதைவடைய செய்து சிறு நுண்துகள் பிளாஸ்டிக்குகளாக மாற்றிவிடுகின்றன. எனவே இவை மற்ற வகை பிளாஸ்டிக்குகளை ஒப்பிடுகையில் மிகவும் ஆபத்தானவை.   

மேல குறிப்பிட்ட இவையெல்லாம் தான் நெகிழிக்கு தீர்வா?

நிச்சயமாக ஒருபோதும் இருக்காது! மேல குறிப்பிட்ட யாவும் நெகிழிக்கு உண்மையான தீர்வல்ல: 

இதன் முழு ஆயுள் மதிப்பீடு - மோசமான மாசு 

 ஒரு பொருளின் மூல பொருள் அல்லது அதன் இறுதி எச்சம் உயிரியல் சார்ந்து அல்லது பயோ டீகிரேடபில் ஆக இருந்துவிட்டால் மட்டுமே அது  சுற்றுச்சூழலுக்கு சிறந்தது என்று கருதிவிடமுடியாது. இதை புரிந்து கொள்ள இதன் முழு வாழ்கை மதிப்பீட்டை கணக்கிடுவது மிகவும் அவசியமாகும். உயிரியல் (bio-based) சார்ந்த பிளாஸ்டிக் வழக்கமான பிளாஸ்டிக்குகளை போல பசுமை இல்ல வாய்வை வெளியேற்றுவதில் நேரடி தொடர்பு இல்லயென்றாலும் இதன் முழு உற்பத்தி சங்கிலி வழக்கமான பிளாஸ்டிக்குகளை தயாரிப்பதை விட மிக மோசமான காலநிலை விளைவுகளை விளைவிக்கிறது என்று ஐரோப்பிய ஆணையத்தின் கூட்டு ஆராய்ச்சி மையத்தின் கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளது. பொதுவாக இதுபோன்ற பிளாஸ்டிக் தயாரிப்பதற்கு தேவைப்படும் விவசாய நிலங்கள், அதனால் ஏற்படும் காடழிப்பு, இதன் காரணமாக நிகழும் கார்பன் அமிழ்வின் குறைவு, மற்றும் இந்த வகை பிளாஸ்டிக்குகளின் முறையற்ற கழிவு மேலாண்மை போன்ற விஷயங்கள் அதிக கார்பன் மற்றும் மீத்தேனை சுற்றுப்புற சூழலில் வெளியிடும்.

கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பு - நம்மிடமில்லை!

சில வகை பயோ பிளாஸ்டிக்குகள் சிதைவடையும் மற்றும் மக்கும் தன்மையுடையவை என்று கூறப்பட்டாலும், இதை சாத்தியப்படுத்துவதற்கு சில உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. மேலும், இதுபோன்ற பிளாஸ்டிக்குகள் தனியாக சேகரித்து, தரம் பிரித்து, முறையாக கையாள வேண்டும். இதை சரியான முறையில் கையாளாமல்  தவறுதலாக வழக்கமான பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்யும் சங்கிலிக்குள் போட்டு விட்டால் (பெரும்பாலும் இதுபோன்ற தவறுகள் நடக்கும்) ஒட்டு மொத்த மறுசுழற்சியகங்களை அது பயனற்றதாக மாற்றிவிடும். பின்பு இதை குப்பைமேடுகளில் தான் கொட்டவேண்டும். இப்படி குப்பைமேடுகளில் கொட்டப்பட்ட பயோ பிளாஸ்டிக்குகள் அங்கு இருக்கும் இதர மக்கும் குப்பைகளுடன் கலந்து அதிகப்படியான கார்பன் மற்றும் மீத்தேனை சுற்றுப்புற சூழலில் வெளியிடும். அது பசுமை இல்ல வாய்விற்கு வழிவகை செய்யும்.  

பயோ பிளாஸ்டிக்குகளில் இருக்கும் இன்னும் ஒரு பெரும் பிரச்னை இதன் மேலாண்மை. இதேபோன்று உற்பத்தியாகும் அதிகளவு பிளாஸ்டிக்குகளை மேலாண்மை செய்வதற்கென தனி   உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியா  போன்ற நாடுகளில் இல்லை. மேலும், வளர்ந்து கொண்டே போகும் பயோ பிளாஸ்டிக்குகளின்  சந்தைக்கு இணங்க அதை மேலாண்மை  செய்வதற்கு வேறு எந்த வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிலும் போதுமான வசதிகள் இல்லை. ஏற்கனவே வளரும் நாடுகளில் தற்போதைய குப்பையை கையாளும் வசதிகள் சீராக இல்லாதபோது, இது போன்ற பயோ பிளாஸ்டிக்குகளை கொண்டுவந்தால், அது கழிவு மேலாண்மையில் கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.  

ஒற்றைப் பயன்பாடு - ‘எடு - கொடு - தூக்கிப்போடு’ தொடர்கதை!

மக்கா தன்மை மற்றும் நச்சு இரசாயனங்கள் பிளாஸ்டிக்கின் ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்தாலும் மற்றொரு சிவப்புக் கொடியானது அதன் ஒற்றைப் பயன்பாடு மற்றும் தூக்கிப்போடும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கம் உற்பத்தி முறைகள். மனித வாழ்க்கையை எளிதாகவும், வசதியாகவும் மாற்றும் நோக்குடன்  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் (SUP) உற்பத்தி பிரபலமானது. எனினும், ஒரு சில மணித்துளிகளே பயன்படுத்தும் இந்த ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கானது, இதர பிளாஸ்டிக் வகைகளை விட மிகவும் மோசமானவை. ஆகையால் இதற்கு உண்மையான தீர்வு உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகளை மாற்றுவதன் மூலமும், மறுபயன்பாடு மற்றும் பூஜ்ஜிய கழிவு அமைப்புகளின் அடிப்படையில் நச்சுத்தன்மையற்ற  சுழல் பொருளாதாரத்திற்குச் செல்வதன் மூலமும் மட்டுமே சாத்தியமாகும். மேலும், இதுபோன்ற பிளாஸ்டிக்குகளை மாற்றுத் தீர்வாக பிரபலப்படுத்துவது, மக்களிடம் ஏற்பட்ட பயன்பாடு மற்றும் தூக்கிப்போடும் கலாச்சாரத்தை மாற்ற முடியாமல் மேலும்  மோசமடையச் செய்யும். 

மெகா பயோ-பிளாஸ்டிக்ஸ் உற்பத்தி - பிளாஸ்டிக் VS  உணவு!

பயோபிளாஸ்டிக்ஸ் வழக்கமான பிளாஸ்டிக்குகளுக்கு 'மாற்றாக' சந்தைப்படுத்தப்பட்டால், ஒவ்வொரு ஆண்டும் நாம் உற்பத்தி செய்யும் சுமார் 400 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை மாற்றுவதற்கு போதுமான உயிரியல் (Bio-based)  அடிப்படையிலான தீவனம் தேவைப்படுகிறது. இதை உற்பத்தி செய்வதற்கு பெரிய அளவிலான நிலங்கள் மற்றும் காடுகள் அழிக்கப்பட வேண்டும். இதன் பொருள் விவசாயம் தொழில்மயமாக்கப்படும், பிளாஸ்டிக் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மேலும் வழக்கமான மனித நுகர்வுக்கான பயிர்களில் பற்றாக்குறை ஏற்படும். இது உணவுப் பாதுகாப்பின்மையை விளைவிக்கும், இதனால் பசி, வேலையின்மை மற்றும் வறுமை அதிகரிக்கும். வழக்கம் போல, இந்த சுமை அடித்தட்டு மக்கள் மீது சுமத்தப்படும்.

போலிச்சலவை - ‘நான் அவன் இல்லை’ - Plastic   

கிரீன்வாஷிங் (போலிச்சலவை) என்பது நிறுவனங்கள் மக்களை ஏமாற்றும் யுக்தியை குறிக்கும் சொல்லாகும். நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் எந்த ஒரு சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தாது போன்ற போலி உரிமைகோரல்களை மக்களிடம் கோரி தங்களது தயாரிப்புகளை விற்பதாகும். 

உதாரணத்துக்கு ​​"நான் பிளாஸ்டிக் அல்ல" என்று கொட்டை எழுத்தில் குறிக்கப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் அவையெல்லாம் பயோ டீகிரேடபில்  மற்றும் கம்போஸ்ட்டபில் பிளாஸ்டிக் வகைகள். நிறுவனங்கள் தங்களது பிளாஸ்டிக்குகளை  வழக்கத்திற்கு மாறான பிளாஸ்டிக்குகள் என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் அதே வேளையில், ஏன் அதன் மேலாண்மை மற்றும் பிந்தைய பயன்பாடு வழிமுறைகளை வழங்க தவறுகின்றன? முன்பே குறிப்பிட்டது போல், நுகர்வோர்கள் சூழலுக்கு சாதகமான தயாரிப்புகளை வாங்குவதில் அதிக விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மக்களை தவறான முடிவுகளை தேர்ந்தெடுப்பதின் பக்கம் ஊக்குவிப்பதன் மூலம், நுகர்வோர் மனப்பான்மையில் ஏற்படும் இந்த மாற்றத்தை வெட்கமின்றி பணமாக்குகின்றன. இச்செயல், நுகர்வோர் சுற்றுச்சூழலுக்கு சாதகமான  தேர்வை மேற்கொள்கிறார்கள் என்று நம்பும்படி அவர்களை தவறுதலாக வழிநடத்துகிறது. ஆனால், இதுபோன்ற யுக்திகள் உண்மையில் பூமியின் சூழலை பெரிதும் சேதப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

இதற்கு உண்மையான தீர்வு என்ன?

பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான உண்மையான தீர்வு ரொம்ப சிம்பிள். அதன் உற்பத்தியை நிறுத்துவது! உலகளாவிய பிளாஸ்டிக் உடன்படிக்கைக்கான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையில் UNEP இன் நிர்வாக இயக்குனர் திருமதி இங்கர் ஆண்டர்சன் கூறியவாறு, நாம் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய முடியாது'. மறுபயன்பாடு மற்றும் பூஜ்ஜியக் கழிவு அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட நச்சுத்தன்மையற்ற சூழல் பொருளாதாரத்திற்குச் செல்வது மட்டுமே நிலைத்தன்மையான தீர்வாகும். பிளாஸ்டிக்கிற்கு மாற்று வழிகளை கண்டுபிடிப்பதற்காக உற்பத்தியாளர்கள் நிச்சயம் முதலீடு செய்ய வேண்டும். அதை விடுத்து, தற்காலிக தீர்வுகளும், போலி சலவைகளும் பிளாஸ்டிக் நெருக்கடிக்கு உண்மையான தீர்வாகாது.

பிளாஸ்டிக்கிற்கு மாற்று என்று கூறப்படும் கூற்றுகளை அரசு, சுயமாக,  நிதானமாக சோதித்து, அது அறிவியல் சான்றுள்ளதா, மேலும், அது நடைமுறைக்கு சாத்தியமானதா போன்ற கோணங்களில் ஆராய்ந்து, ஒழுங்குபடுத்துவதில்  கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய தர நிர்ணய பணியகத்தின் இயக்குநர் ஜெனரல் திரு. பிரமோத் குமார் திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எந்த பிளாஸ்டிக் பொருட்களும் 100% மக்கும் தன்மை கொண்டதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டார். இந்தியாவில் தரம் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டிற்காக இருக்கின்ற உச்ச அமைப்பான இந்திய தர நிர்ணய பணியகத்தில் இருந்து வரும் இத்தகைய அறிக்கை பெரிதும் பாராட்டப்பட்டாலும், பயோபிளாஸ்டிக்ஸின் சிக்கல் தன்மையை ஒப்புக்கொண்டு மக்கும் பிளாஸ்டிக்கின் சான்றிதழை ஏன் தர நிர்ணய அமைப்பு அனுமதித்தது என்பது கேள்விக்குறியாகவே  உள்ளது.

பயோபிளாஸ்டிக் மற்றும் வழக்கமான பிளாஸ்டிக் பைகளின் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த ஒரு ஆய்வில், 3 ஆண்டுகளாக மண்ணில் புதைக்கப்பட்ட மக்கும் பிளாஸ்டிக் பைகள் மிகவும் உறுதியாக மற்றும் இன்னும் முழு மளிகைப் பொருட்களையும் சுமக்க கூடிய தன்மை உள்ளவையாக இருக்கின்றன ' என்று கண்டறியப்பட்டது. நுகர்வோர் மீது எல்லா பழிகளையும் போட்டுவிட்டு சந்தையில் எளிதில் மற்றும் மலிவில் கிடைக்கக்கூடிய தயாரிப்புகளிலிருந்து நுகர்வோரை விலகி இருக்குமாறு சொல்வது, அதே சமயத்தில் உற்பத்தியாளர்களை இதுபோன்ற உற்பத்திகளை  தொடர அனுமதிப்பது, நியாயமற்றது.

பிளாஸ்டிக்கிலிருந்து மாற்று வழிக்கு செல்வது பற்றி பேசும் தருணங்களில், ​​கவனத்துடன் அல்லது பொறுப்புடன் இல்லை என்ற அப்பட்ட பழி, மற்றும் மாற்று பொருட்களின் பண சுமை எல்லாம் மக்கள் மீது விழுகிறது. இன்று பிளாஸ்டிக்  சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆராய்ச்சி செய்த பிறகு, பிளாஸ்டிக் மாசுவின் பிரச்சனையை நுகர்வோர் செயல்களை வைத்து மட்டுமே தீர்க்க முடியாது என்றும், அதற்கு நேர்மாறான செயல்பாடுகளை பிளாஸ்டிக் நிறுவனங்கள் செய்து வருகின்றன  என்றும் என்னால் உறுதியாகக் கூற முடியும். 

'தி ஸ்டோரி ஆஃப் பிளாஸ்டிக்' என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படம். அந்த ஆவணப்படம் பிளாஸ்டிக்கின் இன்றைய பிரச்னையை மிக அழகா எடுத்து கூறியிருக்கும். அதில், எப்படி நிறுவனங்கள் பிளாஸ்டிக்கை ஒரு நுகர்வு பிரச்சனையாக மக்களிடம் இத்தனை வருடங்களாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்று கூறியிருப்பார்கள். மேலும், பிளாஸ்டிக் நெருக்கடிக்கு ஒரே உண்மையான தீர்வு பிளாஸ்டிக் உற்பத்தி ‘குழாயை அணைப்பது’ - குழாயை மூடாமல், தொட்டியில் இருந்து சொட்டும் தண்ணீரை தடுக்க முடியாது என்ற ஒப்பிலக்கணத்தை மிக அழகாக சொல்லி இருப்பார்கள்.

மக்கள் இத்தனை வருடங்கள் ஒவ்வொரு சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்ச்சிகளிலும், பொது இடங்களிலும்  ‘பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்’ ‘பிளாஸ்டிக் வேண்டாம்’ போன்ற பல விழிப்புணர்வு வாக்கியங்களை பார்த்து, கேட்டு சலித்து வீட்டார்கள். ஆனால், ஏன் இதுபோன்ற வாக்கியங்கள் அரசு உற்பத்தி நிறுவனங்களிடம் சொல்வதில்லை? அவர்களுக்கு அதில் பங்கில்லையா? அவர்கள் தானே அதை உற்பத்தி செய்கிறார்கள். ஆகையால், பிளாஸ்டிக் பிரச்சனையை உற்பத்தியின் தொடக்கத்திலேயே தடுப்பது தான் சிறந்த தீர்வாகும். மாறாக, தற்காலிக போலி கண்டுபிடிப்புகளை ஆதரிப்பது  தீர்வாகாது.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and email addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.