சென்னை மாநகராட்சியின் தரவுகளின்படி, இந்தாண்டு தீபாவளிக்கு 406 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 406 மெட்ரிக் டன் = 1,353,333 பிஜிலி வெடி பாக்கெட்டுகள் (1 பிஜிலி வெடி பாக்கெட்டு = 300கிராம் இதில் 100 பிஜிலி வெடிகள் இருக்கும்). இன்னும் 50-60 மெட்ரிக் டன் கழிவுகள் கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் இந்த தரவுகளை ஒரு தோராய கணக்காக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், பொதுவாக பட்டாசு கழிவுகள் இதர வீட்டு கழிவுகளுடன் கலந்து கொட்டப்படுவதும், மற்றும், பட்டாசு கழிவுகள் சுற்றுசூழலில் எளிதாக கலந்துவிடுவதும், வழக்கம்.
படம் 1: ரோல் பட்டாசு துப்பாக்கி | Source
இன்று சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் பல தயாரிப்புகளில் பிளாஸ்டிக் மிக பரவலாக தென்படுகிறது - ஒருபுறம் உலகம் ஏற்கனவே கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை சமாளிப்பதற்கு தடுமாறிக்கொண்டு இருக்கும் வேளையில். நிறுவனங்கள் புதுசு புதுசாக தங்களது தயாரிப்புகளில் பிளாஸ்டிக்கை சேர்த்துக் கொண்டே போனால் இது சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் நலத்திற்கு கூடுதல் பளுவை கொண்டு சேர்க்கிறது.
சமீபமாக உற்பத்தியாகும் தீபாவளி பட்டாசுகளில் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுவது அதற்கொரு எடுத்துக்காட்டு. இந்த பிளாஸ்டிக்குகள் பட்டாசு பொருட்களில் எங்கே பயன்படுத்தப்படுகிறது எப்படி அது சுற்றுச்சூழலுக்கு கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பதை பற்றியெல்லாம் இந்த கட்டுரை விளக்குகிறது.
நாங்கள் புதிதாக ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபெயர்ந்தோம். அந்த குடியிருப்பில் மொத்தம் 330 குடும்பங்கள் வசிக்கின்றன. அங்கே சென்ற சில நாட்களிலேயே எனக்கு நிறைய சிறார்களுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அவர்களுடன் நான் எனது பெரும்பாலான வேலை விடுப்பு நேரத்தை செலவழிப்பது வழக்கம். கடந்த ஐந்து மாதங்களில் இந்த சிறார்களை மிக அருகில் இருந்து கவனித்து கொண்டு இருக்கின்றேன். ஓவ்வொரு நாளும் இவர்கள் என்னை ஆச்சரியப்படுத்த தவறியதேயில்லை. தினம் தினம் ஒரு புது விஷயத்தை பற்றி உரையாடிக்கொண்டே இருக்கிறார்கள் - உணவு, உடை, திரைப்படம், அனிமேஷன், மேலும் பல. அதிலும் சிலர் தினமும் ஒரு புது விளையாட்டுப் பொருளை கொண்டு வந்து விளையாடுவது வழக்கம். அப்படி நான் வித்தியாசமான அனிமி பொம்மைகள், கார்கள், மற்றும் பல விளையாட்டு பொருட்களை பார்த்து இருக்கிறேன். இப்படியும் குழந்தைகளை கவருவதற்கு விளையாட்டு சாமான்கள் வருகிறதா என்று ஆச்சரியப்பட்டதும் உண்டு. ஆனால் இவர்கள் விளையாடும் பொம்மைகள் பெரும்பாலும் பிளாஸ்டிக்கினால் ஆனவை. மேலும் இந்த பொருட்களின் ஆயுள் காலம் வெறும் ஒரு சில நாட்கள் மட்டுமே - ஒன்று இந்த விளையாட்டு பொருட்கள் சேதம் அடைந்து விடும், அல்லது குழந்தைகளுக்கு இதன் மீதான ஆர்வம் குறைந்து விடும்.
இந்நிலையில், எப்பவும் போல், சென்னையில் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பே பட்டாசு வியாபாரம் களைகட்டத் தொடங்கிவிட்டது. எங்களது குடியிருப்பில் நிறைய சிறார்கள் வெடிகளை தீபாவளிக்கு முன்பே வெடிக்க தொடங்கிவிட்டனர். ஒருநாள் இரவு சில சிறார்கள் இரு குழுவாக பிரிந்து ஒருவருக்கொருவர் பொம்மை துப்பாக்கிகளை வைத்து சுட்டு விளையாடிக் கொண்டு இருந்தனர். நாம் சிறுவயதில் பார்த்த ரோல் பட்டாசு துப்பாக்கிகள் போல் அது இல்லை. சற்று வித்தியாசமாக இருந்தது. அதில் இருந்து வரும் பட்டாசின் சப்தமும் சற்று அதிகமாகவே இருந்தது. ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு, திரைப்படங்களில் வருவதைப்போல, சட சட - வென நொடிப்பொழுதில் சுட்டுவிட்டு அந்த துப்பாக்கியில் இருந்து சிறு பிளாஸ்டிக் குப்பிகளை எடுத்து வெளியில் போட்டுவிட்டு அடுத்த சுற்றுக்கு தயாராகிறார்கள்.
படம் 2: பிளாஸ்டிக் துப்பாக்கியும் குப்பிகளும்| Source
காலையில் எங்கள் குடியிருப்பு முழுவதும் ஆங்காங்கே சிகப்பு நிற பிளாஸ்டிக் குப்பிகள் பரவி கிடந்தன. சற்று பக்கத்தில் சென்று பார்த்தேன். அது மிகவும் சிறிய அளவிலான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட குப்பிகள் அதில் வெடி மருந்தை நிரப்பி, துப்பாக்கியின் ட்ரிகரில் ஏற்படும் அழுத்தத்தினால் வெடி சப்தம் உருவாகிறது. ஒரு நொடி பொழுதில் இந்த வெடி மருந்து குப்பிகள் வெடித்து சிதறி, பின்பு சிதைந்த நிலையில் சின்னஞ்சிறு பிளாஸ்டிக் துகள்களாக சுற்றுச்சூழலில் காணப்படுகிறது. இதுபோல ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் குப்பிகள் எங்கள் ஒரு குடியிருப்பில் மட்டுமே காணப்பட்ட்து.
தமிழ்நாட்டில் இந்தாண்டு ஆறாயிரம் கோடிகளுக்கு பட்டாசு விற்பனை நடந்துள்ளது. சென்னையின் அனைத்து பெட்டிக்கடைகளிலும் பிளாஸ்டிக் துப்பாக்கியும் அதனுடன் சேர்ந்த பிளாஸ்டிக் குப்பிகளும் பரவலாக விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பிளாஸ்டிக்கிலான பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கும், மற்றும், மனித உடல்நலத்திற்கும் பெரும் பேராபத்துகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது என்பது அதை பயன்படுத்தும் பலர் அறியாத செய்தி.
சந்தையில் இன்று பட்டாசுகளில் அதிகப்படியான பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு, கிரினெட் (Grenade) வெடிகள். இந்த வெடிகள் முழுவதுமாக பிளாஸ்டிக் குப்பிகளால் குழந்தைகளை கவரும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குப்பி/பொம்மைக்கு வெளியில் உள்ள திரியை கொளுத்தினால், அந்த குப்பிக்குள் இருக்கும் வெடி, வெடித்துச் சிதறுகிறது. அதனுடன் சேர்ந்து அந்த பிளாஸ்டிக் குப்பிகள் துண்டு துண்டாக வெடித்துச் சிதறுகின்றன.
படம் 3: பிளாஸ்டிக் கிரினெட் வெடி | Source
இப்படி நாம் வெடிக்கும் வெடிகளில் பிளாஸ்டிக்குகள் ஊடுருவி இருப்பதை பற்றி சூழலியலார், ஜியோ டாமின், பூவுலகின் நண்பர்கள், அவர்களிடம் கேட்டபோது - “பட்டாசுகள் அடிப்படையிலேயே சூழலுக்கும் மக்களின் நலனுக்கும் விரோதமானவைதான். அவற்றை இன்னும் அதிக மோசமானவையாக மாற்றும் அளவிற்கு, அவற்றில் பயன்படுத்தப்படும் காகிதமானது நச்சு நெகிழிப் பொருட்களால் மாற்றீடு செய்யப்பட்டு வருகிறது. இது பட்டாசுகளை முன்னெப்போதையும்விட, மேலும் அதிக அபாயகரமான, சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் உற்பத்திப் பொருட்களாக மாற்றியிருக்கிறது.”
காற்று மாசு மற்றும் குப்பை மேலாண்மை சிக்கல்கள்
பொதுவாக தீபாவளி நாட்களில் காற்றின் தரம் மோசமாவது வழக்கம். கூடுதலாக, புதிதாக களமிறங்கி இருக்கும் பிளாஸ்டிக் பட்டாசுகளை அதிக அளவில் வெடித்துக்கொண்டு இருப்பதால், இது மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாட்டை கூட்டுகிறது. கண்ணுக்கு புலப்படாத சின்னஞ்சிறு பிளாஸ்டிக் துகள்கள் (மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்) நமது உடல்நலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது - உதாரணத்திற்கு, புற்றுநோய் காரணிகள், இதயக் கோளாறு, சுவாசக் கோளாறு, மற்றும் பல சூழல் சிக்கல்கள். மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் காற்றில் எளிதாகக் கலந்துவிடக்கூடியவை . இன்று, நாம் குடிக்கும் தண்ணீர் முதல் வெடிக்கும் பட்டாசு வரை மைக்ரோ பிளாஸ்டிக் மாசுப்பாட்டால் மண்டிக்கிடக்கிறது. மைக்ரோ பிளாஸ்டிக்கால், மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலே குறிப்பிட்ட துப்பாக்கிகளில் பயன்படுத்தபட்ட சின்னச்சிறு பிளாஸ்டிக் குப்பிகள், மற்ற வீட்டு குப்பைகளுடன் சேர்த்து கொட்டப்படுவதால், இது, நகரங்களில் ஓரளவு இருக்கும் குப்பை மேலாண்மை முயற்சிகளையும் சீர் குலைக்கிறது. இதன் அளவு மிகவும் சிறியதாக இருப்பது கூடுதல் சவால். இந்த நிலை கிராமங்களில் இன்னும் மோசமாக இருக்கிறது. சீரான குப்பை மேலாண்மை வசதிகள் மற்றும் விழிப்புணர்வு இல்லாததால், கிராமப்புரங்கள் இது போன்ற பண்டிகைக் காலங்களில் கூடுதல் சிரமத்திற்கு ஆளாகின்றன என்கிறார்கள்.
குழந்தைகளுக்கு காலநிலை கல்வி
குழந்தைகளின் ஒரு சில மணித்துளிகளின் பொழுதுபோக்கு, சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகளை, குழந்தைகளிடம் எடுத்துரைக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் இருந்து வருகிறோம். பாடத்திட்டத்தில், காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் கல்வி வெறும் கிள்ளுக் கீரையாக மட்டும் இல்லாமல், முழுநேர கட்டாய கல்வியாக மாற்ற வேண்டியது அவசியமாகிறது
மேலும், பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்களின் முழு பொறுப்பை உற்பத்தியாளர்கள் ஏற்கும் வகையில் நீடிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு விதிகளை சீர்படுத்தவேண்டும். அதேபோல், பண்டிகை காலங்களில் வெடி பொருட்களின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் அதை கண்காணிக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக பட்டாசு உற்பத்தியை குறைத்து விட்டு, அதை சார்ந்து இருக்கும் மக்களை எந்த ஒரு வாழ்வாதார பாதிப்பையும் ஏற்படுத்தாமல், அவர்களை சிரமமற்ற முறையில், சூழல் ஒத்த பணிகளில் அமர்த்துவதே நியாயமான மாற்றுத் தீர்வாகும் (Just transition).
Add new comment