தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நீர் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974- ன்படி, 27 பிப்ரவரி 1982- இல் உருவாக்கப்பட்டது. இவ்வாரியம், பிற சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களான காற்று (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 மற்றும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986 ஆகியவற்றையும், அச்சட்டங்களின் கீழ் உள்ள விதிகளையும் நடைமுறைப்படுத்துகிறது.
அந்த வகையில், இவ்வாரியத்தின் செயல்பாடுகளை தரவுகள் கொண்டு ஆராய்வதற்கு, சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (சிஏஜி) ஒரு ஆய்வினை மேற்கொண்டது. அவ்வாய்வு (i) வாரியத்தின் அமைப்பு மற்றும் அதன் கொள்கை வகுப்பு திறனை கண்டறிவது; (ii) வாரியத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் பணிக்காலம் மற்றும் அவர்கள் எந்த வகையில் வாரியத்தின் செயல்பாட்டுக்கு பங்காற்றுகிறார்கள் என அறிவது; (iii) வாரியத்தின் செயல்பாடுகளுக்கான அதன் மனித வளத்தை ஆய்வு செய்வது ஆகிய மூன்று நோக்கங்களை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பிட்ட ஆய்வுக்கான தரவுகள் முதன்மையாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகவும், வாரியத்தின் வலைத்தளங்களில் இருந்தும் பெறப்பட்டது. மேற் சொன்ன தரவுகளின் படி, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகளை மேலும் எவ்வாறு வலுப்பெறச் செய்ய முடியும் என்பது குறித்த சில முக்கிய பரிந்துரைகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தோடு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பான சிஏஜி யின் முழு அறிக்கை பின்வரும் இணையதள முகவரியில் கிடைக்கப்பெறும்: https://bit.ly/TNPCBstatus
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல்
மாநிலத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால், நீர் சட்டத்தின்படி அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வது முக்கியம்.
மீன்பிடித் தொழில் சார் பிரதிநிதித்துவம்
வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களாக, இரு விவசாய, ஒரு தொழில் துறைப் பிரதிநிதிகள் உள்ளனர். இந்தியாவிலேயே இரண்டாவது நீளமான கடலோர பகுதிகளை கொண்ட தமிழகத்தின் புவியியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மீன்பிடித் தொழில் சார் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது முக்கியம். இது வாரியத்தின் முடிவுகளில் கடலோர சமூகங்களின் நலன்கள் பாதுகாக்க துணை புரியும்.
வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நிலைப்படுத்துதல்
நீர் சட்டத்தின்படி, உறுப்பினர் செயலாளரைத் தவிர்த்து, பிற உறுப்பினர்களுக்கு மூன்றாண்டு பதவிக் காலம் பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், ஆய்வு முடிவுகளின் படி, பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரின் பிரதிநிதித்துவத்தைத் தவிர, பிற அலுவல் சார் உறுப்பினர்கள் எவரும் மூன்று ஆண்டுகளுக்கு முழுமையாக வாரியத்தில் பங்காற்றவில்லை. வாரியத்தின் தொடர் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய இவ்வகையாக அடிக்கடி நிகழும் உறுப்பினர் மாற்றங்களைத் தடுக்க, உறுப்பினர்களுக்கு நிலையான பதவிக் காலத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால், நீர் சட்டம் அல்லது அது தொடர்புடைய விதிகளில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
வாரியத்தின் தலைமைப் பொறுப்புகளின் பதவிக்காலத்தை நிலைப்படுத்துதல்
வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் செயலாளரின் பதவிக்காலம் நிலையற்றதாக உள்ளது. ஆறு வருட தரவுகளின்படி, ஒவ்வொரு தலைவரும், உறுப்பினர் செயலாளரும் சராசரியாக வெறும் ஒன்பது மாதங்கள் மட்டுமே பணியாற்றி உள்ளனர். தலைவராக இந்திய வனப்பணி அதிகாரி ஒருவர், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். எந்தவொரு அமைப்பின் செயல்திறனை மேம்படுத்த, நீண்ட காலத்திற்கு தலைமையின் பதவிக்காலத்தை உறுதிப்படுத்துவது அவசியம். உதாரணத்திற்கு காவல் துறையின் உயர் பதவிகளுக்கு பின்பற்றப்படும் நடைமுறையைப் போலவே நீர் சட்டம் மற்றும் அதன் விதிகளில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலத்தை வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு நிர்ணயிக்கலாம்.
வாரியத்தின் கூட்டங்களில் உறுப்பினர்களின் மெய்நிகர் பங்கேற்பு
கோவிட்-19 தொற்று காலங்களின் போது பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வாரியக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்வதற்கான தீர்வை வழங்குகிறது. பல்வேறு காரணங்களால், கூட்டங்களுக்கு நேரில் வர இயலாத அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள், காணொளி வாயிலாக கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். இது அனைத்து துறை சார் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும்.
வாரியத்தின் பிரதிநிதித்துவம்
தமிழ்நாடு நீர் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 1983 வாரியக் கூட்டங்களின் போது, முடிவெடுக்க ஐந்து உறுப்பினர்களின் இருப்பு போதுமானது என்கிறது. இருப்பினும், நீர்ச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அனைத்து உறுப்பினர்களுக்கும் இதன் படி பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. எனவே, மாநில அரசு, விவசாயம், மீன்பிடி, தொழில், வர்த்தகம் அல்லது தொடர்புடைய துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு துறை மற்றும் நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் ஒரு உறுப்பினரையாவது பிரதிநிதித்துவப்படுத்த தேவையான திருத்தங்கள் மேற்சொன்ன விதியில் கொண்டு வரலாம். இது மிகவும் சமநிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய முடிவெடுக்கும் செயல்முறையை உறுதி செய்யும்.
நிதிப் பயன்பாடு
வாரியத்தின் நிதியானது சில நேரடி சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில்லா பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது என தரவுகள் கூறுகிறது. எனவே நேரடி சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்புடைய பணிகளுக்கு மட்டும் வாரியத்தின் நிதியை பயன்படுத்த வேண்டும்.
பணியாளர் காலியிடங்கள்
பொறியியல் சார்ந்த 303 அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில், 238 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன, அதாவது 21% காலியாக உள்ளன. அறிவியலாளர் பணியிடங்கள் 54% காலியாக உள்ளது. எனவே, வாரியத்தின் பொறியியல், அறிவியல் மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் இருந்தாலும், அவற்றை நிரப்ப அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒப்புதல்களுக்கு நியாயமான காலக்கெடு
நிறுவனங்களின் ஒப்புதல் தொடர்பான விண்ணப்பங்களின் மீது 45 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்பது வாரியத்தின் லட்சியம். ஆனால் தரவுகளின் படி எந்த விண்ணப்பத்திற்கும் மேற்சொன்ன கால இடைவெளிக்குள் முடிவெடுக்கப்படவில்லை. இதற்கு முதன்மையான காரணம், பொறியியல் சார் மனித வளங்களின் காலியிடங்களாக இருக்கலாம். எனவே, தற்போதைய மனித வளத்தை கணக்கில் கொண்டு ஒரு நியாயமான காலக்கெடு வரையறுக்கப்பட வேண்டும்.
புகார்களைக் கையாளும் செயல்முறை
மாசு தொடர்பாக, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் வாரியாக, முடித்து வைக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள புகார்களின் தரவுகள் வாரியத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பதிவு செய்யப்பட்ட மொத்த புகார்களின் எண்ணிக்கை, அவற்றில் எத்தனை நீதிமன்றங்களில் வழக்காக பதிவுசெய்யப்பட்டது, தண்டனை விதிக்கப்பட்டது, விடுவிக்கப்பட்டது, நிலுவையில் உள்ளது மற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்ற தரவுகள் இல்லாதது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களின் அமலாக்கத்தை முழுமையாக புரிந்து கொள்வதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
இப்படியான சில முக்கிய பரிந்துரைகள், மேற்சொன்ன சிஏஜி யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை 2017-2022 காலத்திய தரவுகளின் அடிப்படையிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாகவே இந்தியாவில் மாசு கட்டுப்பாடு வாரியங்களின் செயல்பாடுகள் குறித்தான ஆய்வுகள் மிக சொற்பமே. அந்த வகையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இந்த அறிக்கையும், மேற்சொன்ன பரிந்துரைகளும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகளுக்கு வலுசேர்க்கும் நல் நோக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும், இவற்றை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், நிதி நிலைமை குறித்து இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கட்டுரையானது, முதலில் பூவுலகு மே மாத இதழில் வெளியானது.
Add new comment