இந்த நகரம், சுறு சுறுப்பாக இயங்கி கொண்டு இருக்கும் ஒரு குழந்தை! தினமும் இது ஓடி, ஆடி, விளையாடி களைத்து வரும்! மீண்டும் காலையில் இதை புதிப்பித்து, அழகுசேர்த்து , சீர்படுத்தி பள்ளி செல்லும் பிள்ளை போல அழகாக மாற்றுவது தூய்மை பணியாளர்களே!
படம் 1: தனது அன்றாட பணியை செய்து கொண்டு இருக்கும் தூய்மை பணியாளர்
நமது பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள தூய்மை பணியாளர்கள் வகிக்கும் பங்கு என்பது ஒரு மகத்தான போற்றுதலுக்குரிய பெரும் பங்கு, அவர்கள் மிகவும் பாராட்டுதலுக்குரியவர்கள். குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக அவர்கள் செய்த, செய்து கொண்டு இருக்கின்ற சேவை, மிகவும் போற்றத்தக்கது! ஆனால் நம்மில் எத்தனைபேர் அவர்களை, அவர்களின் இன்றியமையாத பணியை, அங்கீகரிக்கிறோம்?
திருக்குறள்:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
மு.வரதராசன் விளக்கம்:
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
சஞ்சீவி குமார், மேரி, எடிசன், பழனியம்மாள் ஆகிய தூய்மை பணியாளர்களின் நேர்மையை போற்றி கூறுவதே இந்த கட்டுரையின் சிறப்பாகும்.
சமீபத்தில் சென்னை, புழலில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த சஞ்சீவி குமாருக்கு, குப்பையை தரம் பிரிக்கும் போது, குப்பையில் 8 சவரன் மதிப்புள்ள தங்க நகை கிடைத்துள்ளது. அதை உடனடியாக அதன் உரிமையாளரிடம் பத்திரமாக திருப்பி கொடுத்துள்ளார் சஞ்சீவி. இது தூய்மை பணியாளர்களுக்கு புதிதல்ல. இது போன்ற பல நேர்மையான நிகழ்வுகளை இவர்கள் செய்து இருக்கின்றனர். சஞ்சீவின் இந்நற்செயலை பலர் பாராட்டியும், வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர். இது பாராட்டத்தக்கதே! அதே நேரம், இத்தூய்மை பணியாளர்களின் குறைகளையும், வேண்டுகோளையும் கேட்பதற்கு ஒரு ஐந்து நிமிடம் நாம் ஒதுக்கினால், அது அவர்கள் வாழ்வு செம்மை அடைய வழிவகுக்கும்.
படம் 2: தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள் சஞ்சீவியை பாராட்டியபோது
"அடுத்தவர் பொருள் நமக்கு தேவையில்ல சார், நாம கஷ்டப்படுறோம் சாப்புடுறோம்"
என்று பேச தொடங்கினார் மேரி. ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் மேரி, கடந்த வருடம் அக்டோபர் மாதம் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது அன்றாட பணியை செய்து கொண்டு இருந்த போது, ஒரு தங்க நாணயம் குப்பையில் கிடைத்துள்ளது. முதலில் அது பித்தளை என்று நினைத்து வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். பின்பு அந்த நாணயத்தில் எழுதி இருந்த விவரங்களை பார்த்த அவரது மகன் அது தங்கம் என்று அவரிடம் கூறியுள்ளார். மறுநாள் முதல் வேலையாக அந்த தங்க நாணயத்தை தனது மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்துள்ளார். பின்பு அது அதன் உரிமையாளர்களிடம் கொடுக்கப்பட்டது. 5 லட்சம் மதிப்புடைய அந்த 100 கிராம் தங்க நாணயத்தை நேர்மையாக திருப்பி கொடுத்த மேரியை பல உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டினார்கள் மற்றும் சிலர் அவருக்கு பரிசு பொருட்களையும் கொடுத்தார்கள். "ஆனா யாருமே என் கஷ்டத்த கேக்குல சார்" என்று உருக்கமாக சொல்லுகிறார் மேரி. தான் இதே தூய்மை பணியில் கடந்த 13 வருடங்களாக நகராட்சியிடம் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்துள்ளார். இவரது கணவரும் 18 வருடங்களாக வேலைபார்த்து வந்துள்ளார். ரூபாய் 50 சம்பளத்தில் இருந்து வேலை செய்யும் இவர்கள் ஏதேனும் ஒருநாளில் மாநகராட்சியால் பணிநிரந்திரம் செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் உழைத்துள்ளனர்; ஆனால் கடைசி வரையில் இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவே இல்லை. பணியில் இருந்த போதே இவரது கணவரும் இறந்துவிட்டார். இன்று மாறாக இன்னொரு தனியார் திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்திடம் கை மாற்றி விடப்பட்டுள்ளார் மேரி. அங்கே ஒரு வருடமாக 10,500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். பல நாட்களாக போராடிவருகிறார் ஆனால் பயன் இல்லை. "நாங்க இத்தன வருஷமா உழைச்சோம், எனக்கு 45 வயசாகுது; இன்னும் எனக்கு சர்வீஸ் இருக்கு ஆனா ஒரு பிரயோசனமும் இல்ல, இன்னிக்கு என் பையனும் மலேரியா டிபார்ட்மென்டல ஏழு வருஷமா காண்ட்ராக்ட்ல வேலை செஞ்சிகிட்டு இருக்கான். அவனையாச்சும் பெர்மனென்ட் பண்ணனும்” என்றும், இன்றும் விடாமல் முயற்சி செய்து கொண்டு இருப்பதாகவும் கூறினார் மேரி.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் இன்று 11 மண்டலங்களின் திடக்கழிவு மேலாண்மையின் பொறுப்பு தனியாரிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதனால் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் பல வருடங்களாக பணிநிரந்தர நம்பிக்கையில் வேலை பார்த்து வந்த பலருக்கு வேலை பறிபோனது¹, சிலரோ மேரி போல தனியாரிடம் கை மாற்றி விடப்பட்டனர்.
படம் 3: மேரியை உயர் அதிகாரிகள் பாராட்டியபோது
எனக்கு ஒண்டி இல்ல, எல்லாருக்கும் செய்யணும்
“நான் தினமும் காலையில 7 மணிக்கு வேலைய ஸ்டார்ட் பண்ணுவேன் அந்த மாறி ஒரு நாள் காலையில வேலை செஞ்சினு இருக்கும் போது ஒரு பை கிடைச்சுது. அது தொறந்து பார்த்தேன் அதுல காசு இருந்துச்சு அத பார்த்த உடனே அத நான் என் பாக்குல எடுத்து வெச்சிகிட்டேன். வேலை முடிஞ்சு போகும் போது சூப்பர்வைசர் கிட்ட கொடுத்துடலாம்னு, அப்பறோம் நா பாட்டுக்கு என் வேலைய பாத்துகிட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு சில போலீஸ் காரங்க எதையோ தேடிகிட்டு வந்தாங்க. நா அங்க பக்கத்துல இருக்குற ஆட்டோ கார்ட கேட்டேன். அவர் சொன்னாரு ‘எதோ காசு தொலஞ்சுடுச்சான். அதே தான் தேடுறாங்கனு. பின்பு நா என் பாக்குல இருக்குற காச எடுத்துட்டு, சார் இந்த காசா பாருங்க னு போலீஸ் காரிடம் கேட்டேன், நான் இந்த பைய என் சூப்பர்வைசர்கிட்ட டூட்டி முடிஞ்சதும் கொடுக்கலாம்-னு வெச்சிருக்கேன்-னு சொன்னேன். அவர் அந்த பைய வாங்கிகிட்டு என்ன போலீஸ் ஸ்டேஷனுக்கு வரசொன்னாரு. முதல்ல நா போக மறுத்தேன். டூட்டி நேரத்துல எங்கையும் போக கூடாது-னு சொன்னேன், அப்பறோம் என் சூப்பர்வைசர் கிட்ட பெர்மிசன் வாங்கிட்டு போலீஸ் ஸ்டேஷன் போனேன். அங்கே அந்த பணத்தோட சொந்தக்காரங்க இருந்தாங்க, பணத்த அவங்க கிட்ட தர சொன்னாரு போலீஸ்கார், அவங்க அந்த காசு வாங்கி எண்ணி பாத்தாங்க. அதுல 20 ஆயிரம் இருந்துச்சு, காசெல்லாம் கரெக்ட்டா இருக்குனு சொன்னாங்க. அப்றோம் எல்லாரும் பாராட்டுனாங்க; போட்டோ எடுத்தாங்க; கடைசில எனக்கு அந்த காசுல இருந்து அஞ்சாயிருவ கொடுத்தாங்க. நா வேணான்னு சொன்னேன், எடுத்துத்துட்டு போனும்னா அப்பவே மொத்த காசையும் எடுத்துட்டு போயிருப்பேன்; எனக்கு மத்தவங்க காசு வேணாம் என்று சொல்லி அங்கு இருந்து வந்துவிட்டேன்” என்று விவரிக்கிறார் எடிசன். தனது மகள் பள்ளி வகுப்புகளை தொடர ஸ்மார்ட் போன் இல்லாமல் கஷ்டப்பட்ட நிலையிலும், நேர்மையை கைவிடாத அவரது தூய்மையான மனதை, செயலை, என்னவென்று பாராட்டுவது! இந்த சம்பவம் நிகழ்ந்தேறி ஆறு மாதங்கள் ஆகின்றன. வெறும் 11,500 ரூபாய் சம்பளத்தில் தான் இவரது மொத்த குடும்பத்தையும் சமாளித்து வருகிறார். சில தினங்களுக்கு முன், சில தூய்மை பணியாளர்களிடம் பேசும்போது, அவர்கள், “பெரும்பாலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் சம்பளம் 9000 ஆயிரம் முதல் 12000 திற்குள் தான் இருக்கும். இந்த சம்பளம் மாத இறுதிக்கு முன்னரே முடிந்துவிடும். பின்பு அவசர தேவைகளுக்கு வட்டிக்கு கடன் வாங்கி தான்சமாளிக்க வேண்டிவரும். பின்பு அந்த வட்டியை செலுத்துவதற்கு இதர தூய்மை பணிகளும் சில வீடுகளில் கொடுக்கும் பத்து இருபதுகளில் தான் காலத்தை தள்ளிகொண்டுஇருக்கிறோம். சமீபத்தில் எங்கள் சம்பளத்தை உயர்த்த கோரிக்கை வைத்துள்ளோம்”, என்று கூறியிருந்தனர். இதனை உர்பேசர் சம்மெட் மேற்பார்வையாளர்களும் உறுதிசெய்திருந்தனர். தற்போது, இதை பற்றி எடிசனிடம் கேட்டபோது, அவர் புன்னகையுடன் "எனக்கு ஒண்டி இல்ல, எல்லாருக்கும் செய்யணும்" என்றார். நாம் தெரிந்துகொள்ள வேண்டிய, நினைவில் வைக்க வேண்டிய, முக்கியமான விஷயம் - இன்றும் கூட சென்னையில் பல வீடுகள் கொரோனா வினால் தனிமை படுத்தி கொண்டுள்ளனர். அந்த வீடுகளின் கொரோனா கழிவுகளை (மருத்துவக் கழிவுகள்) பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது தூய்மை பணியாளர்களே! தொடர்ந்து மூன்று வருடங்களாக இவர்களின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலும், வேலைப் பளுவும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு தக்க ஊதியமும், சன்மானமும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதே நியாயம்.
படம் 4: எடிசன் பேட்டரி வண்டி ஓட்டும் போது
ரொம்ப அநியாயம் பண்றாங்க
படம் 5: பழனியம்மாள் தூய்மை பணியின் போது
பழனியம்மாளும் அப்படி தான். நான்கு மாதத்திற்கு முன்பு, சென்னை கஸ்தூரிபா நகரில் உள்ள ஒரு தெருவில் கூட்டி பெருக்கிக் கொண்டு இருந்த போது அவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஒரு பையில் கிடைத்துள்ளது. அதை அவர் நியாயமாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவமும் பலரால் பேசப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி இவரை பாராட்டி விருதும் கொடுத்தது. இவருக்கும் சில கோரிக்கைகள் உண்டு "சில பேர் ரொம்ப அநியாயம் பண்ணுவாங்க சார். நாங்க பெருக்கினு இருப்போம், திடீர்னு ரோட்ல குப்பைய தூக்கி போட்டு போவாங்க. அது ஒண்டி இல்ல நாங்க பெருக்கன குப்பையை போடுற டப்பால சத சதனு இருக்குற கவுச்சி குப்பைய தூக்கிப்போட்டு போவாங்க. அப்றோம் அத நாம வேற டப்பாக்கு மாத்துவோம், மாத்தும்போது அந்த அழுக்கு தண்ணியெல்லாம் நம்ம மேல விழும். இத கேட்டா உன்னோட வேல இதான நீ பண்ணுனு சொல்லுவாங்க. நிறைய பேர் மரியாதையே குடுக்கமாட்டாங்க. நாங்க சொல்றத கேக்க மாட்டாங்க" பழனியம்மாள் சொல்வதை போலவே மண்டலம் 10ல் பேட்டரி ஆட்டோ
ஓட்டும் லட்சுமிபதியும் கூறினார் "நம்ம ஆஃபீஸ்ல சொல்வாங்க வீடுவீடா போய் குப்பையை தரம் பிரிச்சு குடுக்க சொல்லுங்கன்னு. நாங்க போய்சொல்லுவோம். சில பேர் கேப்பாங்க. சில பேர் கேட்டு அத பாலோவும் பண்ணுவாங்க. ஆனா சில பேர் சட்ட கூட பண்ணமாட்டாங்க. இதெல்லாம் உன்வேலை தானே நீயே பண்ணுனு சொல்வாங்க. அந்த குப்பைய அப்பறோம் நாங்க தான் தரம் பிரிப்போம். சில பேர் அவங்க வீட்டு குப்பைய வந்து எடுக்க சொல்வாங்க மத்த வீட்ல எடுத்துட்டு வரதுக்குள்ள, லேட்டா ஏன் வரேன்னு சண்டைக்கு வருவாங்க. சில நேரத்துல அசிங்கமா கூட பேசுவாங்க, சில பேர் வீட்டு மேல இருந்து குப்பையை வீசுவாங்க அது எங்க மேல பட்டாலும் சாரி கேக்க மாட்டாங்க. சில பேர் எங்ககிட்ட ரொம்ப மரியாதையா பேசுவாங்க, நடத்துவாங்க, ஆனா பலபேர் மரியாதையே கொடுக்கமாட்டாங்க இப்படி பல சம்பவங்கள் தினம் நடக்கும் சார்" என்கிறார் லட்சுமிபதி.
படம் 6: மண்டலம் 10ல் பேட்டரி ஆட்டோ ஓட்டும் தூய்மை பணியாளர், லட்சுமிபதி
நாம் ஒரு முக்கியமான நிகழ்வை மறந்து விடக்கூடாது - சென்னையின் பெருவெள்ளத்தின் போது நாம் பொறுப்பில்லாமல் வடிகால்களில் தூக்கி போட்ட பிளாஸ்டிக் கழிவுகளை இவர்கள் அகற்றாமல் இருந்திருந்தால் இன்றளவும் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியிருக்காது, இவர்கள் சாலைகளில் சரிந்த மரங்களை அகற்றாமல் இருந்திருந்தால், சென்னையின் போக்குவரத்து சீராகி இருந்திருக்காது, மொத்தத்தில் சென்னையை மீண்டும் இயல்பு நிலைக்கு மாற்றியவர்கள் தூய்மை பணியாளர்களே!
திருக்குறள்:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
சாலமன் பாப்பையா விளக்கம்:
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகையும் கொடுத்தாலும் சமம் ஆகாது.
ஏழ்மையிலும் நேர்மையாக இருக்கும் இவர்களை நாம் மனதார பாராட்டுவோம். அதே நேரம், தங்களது வாழ்க்கை தரம் உயர, அவர்கள் வைத்திருக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளையும், வேண்டுகோள்களையும் அரசும், இவர்களது நிறுவனமும், நாமும் நிறைவேற்றிடவேண்டியது அவசியம்.
இதை படித்த பிறகு, நாம் செய்ய அஞ்சும், நமக்காக குப்பையில்லா சுத்தமான நகரத்தை உருவாக்க பாடுபடும் இவர்களுக்கு ஏதேனும் விதத்தில் உதவ வேண்டும் என்று தோன்றுகிறதா? நாளை காலை உங்கள் வாசலில் தரம் பிரித்த குப்பையுடன் இவர்களுக்காக புன்னகையுடன் காத்திருங்கள்
Add new comment