Skip to main content

அள்ள அள்ள குறையா பிரச்சனைகளின் குவியல் - கொடுங்கையூர் குப்பை கிடங்கு

கொடுங்கையூர் - ஏறக்குறைய எழுபதாயிரம் பேர் வாழும் இந்த பகுதி , ஏழு கல்லூரிகள், ஏறக்குறைய 30 அரசு, தனியார் பள்ளிக்கூடங்கள், மூன்று பேருந்து பணிமனைகள், ஒன்பது நடுத்தர & பெரிய மருத்துவமனைகள், இறைவழிபாடுகள் செய்ய தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள் கொண்ட  வட சென்னையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.

சென்னையில் கிழக்கு கொடுங்கையூரின் சரிபாதியான பகுதி இன்றைக்கு சென்னையின் பெரும்பாலான மக்களின் கழிவுகளை சுமக்கும் இடமாக மாறிவிட்டது.

சதுப்பு நில பகுதியாக இருந்த இந்த பகுதியை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக 1986 ல் சிறிய அளவில், அதாவது 65 ஏக்கர் பரப்பளவில் அன்றாட திடக்கழிவுகளை தற்காலிகமாக குவித்து, திடக்கழிவு மேலாண்மை செய்ய துவங்கப்பட்டது , ஆனால் 32 ஆண்டுகள் ஆன பிறகும் இன்றைக்கு சுமார் 350 ஏக்கர் பரப்பளவை கடந்து வட சென்னையின் சாபமாக மாறிக்கொண்டிருக்கிறது இந்த கொடுங்கையூர் குப்பை கிடங்கு.

 

(கொடுங்கையூர் குப்பை கிடங்கின் வரைப்படம் )

 

 201804100240004682_Summer-fire-chokes-Kodungaiyur_SECVPF.gif

(குப்பை கிடங்கில் தீ)

தண்டையார் பேட்டை பிரதான சாலையில் உள்ள இந்த கிடங்கானது  சுமார் மூன்று மாடி குடியிருப்பு உயரத்திற்கு ஓங்கி உயர்ந்திருக்கிறது. கிடங்கின் எங்காவது ஒரு மூலையில் எப்போதும் எரிந்துகொண்டே இருப்பதனால் வெளியேறும் நச்சு புகை, போதாதகுறைக்கு வழியெல்லாம் குப்பைகளை சிந்திய வண்ணம் வரும் குப்பை அள்ளும் வாகனங்கள் அந்த பகுதிமக்களின் மக்களின் சுகாதாரத்திற்கு சவால் விடுகிறது

குப்பைகளை பொறுத்தவரை தரம் பிரிப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி  சொல்லிவந்தாலும் அங்கு ஒரு நாளைக்கு சென்னையின் பல Zoneகளில் இருந்து பல்லாயிரம் டன் தரம் பிரிக்கப்படாத குப்பை வந்து குவிக்கப்படுகின்றன. வீட்டு உபயோகப் பொருட்களில் இருந்து வரும் கழிவுகள் , சமையல் கழிவுகள், துணிகள், பிளாஸ்டிக் போன்ற கழிவுகள், மின்சாதன கழிவுகள், சிறிய & பெரிய கடைகளின் மூலம் உருவாகும் கழிவுகள், தொழிசாலைகளில் இருந்து வரும் கழிவுகள், கட்டிட இடிபாட்டு கழிவுகள், மது, புகையிலை, குளிர்பங்கள் & போதை பொருட்களின் கழிவுகள், மருத்துவ கழிவுகள், துப்புறவு கழிவுகள்,  பரிசோதனை மையங்களின் கழிவுகள் என வகை படுத்தப்பட்ட மற்றும் வகை படுத்த இயலாத வகையிலும், இந்த கிடங்கிற்கு கொண்டு வந்து குவிக்கப்படுகிறது. இதனால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏறாளம்.

காற்று:

பல தரப்பிட்ட குப்பைகள் இங்கு குவிக்கப்படுவதால் ஒன்றோடு ஒன்று கலந்து அதிலிருந்து வரும் வேதியல் வினையால் நச்சு காற்று உருவாகி சுவாச கோளாறுகளை உருவாக்குகிறது. கொடுங்கையூர் பகுதி காற்றை சுவாசிக்கும் ஒவ்வொருவரும் சுமார் 19 நச்சுகள் கலந்த, உடலின் வெவ்வேறு பகுதிகளை பாதிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக 2012 ல் நடந்த ஒரு ஆய்வு தெளிவுபடுத்துகிறது.

 

 Kodungayur Dump - Pazhani pc.jpeg

(குப்பை கிடங்கை சுற்றியிருக்கும் காற்று மிகவும் மாசு பட்டு காணப்படுகிறது)

நிலம்:

கிடங்கில் கொண்டு வந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து வரும் நீர்மங்கள், மருத்துவ கழிவுகளில் இருந்து வரும் வேதியியல் நீர்மங்கள், கழிவுகளில் இருந்து வரும் நீர்மங்கள், தொழிற்சாலை கழிவுகளில் இருந்து வரும் நீர்மங்கள், மின்சார கழிவுகளில் இருந்துவரும் நீர்மங்கள் என பல தரப்பட்ட நீர்மங்களுக்கு பல்வேறு வேதியியல் தன்மையுள்ளவை. அவையெல்லாம் புவியீர்ப்பு விசையால் நிலத்தில் தன்மையை மாற்றிவிடும். நிலத்தின் தன்மை மாறுவதால் நிலத்தடி நீரும் வேதியியல் நச்சு தன்மை கொள்ளும். எனவே நிலத்தடி நீர் கெட்டுப்போவதுடன், அந்த நிலத்தை சார்ந்துள்ள பல்லுயிர்களும் வாழ்வியல் ஆபத்திற்குள்ளாகின்றன, இதனால் பல்லுயிர் பெருக்கத்தின் சூழலியல் உடைபடுவதுடன் சுழலியலே ஆபத்திற்குள்ளாக வாய்ப்புகள் உள்ளது.

நீர்:

கிடங்கினால் அந்த பகுதி வாழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை அறிய சென்ற ஒரு கள ஆய்வின் போது கிடங்கின் எதிரில் இருக்கும் RR நகரில் நிலத்தடி நீர் பற்றி விசாரித்தோம். அவர்கள், அங்கு ஒரு இடத்தில் கூட நிலத்தடி நீர் எடுக்கும் அடிபம்பு மற்றும் மோட்டார் இல்லை என்றும் அதையெல்லாம்  அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே அகற்றி விட்டதாகவும் கூறினர். காரணத்தை கேட்ட போது, நிலத்தடி நீர் முற்றிலும் குடிக்கும் மற்றும் பயன்படுத்தும் தன்மையை இழந்து விட்டதால் சுற்றிலும் இருந்த கிணறு மற்றும் மோட்டார் இணைப்பை அகற்றியதாக கூறினார்கள். மேலும் விசாரிக்கையில் RR நகர் 3வது தெருவில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னதாக போடப்பட்ட மோட்டார் மட்டும் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்று, அவர்களிடம் அந்த மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்துத்தர கேட்டோம் அவர்களும் எடுத்து கொடுத்தனர். அந்த நீர் கருப்பான நிறத்திலும், துர் நாற்றத்துடனும் இருந்தது, கொஞ்சம் கூட அருந்தவோ அல்லது மற்ற பயன்பாடுகளுக்கோ அறுகதையற்றதாக இருந்தது

நிலத்தடி நீர் மாசுபட்டதை அறிந்த போதிலும் அன்றாட பயன்பாடுகளுக்கு மாநகராட்சி வழங்கும் நீர்(Metro Water) போதிய அளவு கிடைக்காத காரணத்தினால் வேறு வழியின்றி கட்டாயத்தின் பேரில் இந்த மாசுபட்ட நீரை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் இந்த பகுதியில் வாழும் மக்கள். இதனால் நீர்வழி வரும் நோய்களுக்கு எளிதில் ஆட்படுகின்றனர்

மேற்பரப்பு நீர்:

ஒரு சமயம் வட சென்னையின் தாகம் தீர்த்துவந்த முக்கிய கால்வாய்களான கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய் & பக்கிங்காம் கால்வாய் ஆகிய மூன்று காலவய்கள் இன்று மனிதன் அருகில் செல்வதற்கு கூட அறுகதையற்றதாக முழுதும் சாக்கடை நீராக மாறிவிட்டது, அதற்கு காரணம் கால்வாய்களில், பகுதி மக்களின் கழிவு நீரும், அருகில் இருக்கும் தொழிற்சாலைகளின் கழிவு நீரும் கலக்க விட்டதே. இன்று பெயரளவில் மட்டுமே கால்வாய்களாகவும், உண்மையில் பெரிய அளவிலான சாக்கடையாகவும் இருக்கின்றன.இன்று இவை ஒவ்வொன்றும் குப்பை கிடங்காக மாறி விட்டன.

 

(கொடுங்கையூர் கால்வாயின் தற்போதைய கவலைக்குறிய நிலை )

மழைநீர்: 

ஆண்டு ஒன்றுக்கு 40 செமீ முதல் 60 செமீ வரை மழைப்பொழிவு இருக்கும் கொடுங்கையூர் பகுதியில் மழை நீர் சேமிப்பிற்கான எந்த ஏற்பாட்டையும் மக்களும் மேற்கொண்டதாகவோ அல்லது அரசும் முயற்சி எடுத்ததாகவோ தெரியவில்லை. மழைநீர் வடியவாய்ப்பில்லாமல் மக்கள் வாழிடங்களில் தேங்கிவிடுகிறது. இதனாலும் நோய் தோற்று ஏற்படுகிறது. இங்கு இருக்கும் கால்வாய்களும் நிரம்பி மக்கள் வாழும் வீட்டிற்குள்ளும் நிரம்பி விடுகிறது மேலும் வருடக்கணக்கில் குப்பை கிடப்பதால் மழைநீருடன் சேர்ந்து அதிகளவிலான துர்நாற்றத்தையும், நோய் தொற்றையும் உண்டாக்குகிறது.

குப்பை கிடங்கின் அருகில் மக்கள்:

குப்பை கிடங்கை சுற்றி மிக அருகாமையில் RR நகர், சந்திர சேகர நகர், எழில் நகர், KKD நகர் ஆகிய பகுதிகள் இருக்கிறது. மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது. குறுகலான தெருக்களும், அடர்ந்த வீடுகளுமாய் இருக்கிறது. குப்பை கிடங்கில் பல வேதிப்பொருட்கள் இருப்பதால் அது தாமாக எரிந்து பெரும் தீ விபத்தாகவோ அல்லது வெடித்து சிதறவோ வாய்ப்புகள் அதிகம்

இப்படி மக்கள் வாழ்வதற்கு எந்தவகையிலும் தகுதியற்ற நிலையில் இருக்கும் கொடுங்கையூரை மீட்க பல ஆண்டுகளாக போராட்டங்களும் வழுத்துக்கொண்டேதான் இருக்கிறது, தேர்தல் சமயங்களில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் உறுதியளிக்கும் ஒன்று "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடுங்கையூர் குப்பை கிடங்கு இடமாற்றப்படும்" என்பதே அதற்கு கடந்த இருபது ஆண்டுகளாக கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையே சாட்சி.

(குப்பை கிடங்கின் உட்புறம்)

மக்களின் குரல்கள்:  திருமதி மோகனா பேசும்போது "கவர்மெண்ட் கொடுக்குற இடம், எல்லாம் பாதுகாக்கப்பாகத்தான் இருக்கும்னு நம்பித்தான் தான் இங்க வந்தோம், ஆனா எந்த பாதுகாப்பும் இல்லை, அடிப்படை வசதி கூட இல்லாம வந்துட்டமேன்னு வாழ்ந்துகொண்டிருகிறோம், என்னைக்காவது அரசாங்கம் நல்லது செய்யும் என்ற நம்பிக்கைமட்டும்தான் இருக்கு" என்றார்.

திரு முகம்மது பேசுகையில் "இந்த ஹோட்டல் ஒரு அஞ்சு வருசமா இருக்கு, குப்பை மேட்டுக்கு எதிரிலேயே இருக்குங்கறது ஆரம்பத்தில ஒரு யோசனையைத்தான் இருந்தது ஆனா போக போக பழகிருச்சி, இன்னைக்கு இங்க வேலை செய்றா எல்லாரும் வந்து சாப்பிடுற இடமா இருக்கு, இந்த நாத்தமெல்லாம் இப்போ எங்க மூக்கு, நாக்கோ தெரியறதே இல்ல" என்றார்.

திரு ஆறுமுகம், அந்த பகுதியில் வாழ்பவர், "இங்க இருக்குற நெறைய பெரு வீட்டில நைட்ல யாரும் தூங்குறதே இல்ல, பகல்லதான் தூங்குறாங்க ஏன்னா? இங்க பகலிலேயே கொசு கடிக்குது, இன்னா வெயிலூனாலும் ராவும் பகலும் தொல்லைதான், கொசுவும் ஈயும் போட்டி போட்டுக்கிட்டு எங்க நிம்மதியா இருக்க விடுறதே இல்ல" என்றார்

தீர்வு :

அள்ள அள்ள குறைய பிரச்சனைகளின் குவியல் -  கொடுங்கையூர் குப்பை கிடங்கும் எனும் வட சென்னையின் மிகப்பெரும் ஆபத்து.

குப்பை கிடங்கு என ஒன்று உருவாக காரணமே இப்பொது நாம் கடைபிடிக்கும் குப்பை அப்புறப்படுத்தும் முறைதான், ஊரெங்கும் உருவாகும் குப்பையையே அந்த அந்த பகுதியிலேயே ஆட்களை கொண்டு பிரித்து கையாளாமல் ஒரு பகுதில் கொண்டு வந்து கொட்டி குவித்து வைக்கும் முறைதான். இதற்காக கொடுங்கையூர் மட்டும் அல்ல எந்த பகுதியில் இந்த முறைகளை செயல்படுத்தினால் அது பெரும் பிரச்சனைதான். அதற்காக கொடுங்கையூரை இடம் மாற்றினால் மட்டும் எப்படி சரியாகும் தவிர, கொடுங்கையூர் குப்பை கிடங்கை இடம் மாற்றினாலும் பிரச்சனைதான் காரணம் அங்குள்ள 15 சதவீத மக்கள் அதை கொண்டு வாழ்வாதாரம் பெற்று வாழுகின்றனர். இடமாற்றம் செய்ய அவ்வளவு பெரிய இடமோ, சாதனமோ, வசதியோ தற்போது அரசிடம் இருப்பதாக தெரியவில்லை ஆனால் தீர்வை நோக்கி நகர வேண்டியது அவசியமே. எனவே முறையான, அறிவியல் பூர்வமாக கிடங்கை செயலிழக்கவோ அல்லது திட கழிவு மேலாண்மைக்கோ இன்று நாமும் அரசும் செயல்பட சிந்திக்கவில்லையெனில் உலகில், நிலத்தில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கான சீனாவின் Guiyu வை மிஞ்சிவிடுவோம். எனவே சென்னையின் எதிர்காலம் கவனத்தில் கொண்டு, குப்பையின் உற்பத்தியை முதலில் குறைத்து, அது உற்பத்தி ஆகும் இடத்திலேயே தறம் பிரிப்பதை நாம் துவங்க வேண்டும். அரசும்  தறம் பிரிப்பதை கட்டாயமாக்கி, மக்கும் குப்பையை பக்குவபடுத்தல், மக்காத வற்றை மறு சுழற்சிசெய்தல், அப்புறபடுத்தல் என குப்பை மேலாண்மை மையப்படுத்துதலிலிருந்து உடனடியாக மாற வேண்டும்

Work area

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and email addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.