Skip to main content

ஆரோக்கியமாக இருப்போம், இரத்த அழுத்தத்திலிருந்து விலகி இருப்போம்

இரத்தம், இரத்த நாளங்களில் உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. இதயம் துடிக்கும்போது, ​​இரத்தம், இரத்த நாளங்களுக்குள் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செல்லும் இரத்தம், இரத்த நாளங்களின் உட்புறச் சுவர்களில் கொடுக்கும் அழுத்தம், இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, “உயர் இரத்த அழுத்தம்” அல்லது “ஹைப்பர்டென்ஷன்”  என்று அழைக்கப்படுகிறது. அதேபோல, உள்சுவர்களுக்கு இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தால், அது “குறைந்த இரத்த அழுத்தம்” அல்லது “ஹைபோடென்ஷன்” என்று அழைக்கப்படுகிறது. 

உலகளவில், இருதய நோய் மற்றும் இள வயது இறப்புகளுக்கு உயர் இரத்த அழுத்தம் முக்கிய காரணமாகும். உலக இதய அறக்கட்டளையின் படி, உலகளவில், பாதிக்கும் மேலான இதய நோய் மற்றும் பக்கவாதம் தொடர்பான இறப்புகளுக்கு, இது பொறுப்பு. குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் கணிப்புப்படி, உலகில், 30 முதல் 79 வயதுக்குட்பட்ட 1.28 பில்லியன் நபர்கள் உயர் இரத்த அழுத்தத் தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், பெரும்பான்மையானவர்கள் (மூன்றில் இரண்டு பங்கு) குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசிக்கின்றனர்.

உலக சுகாதார அட்வகேசி இன்குபேட்டர் என்ற அமைப்பின் ஆய்வு படி,  இந்தியாவில், 200 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளனர், இதில், 20 மில்லியன் மட்டுமே அதனை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் . சமீபத்திய இந்திய கவுன்சில் மருத்துவ ஆராய்ச்சியின் (ஐசிஎம்ஆர்) படி, உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்டவர்களில் 10% பேர் மட்டுமே அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள், அல்லது, அவர்களின் இரத்த அழுத்த அளவைக் குறைக்கிறார்கள். 

உயர் இரத்த அழுத்தம்,   பக்கவாதம் மற்றும் டிமென்ஷியா;  தமனி சேதம் மற்றும் குறுகுதல், தமனிகளில் அனியுரிசம்; கரோனரி தமனி நோய், மாரடைப்பு, இதய செயலிழப்பு; மற்றும் சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரகத்தில் சிறுநீரக தமனி அனியுரிசம், போன்றவற்றை  ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

உயர் இரத்த அழுத்தம்  என்பது பொதுவாக காணப்படும் மருத்துவ நிலை என்றாலும், மக்கள் எந்த அறிகுறிகளையும் எளிதில் உணர்வதில்லை. அதனாலேயே இதனை “அமைதியான கொலையாளி” என்று அழைக்கின்றனர். 

உயர் இரத்த அழுத்தத்திற்கான  குறிப்பிடத்தக்க ஆபத்து காரணிகள்:

  • மரபியல்
  • அதிக எடை 
  • அதிக உப்பு உட்கொள்ளல்
  • பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைவாக உட்கொள்ளுதல்
  • சரீர உழைப்பில்லாத வாழ்க்கை முறை
  • குறைவான உடற்பயிற்சி / உடற்பயிற்சி இல்லை
  • அதிகமாக மது அருந்துதல்
  • புகைபிடித்தல்
  • மன அழுத்தம்
  • பதப்படுத்தப்பட்ட/அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல்

ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள அவர் வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 

இரத்த அழுத்த அளவீடுகளைப் புரிந்துகொள்வோம்:

இரத்த அழுத்த அளவீடு மேலும் கீழுமாக இரண்டு எண்களை கொண்டுள்ளது மற்றும் மில்லிமீட்டர் பாதரசத்தில் (mmHg) அளவிடப்படுகிறது. உதாரணம்:  120/80mmHg. இரத்த அழுத்தத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் சாதனம் ஸ்பைக்மோமனோமீட்டர் ( sphygmomanometer) என்று அழைக்கப்படுகிறது. 

  1. சிஸ்டாலிக் (systolic) இரத்த அழுத்தம் (முதல் எண்) - இதயம் இரத்தத்தை வெளியே தள்ளும் போது, அதாவது, இதயம் துடிக்கும்போது தமனி சுவர்களில் (arterial walls) இரத்தத்தால் கொடுக்கப்படும் அழுத்தம்.
  2. டயஸ்டாலிக் (diastolic) இரத்த அழுத்தம் (இரண்டாவது எண்) - துடிப்புகளுக்கு இடையில் இதயம் ஓய்வெடுக்கும்போது தமனி சுவர்களில் இரத்தத்தால் கொடுக்கப்படும் அழுத்தம்.

உதாரணமாக, உங்கள் இரத்த அழுத்தம் 120/80mmHg எனில், உங்களுக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 120mmHg மற்றும் டயஸ்டாலிக் அழுத்தம் 80 mmHg என்று அர்த்தம்

வெவ்வேறு இரத்த அழுத்த அளவீடுகளும், அதன் விளக்கமும்:  

இயல்பானது: <120/<80

சற்று அதிகமான இரத்த அழுத்தம்: 120-129/<80

உயர் இரத்த அழுத்தம் நிலை 1: 130-139/80-89

உயர் இரத்த அழுத்தம் நிலை 2: 140+/90+

உயர் இரத்த அழுத்த நெருக்கடி: 180+/120+

தொடர்ந்து உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்:

  • கடுமையான தலைவலி
  • நெஞ்சு வலி
  • தலைசுற்றல்
  • சுவாசிப்பதில் சிரமம்
  • குமட்டல்
  • வாந்தி
  • மங்கலான பார்வை அல்லது பார்வையில் பிற மாற்றங்கள்
  • கவலை
  • குழப்பம்
  • காதுகளில் சத்தம்
  • மூக்கில் இரத்தக்கசிவு
  • அசாதாரண இதய துடிப்பு

உடனடி மருத்துவ உதவியை நாடுவது மிகவும் முக்கியம்.

உயர் இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வாழ்க்கை முறை மாற்றங்கள்:

செய்ய வேண்டியவை                       செய்யக்கூடாதவை

  • தொடர் உடல் பரிசோதனைக்கு செல்லுங்கள் 
  • உங்கள் மருத்துவரை அணுகவும்
  • மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்
  • பழங்கள் மற்றும் காய்கறிகளை நிறைய உட்கொள்ளுங்கள்
  • உங்கள் தூக்க சுழற்சியை பராமரியுங்கள்
  • தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்
  • உடலை சுறுசுறுப்பாக வைத்திருங்கள்
  • நீங்கள் அதிக எடை / பருமனாக இருந்தால் எடையைக் குறையுங்கள்
  • ஆரோக்கியமான, சீரான உணவைப் பின்பற்றுங்கள்
  • மருந்தை தவிர்த்தல் 
  • அதிக உப்பு உட்கொள்ளுதல் 
  • டிரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்ளுதல்
  • மது அருந்துதல் 
  • புகை பிடித்தல்
  • புகையிலையை உட்கொள்ளுதல்
  • அதிக காஃபின் உட்கொள்ளுதல்
  • நிறைய உட்காருதல் 
  • பதப்படுத்தப்பட்ட/ அதிக பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்ளுதல்

இந்திய அரசு, 2025 ஆம் ஆண்டளவில் உயர் இரத்த அழுத்தப் பரவலில் 25% குறைவதை இலக்காக நிர்ணயித்துள்ளது. இது, ‘25-இல்-25’ இலக்காகும். இதை நிறைவேற்றுவதற்காக, இந்தியாவில் உள்ள சுமார் 220 மில்லியன் உயர் இரத்த அழுத்தம் உள்ள பெரியவர்களுக்கு சிகிச்சை சேவைகளை விரைவாக அணுகுவதற்காக, இந்திய அரசு, இந்திய உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டு முயற்சியை (Indian Hypertension Control Initiative) உருவாக்கி, செயல் படுத்தி வருகிறது.

 இரத்த அழுத்த கண்காணிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், உலகம் முழுவதும்  உயர் இரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலக இரத்த அழுத்தம் தினம் ஒவ்வொரு வருடமும் மே 17 அன்று அனுசரிக்கப்படுகிறது.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and email addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.