- மசாலாவில் எதிலீன் ஆக்ஸைடு மாசு; குழந்தைகள் உணவில் சர்க்கரை சேர்ப்பு; உணவில் அளவுக்கு மீறிய பூச்சிக்கொல்லிகளின் எச்சம்; காய்கறி மற்றும் பழங்களில் செயற்கை சாயம்;
- ரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைத்தல்; பால், நெய், தானியம், மசாலா, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் போன்ற அநேக உணவு பொருட்களில் கலப்படம்; மாறிவிட்ட உணவு கலாச்சாரம், உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகமுள்ள அதி பதப்படுத்தப்பட்ட (ultra-processed), பொட்டலப்படுத்தப்பட்ட (packaged) உணவுகளின் பெருக்கம்;
- வியாபாரத்தைப் பெருக்கும் நிமித்தம், உணவு பற்றிய பொய்யான, தவறான தகவல்களைத் தரும் விளம்பரங்கள்; லேபிள்களில் வெளிப்படையாக தகவல்கள் இல்லாமை;
இவை அனைத்தும், சமீபகாலமாக நாம், அன்றாடம், செய்திகளாகப் படிக்கும் / பார்க்கும்/ அனுபவிக்கும் - உணவு தொடர்பான, நமது ஆரோக்கியத்தையும், மனதையும் பாதிக்கும் - விஷயங்கள்!
என்னதான் நடக்கிறது?
உணவு கலப்படம் மற்றும் மாசுபடுதல்
உயிர் வாழ்வதற்கு, மனிதர்கள் உட்பட, எல்லா உயிரினங்களுக்கும் அத்யாவசியமாகிறது உணவு. அத்தகைய உணவு, தரமானதாக, பாதுகாப்பானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், இன்றோ, லாபத்தைப் பெருக்கும் நோக்கோடு, உணவு உற்பத்தியாளர்கள், விலை குறைந்த, தரக்குறைவான, பொருட்களை உணவுடன் கலப்பது அடிக்கடி நடக்கிறது.
உணவு விநியோக சங்கிலியில், கலப்படம் என்பது எந்த நிலையிலும் நிகழலாம். உணவு கலப்படத்தால் தீவிர உடல் நலப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். உணவுப் பொருட்களில் பெரும்பாலும் நச்சுத்தன்மை கொண்ட கலப்படங்கள் இருப்பதால், அவை உடனடி மற்றும் தீவிர நோய்களுக்கு வழிவகுக்கின்றன.
பாலில் சுத்தமற்ற தண்ணீர்/ சோப்புத் தூள், சர்க்கரையில் சுண்ணாம்பு பவுடர், மிளகாய் பொடியில் செங்கல் தூள், தானியங்களில் சிறு கற்கள்/ தூசி, மிளகில் பப்பாளி விதை, கடுகில் அர்ஜீமோன் விதை, நெய்யில் காய்கறி எண்ணெய், இப்படி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல உணவு பொருட்களில் கலப்படங்கள் உள்ளன. உலகளவில், 22% உணவுப்பொருட்களில் கலப்படம் உள்ளதாகவும், 57% மக்கள் அதனால் பாதிக்கப்படுவதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
உலகளவில், 10-ல் ஒருவர், மாசுபட்ட உணவை உண்பதால் நோய்வாய் படுகின்றனர், என்கிறது உலக சுகாதார அமைப்பு. சரியான சுகாதார முறைகளை பின் பற்றாதது, தொழில்நுட்ப பிழைகள், சரிபார்க்கப்படாத நுண்ணுயிர் செயல்பாடு, பூச்சிக்கொல்லி எச்சம் மற்றும் நுண்ணுயிர் கொல்லியின் முறைகேடான பயன்பாடு, உணவு சேமிப்பு மற்றும் போக்குவரத்தின் போது ஏற்படும் மாசுபாடுகள் ஆகியவை, இந்தியாவில், உணவு பாதுகாப்பை பெருமளவில் கேள்விக்குறி ஆக்கியுள்ளன என்கின்றன அறிவியல் சான்றுகள். இதனால், வயிற்றுப்போக்கு, நாளமில்லா சுரப்பி கோளாறுகள், பிறவி குறைபாடுகள், கேன்சர் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன.
பொய்யான, தவறான விளம்பரங்கள்
விளம்பரங்கள் பெரும்பாலும் சற்று மிகைப்படுத்தி இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்றோ, விளம்பரங்கள் பெருமளவில் பொய்யாகவும், மக்களுக்குத் தவறான செய்தியைத் தருபவையாகவும் இருக்கின்றன. வியாபாரத்தையும், லாபத்தையும் பெருக்கும் நிமித்தம், குழந்தைகளையும், இளைஞர்களையும் குறி வைத்து வெளியிடப்படும் விளம்பரங்கள், அவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உயரமாக வளர, அதிக சக்தி பெற, மூளை வளர்ச்சிக்கு, மறதி இல்லாமல் இருக்க, அதிக புரத, தாது மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது, ஆரோக்கியம் நிறைந்தது என்று எல்லாவற்றிற்கும் உணவு தயாரிப்புகள் இருப்பதாக விளம்பரங்கள் வருகின்றன. ஆனால், அவை, உண்மையில் அவர்களது கூற்றுபோல் செயல் படுகின்றனவா, அதற்கான மூலப் பொருட்கள் அந்த உணவில் உள்ளனவா என்பது சந்தேகமே! இது போதாதென்று, சினிமா மற்றும் விளையாட்டுத் துறை நட்சத்திரங்கள் இந்த விளம்பரங்களில் நடிக்கும்போது, நுகர்வோர், குறிப்பாக குழந்தைகள், அவற்றால் ஈர்க்கப்பட்டு, அந்தப் பொருட்களை வாங்க முற்படுகின்றனர்.
‘ஆரோக்யமான பானம்’ என்ற பெயரில் விளம்பரப் படுத்தப்படும் பானங்களில் உள்ள கலவைப் பொருட்களை உற்று நோக்கினால் அவற்றில் ஆரோக்கியத்திற்கானவற்றைவிட, உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களே அதிக அளவில் உள்ளன.
லேபிள்கள்
பொட்டலம் செய்யப்பட்ட உணவு பொருட்களில் உள்ள லேபிள்களில், தயாரிப்பின் பெயர்; தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி; தயாரிப்பாளர்/ இறக்குமதியாளர் பெயர், முகவரி; கலவை பொருட்கள் பற்றிய விவரம்; எடை; l அதிக பட்ச சில்லறை விலை; சைவம் மற்றும் அசைவ உணவிற்கான சின்னம்; போன்ற முக்கியத் தகவல்கள் அவசியம் இடம் பெற வேண்டும் என்கிறது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம். ஆனால், நாம் அன்றாடம் வாங்கும் எத்தனையோ பொட்டலம் செய்யப்பட்ட உணவு பொருட்களின் லேபிள்களில் இத்தகைய தகவல்கள் இல்லாமல் போகின்றன என்பதே உண்மை!
அதே போல், லேபிள்களின் பின் பகுதியில், அந்த தயாரிப்பில் உள்ள ஊட்டச்சத்து பற்றிய தகவல் வழங்கப்பட வேண்டும். யதார்த்தத்தில், இந்த ஊட்டச்சத்து பற்றிய தகவலை படிப்பவர்கள் மிக குறைவே, என்கின்றன ஆய்வுகள். இதற்கான முக்கிய காரணங்கள்:
- மிகச் சிறிய அளவிலான எழுத்துகள் இடம் பெறுவது;
- நுகர்வோர் ஒரு லேபிளைப் பார்க்க ஒரு சில வினாடிகளே செலவழிக்கிறார்கள்;
- ஊட்டச்சத்து பற்றிய தகவல் மிகவும் குழப்பும் விதத்தில் உள்ளது. உதாரணமாக, ஒரு லேபிளில் சர்க்கரை பற்றிய தகவலே பல பெயர்களில் - மொத்த சர்க்கரை, சேர்க்கப்பட்ட சர்க்கரை, சுக்ரோஸ், பிரக்டோஸ் - போன்று இருந்தால், ஒரு சாதாரண நுகர்வோர் அதில் இருக்கும் சர்க்கரை அளவை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?;
- தகவல், அறிவியல் ரீதியில் உள்ளது. அதனால் அநேகம் பேருக்குப் புரிவதில்லை;
- மேலும், பெரும்பாலும் தகவல் ஆங்கிலத்தில் உள்ளது.
இன்றைய உணவு கலாச்சாரம்
நமது உணவு கலாச்சாரம் கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக மாறிவிட்டது. நேரமின்மை, சுவை, ஈர்ப்புத்தன்மை, வசதி, சமைக்க எளிது போன்ற பல காரணங்களால், துரித உணவு, மற்றும் பதப்படுத்திய பொட்டலப்படுத்தப்பட்ட உணவு நம் வாழ்வில் முக்கியமாகிவிட்டது. இவற்றில் பெரும்பாலும் உப்பு, சர்க்கரை மற்றும்/ அல்லது கொழுப்பு அதிகம் இருக்கும். இதனால், இளவயது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இளமையில் சர்க்கரை நோய், இதய நோய்கள், கேன்சர் போன்ற பல தொற்றில்லா வியாதிகள் அதிகரித்து வருகின்றன.
உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 (Food Safety and Standards Act, 2006):இந்தியாவில் உணவு தரத்தை மேம்படுத்துவதும், உணவுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதும் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும் - உணவுகளின் தயாரிப்பு, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் ஆய்வு ஆகியவற்றை ஒருங்கிணைந்து கண்காணிக்கிறது.உணவு பாதுகாப்பு சட்டத்தில், 9-வது அத்தியாயத்தின் கீழ், பிரிவுகள் 48 முதல் 67 வரை, பாதுகாப்பற்ற உணவு, தரமற்ற உணவு, தவறான முத்திரை குத்தப்பட்ட உணவு, கலப்படங்களை வைத்திருத்தல், சுகாதாரமற்ற வகையில் உணவு தயாரித்தல், முறையற்ற விளம்பரங்கள், தவறான செய்தி, போன்ற பல தவறுகளுக்கும், பல விதமான அபராதங்களும், தண்டனைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019
நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தச் சட்டத்தில், 7-ஆம் அத்தியாயத்தின் கீழ், பிரிவு 90-இல், கலப்படம் செய்த பொருட்களைத் தயாரிப்பது, சேமிப்பது, விற்பது, இறக்குமதி செய்வது போன்றவற்றிற்கான தண்டனை மற்றும் அபராதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரிவு 89-இல், முறையற்ற விளம்பரங்களுக்கான தண்டனை மற்றும் அபராதங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களும் சட்டத்தின் வரம்பிற்குள் வருவார்கள். விளம்பரங்களில் நடிக்கும்முன், அவர்கள், விளம்பரத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை அதிகார அமைப்பின் சமீபத்திய நடவடிக்கை
உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை அதிகார அமைப்பு என்பது இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளில் ஒன்று. இந்த அமைப்பின் முதன்மை நோக்கம் சட்டங்களை வகுத்து, பாதுகாப்பான உணவை வழங்கி, மக்களின் நலத்தைக் காப்பது ஆகும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை அதிகார அமைப்பு (Food Safety and Standards Authority of India – FSSAI) வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, 2022 -23 - இல், மொத்தமாக 1,77,511 உணவு பொருட்கள் அவற்றின் தரத்திற்காக சோதிக்கப் பட்டதாகவும், அவற்றில் 44,626 (25%) பொருட்கள் சட்டத்திற்கு இணங்கவில்லை என்றும், (பாதுகாப்பற்றது, தரக்குறைவு, தவறான லேபிள், தவறான விளம்பரங்கள் - இப்படிப்பட்ட காரணங்களால்) இவற்றில், 6579 பொருட்கள் பாதுகாப்பற்றவை என்றும் கண்டறியப்பட்டன. இது மிகவும் கவலைக்குரிய விஷயம்.
அதிகார அமைப்பின் 2023-24 -ற்கான தற்காலிக புள்ளிவிவரத்தின் படி, 1, 22, 795 உணவு பொருட்கள் சோதனை செய்யப்பட்டதாகவும், அவற்றில் 24,794 (20%) பொருட்கள் சட்டத்திற்கு இணங்கவில்லை என்றும் தெரிகிறது.
சென்ற வருடம், நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் 80,513 சிவில் வழக்குகளும், 13,496 கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தது.
மேலும், 51, 599 சிவில் வழக்குகள், மற்றும் 1957 கிரிமினல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு, சட்டத்தை மீறியவர்கள் மீது 163.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
பிரச்னை எங்கே? தீர்வு என்ன?
மேலே கூறியதுபோல் நடவடிக்கைகள் இருக்கும்போது, பிரச்னை எங்கே உள்ளது என்று ஆராய்ந்தோமேயானால்,
முதலாவதாக, வெகு விரைவில் தீர்வு கிடைக்கக்கூடிய வலுவானச் சட்டம் தேவை. உதாரணத்திற்கு, தற்போதைய சட்டத்தில், தரத்திற்கு இணங்காத பொருட்களைப் பற்றிய விவரங்களை அதிகார அமைப்பு வெளியிட வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், மக்களுக்குத் தெரிவிக்கவும், தவறு செய்வோரை மறுமுறை செய்யாமல் தடுக்கவும், தரக் குறைவான பொருட்கள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் அறியும்படி வெளியிடுவது அவசியம். அதேபோல், விரைவில் தீர்ப்பும், நடவடிக்கையும் இருந்தால்தான் மக்களின் நம்பிக்கை பெருகும்; தவறு செய்பவர்கள் திருந்தவும் வழி வகுக்கும்.
இரண்டாவதாக, அமலாக்கம் சிறப்பாக இருக்க வேண்டும். எல்லா உணவு வகைகளிலும், குறிப்பிட்ட கால இடைவெளியில், சீரற்ற மாதிரிகள் (random samples) எடுத்து, சோதிக்கப்பட வேண்டும். தர குறைவான, கலப்படமுள்ள, மாசுபடிந்த, பாதுகாப்பில்லாத, உணவு பொருட்கள் என்று கண்டறியப்பட்ட பொருட்களின் தயாரிப்பாளர்கள் மீது உடனடியாக, தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சோதிக்கப்பட்ட உணவு பொருட்கள் அவற்றின் நிலை பற்றிய தகவல் பொதுப்படையாக வெளியிடப் படவேண்டும். இது, நுகர்வோருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
மூன்றாவதாக, அமலாக்கம் முக்கியமாக மாநிலங்களிடம் உள்ளது. ஆகவே, மாநிலங்கள் உணவு பாதுகாப்பை முன்னிலைப் படுத்தி செயல்பட வேண்டும். எல்லா விதமான கலப்படங்கள், மாசு படிந்த, தரம் குறைந்த உணவு பொருட்களையும், சோதனை செய்யும் வகையில், அங்கீகாரம் பெற்ற சிறந்த சோதனைக்கூடங்கள் எல்லா மாநிலங்களிலும் போதிய அளவு நிறுவப்பட வேண்டும். சோதனைக்கான கட்டணங்கள், மலிவாக, பொது மக்கள் அணுகக்கூடியதாக இருக்கவேண்டும்.
நான்காவதாக, தவறான விளம்பரங்கள், தவறானக் கூற்றை லேபிளில் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் மீது தக்க, துரித, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஐந்தாவதாக, பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களில் உள்ள அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், இப்பொருட்களின் லேபிளின் முன் பக்கத்தில், அதிக உப்பு/ சர்க்கரை/ கொழுப்பு உள்ளது என்று தெளிவான எச்சரிக்கை கொடுக்கப்பட வேண்டும். இது, நுகர்வோர், அவர்கள் உடல் நிலைக்கு ஏற்ப, உணவை தேர்வு செய்ய உதவும்.
கடைசியாக, ஆனால், மிகவும் முக்கியமாக, நுகர்வோர், விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். ஆரோக்கியமற்ற, அதி பதப்படுத்தப்பட்ட உணவை முடிந்தவரை தவிர்த்து, உடலுக்குத் தேவையான, சத்துள்ள உணவை அன்றாடம் சாப்பிடுவதே சிறந்தது. போலியான மற்றும் தவறான விளம்பரங்களைக் கண்டு ஏமாறக்கூடாது.
இக்கட்டுரையானது முதலில் கல்கி இதழில் 11 மே 2024ல் வெளியானது.
Add new comment