Skip to main content

குப்பையில் இருந்து மின்சாரம்: புதிய பேராபத்து

உலகின் பல  நாடுகளிலும் துரத்தி அடிக்கப்பட்ட எரிஉலைகள் இந்தியாவில் தலை தூக்குகின்றன. தமிழ்நாட்டில் மற்றும் 57 எரிஉலைகலைத் தொடங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இவையெல்லாம் நம் ஊருக்கு வருவதற்கு முன் நாம் அறியவேண்டியவை என்ன? மக்கள் எதிர்கொள்ளும் பேராபத்துக்கள் என்ன?

டெல்லியில், ஓக்லா பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமி, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறச் சென்றால். அங்கு அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவளது நுரையீரலின் நிலையைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பல வருடங்களாக புகை பிடித்துவரும் ஒருவரின் நுரையீரலைப் போன்று அந்த நுரையீரல் இருந்ததாம். டெல்லி ஓக்லா பகுதியில் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அருகே வாழும் பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் பல உடல்நலப் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.

தமிழ்நாட்டில் இதுபோன்ற 57 எரிஉலைகள் தொடங்குவதற்கு அரசு முடிவுசெய்துள்ளது. அதில் பாதி தொடங்கும் நிலையில் உள்ளன. ஏற்கனவே வடசென்னையில் மணலி, கொடுங்கையூரில் மக்களின் வசிப்பிடத்திற்கு மிக அருகில், குப்பைகளை எரித்து அதன் சாம்பலில் நடைபாதை கற்கள் தயாரிக்கும் இரண்டு ஏரிஉலைகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. இந்த இரண்டு ஏரிஉலைகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு உடல்நலம், சூழலியல் சார்ந்த பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் தான் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலைகளை கூடுதலாகத் தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.

வெளியேறும் ஆபத்து

பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பது சட்டப்படி குற்றம் என்கிறது பிளாஸ்டிக் திடக்கழிவு மேலாண்மை விதிகள். பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்கும் போது அதிலிருந்து வெளியேறும் நச்சு அமிலங்கள் சுற்றுசூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக டையாக்சின், ஃபியூரான் போன்ற மாசுபடுத்திகள், மனிதர்களிடையே சக்திவாய்ந்த புற்று நோய்க்கான காரணிகளாக இருக்கின்றன.

எரிஉலைகளின் வேலை என்ன? இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், பல இடங்களில் தரம் பிரிக்காமல், கொடுக்கப்படும் திடக்கழிவை டன் கணக்கில் சேகரித்து, எரிஉலைகளில் எரித்து சாம்பலாக்குவதுதான். இதன் காரணமாக பிளாஸ்டிக் உற்பத்தியைத் தடுக்காமல் தொடர்ந்து நடைமுறைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும். மேலும் மாசுக்கட்டுப்பாட்டு கருவிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பே விதிகள் போன்றவற்றைப் பொருட்படுத்தாமல், மின்சாரம் தயாரிக்கின்றோம் என்கிற பெயரில் நச்சு வாயுக்கள் சுற்றுச்சூழலில் வெளியேற்றப்படும்.

உண்மை நிலை

மக்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் சீரழிவைப் போன்ற முக்கியப் பிரச்சனைகள் இந்த எரிஉலைகளால் ஏற்படுகின்றன. இதைத் தீவிரமாக ஆதரிக்கும் தனியார் எரிஉலை நிறுவனங்கள், நகராட்சி அமைப்புகள் என்ன சொல்கின்றன? குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கிறோம்; எரிபொருள் தயாரிக்கிறோம்; அதன் சாம்பலை வைத்து கட்டுமானப் பொருள்கள் தயாரிக்கின்றோம்; நச்சு காற்றை சுத்திகரித்து வெளியேற்றுகிறோம் என்று கூறும். கேட்க நன்றாக இருந்தாலும், களத்தில் செயல்பாடுகளோ நேர்மாறாக இருக்கின்றன.

தொண்ணுறுகளில் மேலைநாடுகள் குப்பையை எரிக்கும் எரிஉலைகளை மிகத்தீவிரமாக முன்னெடுத்துச் சென்றனர். ஆனால் இன்று, ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் எரிஉலைகளை மூடிவிட்டன. இதற்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியக் காரணங்கள் சமூக பொருளாதாரமும் சூழலியல் சிக்கல்களுமே. இன்று இந்த நாடுகள் போலியான தீர்வுகளில் இருந்து மீண்டு சரியான குப்பை மேலாண்மை உத்திகளைச் செயல்படுத்தி வருகின்றனர்.

பெரும் பிரச்சனைகள்

உலகில் இருக்கும் பல மின்சாரம் தயாரிக்கும் முறைகளில் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த நடைமுறையில் தயாரிக்கப்படுவது, குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரமே. இது, வழக்கத்தைவிட செலவு மிகுந்த மின் தயாரிப்பு முறை. இதிலிருந்து கிடைக்கும் மின்சாரமோ மிகக்குறைந்த அளவுதான். அதுமட்டுமல்லாமல், குப்பையை எரிக்கும் நடைமுறை பலமடங்கு நச்சுக்களை வெளியேற்றக்கூடியது. உதாரணமாக, ஓர் அனல் மின்நிலையத்தில் இருந்து வரும் டையாக்சின்களைவிட 28 மடங்கு அதிக டையாக்சின், குப்பையை எரிக்கும் எரிஉலைகளில் இருந்து வெளியேறுகிறது. இது அங்கு வசிக்கும் மக்களை மட்டுமே பாதிக்கும் என்று நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக, மணலியில் இருக்கும் எரிஉலையில் இருந்து வெளிவரும் கார்பன் டைக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு, பார்டிக்குலேட் மேட்டர் எனப்படும் நுண்துகள்கள் போன்ற மாசுபடுத்திகள் காலநிலை மாற்றத்திற்குப் பெரும் காரணங்களாக இருக்கின்றன. இதிலிருந்து வெளிவரும் டையாக்சின், ஃபியூரான்கள் காற்றில் மட்டுமல்லாமல், நீர் நிலைகளிலும் கலக்கும். மணலி எரிஉலையின் பக்கத்தில் சென்னை மக்கள் நீராதாரமான புழல் ஏரி இருப்பதை மறந்துவிடக் கூடாது.

எரிஉலைகளில் குப்பை எரிக்கப்பட்ட உடன் அது உண்மை அளவிலிருந்து 30 சதவீத சாம்பலாக மாறிவிடுகிறது. இந்த சாம்பல், நச்சு வாயுக்களின் டையாக்சின், ஈயம், காட்மியம், பாதரசம், நுண்துகள்கள் இருக்கின்றன. எஞ்சும் சாம்பல், அபாயகரமான குப்பையாக மாறிவிடுகிறது. இதை மீண்டும் குப்பை மேடுகளில் போட்டாலும் சரி, கட்டுமானத்திற்குப் பயன்படுத்தினாலும் சரி நச்சுத்தன்மையை உமிழ்ந்து கொண்டே தான் இருக்கும். உலகில் அதிக டையாக்சின், ஃபியூரான் உமிழும் ஆதாரங்களில் குப்பை எரிஉலைகள் முன்னிலையில் உள்ளன.

பிரச்சனையும் தீர்வும்

பொதுவாக எரிஉலைகள் குப்பையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பிளாஸ்டிக் குப்பையை. இப்படி இருக்கும் நிலையில் தமிழகம் உட்பட எந்த மாநிலமும் குப்பையை எரிக்கும் எரிஉலைகளை நிறுவினால், அது பிளாஸ்டிக் உற்பத்தி, பயன்பாட்டை குறைக்காது. குப்பை மேலாண்மையை மேம்படுத்துவதற்கு பதிலாக, அவற்றின் உற்பத்தி, பயன்பாட்டை ஆதரிப்பதாகவே மாறும்.

எரிஉலைகள் இந்தியாவிற்கு உகந்தவை அல்ல. தரம் பிரிக்காமல் எல்லாக் குப்பையையும் எரிப்பது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது, மக்கள் உடல்நலத்தைச் சீர்குலைப்பது, ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் முறைசாரா தூய்மைப் பணியாளர்களின் வேலைவாய்பைப் பறிப்பது எனப் பல கோணங்களில் யோசித்துப் பார்க்கவேண்டும். இந்த எரிஉலைகள் இவை எல்லாவற்றையும் சேர்த்தே எரித்துக்கொண்டு இருக்கின்றன. அரசு மானியங்கள் கொடுத்து, மேலும் பல சலுகைகள் கொடுத்து இந்த எரிஉலைகள் நச்சுக்களைப் பரப்புவதற்கு ஏன் வழிவகை செய்யவேண்டும்?

மாறாக, பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைத்தல், கழிவைத் தரம் பிரித்தல், மறுபயன்படு, மாற்றுப்பயன்பாடு, மறுசுழற்சி போன்ற முறைகளைச் செயல்படுத்த வேண்டும். இது பல பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதும் உறுதி.

 

இந்தக் கட்டுரை முதலில், இந்து தமிழ்த்திசை நாளிதழில், ஆகஸ்ட் 26, 2023 அன்று வெளிவந்தது. 

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and email addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.